செய்திகள்

லவ் டுடே வெற்றி: இயக்குநர் வசந்த பாலன் நிம்மதி!

15th Nov 2022 04:33 PM

ADVERTISEMENT

 

லவ் டுடே படத்துக்குக் கிடைத்த வெற்றி தனது படத்துக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாகப் பிரபல இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார். 

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்கிற படத்தை இயக்கியதுடன் அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு போன்றோரு நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. கடந்த நவம்பர் 4-ம் தேதி வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது இந்தப் படம்.

இந்நிலையில் லவ் டுடே படத்தின் வெற்றியை முன்வைத்துப் பிரபல இயக்குநர் வசந்த பாலன் ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

ADVERTISEMENT

கோவிட் தொற்றுக்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வந்து பார்க்கிறார்கள், பார்ப்பார்கள் என்கிற மாயை நிலவி வந்தது. மாயை அல்ல உண்மை என்ற நிலைமையிருந்தது.

சின்ன படங்களை மக்கள் ஓடிடியில் பார்த்துக் கொள்வார்கள் என்று உறுதியாகச் சொல்கிற பெரும்திரளும் உரையாடலும் திரையுலகம் முழுக்க நிகழ்ந்தவண்ணம் இருந்தது. 

அதை உறுதிபடுத்தும் வண்ணம் பெரிய படங்களின் வெற்றியும் சிறிய படங்களின் சரிவும் அந்தக் கணக்கிற்கு ஏற்றவாறு நிகழ்ந்தது. போன ஆண்டு வெளியான பேச்சுலர் திரைப்படத்தின் வெற்றி ஓரளவிற்கு நம்பிக்கையைத் தந்தது.

ஆனாலும் பெரிய படங்கள், பெரிய நடிகர்கள், நட்சத்திரப் பட்டாளம் என்பதே தொடர்ந்த தகவல்களாக அமைந்தது. நிலைமையை அனைவர் மனதிலும்  நிறுவியது.

இந்த நிலையில் லவ் டுடே-வின் வெற்றி புதுமுக நடிகரின் படமும் திரையரங்கில் பெரியதாக வெற்றி பெறும் என்கிற பெரும் நம்பிக்கையைப் பொதுவில் விதைத்துள்ளது.

அநீதி திரைப்படத்திற்கான பெரும் நம்பிக்கையை தூவியுள்ளது.

லவ் டுடே இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் அவர்களுக்கும் படக்குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் அடுத்ததாக அநீதி என்கிற படத்தை இயக்கியுள்ளார். தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி - துஷாரா விஜயன். வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, சுரேஷ் சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு: எட்வின் சகாய். இசை - ஜி.வி. பிரகாஷ். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளார்கள். மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் நட்பின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT