செய்திகள்

பாலா படம்: வதந்திக்கு சூர்யா மீண்டும் விளக்கம்

26th May 2022 04:14 PM

ADVERTISEMENT

 

2001-ம் வருடம் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் - நந்தா. சூர்யாவைச் சிறந்த நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டது இந்தப் படத்திலிருந்துதான். பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து சூர்யா நடித்தார். அவன் இவன் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தார். 

2016-ல் தாரை தப்பட்டை படத்தை இயக்கிய பாலா, 2018-ல் நாச்சியார் படத்தை இயக்கினார். 2020-ல் பாலா இயக்கிய வர்மா படம் ஓடிடியில் வெளியானது. 

இயக்குநர் பாலாவுடனான புதுப்பட அறிவிப்பை, கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டார் சூர்யா. என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான். அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என்று கூறினார். இப்படம் சூர்யா 41 எனத் தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது. கீர்த்தி ஷெட்டி, மமிதா போன்றோர் நடிக்கிறார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ்.

ADVERTISEMENT

இயக்குநர் பாலாவுடன் சூர்யாவுக்குக் கருத்துமோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பிலிருந்து சூர்யா வெளியேறியதாகவும் இம்மாதத் தொடக்கத்தில் தகவல் வெளியானது. இதையடுத்து வதந்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சூர்யா - பாலா படம் பற்றிய தகவலை வெளியிட்டது படத்தைத் தயாரிக்கும் 2டி நிறுவனம். கன்னியாகுமரியில் 34 நாள்களுக்கு முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சூர்யா 41 படம் அடுத்தக்கட்டத்துக்குத் தயாராக உள்ளது. செட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் கோவாவில் 15 நாள்களுக்குப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சூர்யா - பாலா மோதல் என மீண்டும் செய்தி பரவியது. இருவரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாது, இனிமேல் படம் வெளியாவது சந்தேகம் என்றெல்லாம் வெளியான வதந்திகளுக்குச் சூசகமாகப் பதில் அளித்துள்ளார் சூர்யா. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, (பாலா படத்தின்) படப்பிடிப்புக்கு மீண்டும் செல்ல ஆவலாக உள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சூர்யா - பாலா படத்தின் படப்பிடிப்பில் எவ்விதச் சிக்கலும் இல்லை என சூர்யா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT