செய்திகள்

த்ரிஷா பிறந்த நாள்: கோலிவுட்டை ஜெயித்த தமிழ்ப் பெண்!

4th May 2022 11:26 AM | எழில்

ADVERTISEMENT

 

கோலிவுட்டில் ஒரு தமிழ்ப் பெண் முன்னணி நடிகையாக இருப்பது உண்மையிலேயே அரிதான விஷயம்.

மும்பை, ஆந்திரம் மற்றும் கேரளத்தில் இருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள். தமிழ் இயக்குநர்களும் தமிழ்ப் பெண்களை விடவும் வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அது என்னவோ அப்படியொரு விநோத நடைமுறை தமிழ்த் திரையுலகில் பல ஆண்டு காலமாக நிலவி வருகிறது. தமிழ் ரசிகர்களும் எந்தப் பேதமும் பார்க்கமால் இதர மொழிக் கதாநாயகிகளைக் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தச் சூழலை மாற்றிக் காட்டியவர், த்ரிஷா. இன்று அவருடைய பிறந்த நாள். ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் த்ரிஷாவுக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.

ADVERTISEMENT

ஒரு தமிழ்ப் பெண்ணாக கோலிவுட்டில் த்ரிஷா ஜெயித்த கதையைப் பார்க்கலாம்.

மிஸ் சென்னை

சென்னையில் பிறந்தவர் த்ரிஷா. சர்ச் பார்க் பள்ளியில் படித்தவர். எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டப் படிப்பு.

1999-ல் முதலில் மிஸ் சேலம் பட்டத்தை வென்ற த்ரிஷா, அதே வருடத்தில் மிஸ் சென்னை பட்டத்தையும் வென்று கவனம் ஈர்த்தார். உடனே, ஊடகங்களில் த்ரிஷாவின் புகைப்படங்களும் பேட்டிகளும் வெளியாகின. அட்டைப் படங்களிலும் த்ரிஷாவின் புகைப்படம் மின்னியது. விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் தயக்கம் காட்டியவர், நல்ல வாய்ப்புகள் கதவைத் தட்டியபோது மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.

லேசா லேசா

1999-ல் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் நடித்தார் த்ரிஷா. கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை முதலில் வழங்கியவர் ப்ரியதர்ஷன். லேசா லேசா படத்துக்காக. இந்தப் படம் வெளிவரும் முன்பு த்ரிஷா நடிப்பில் மெளனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய படங்கள் வெளிவந்தன. முதல் வாய்ப்பை லேசா லேசா வழங்கினாலும் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே (2002) தான் த்ரிஷா, கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் படம்.

அடுத்தடுத்து ஹிட்கள்

2003-ல் த்ரிஷா நடிப்பில் 5 படங்கள் வெளிவந்தன. இதில் சூப்பர் ஹிட் ஆனது சாமி மட்டும்தான். தொடர்ந்து படங்கள் தோல்வியைத் தழுவியதால் சினிமாவில் நடிக்க வந்தது தவறான முடிவோ என்று எண்ணியிருந்த வேளையில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படம் த்ரிஷாவுக்குப் பெரிய திருப்புமுனையாக விளங்கியது. கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா பாடல், மெகா ஹிட் ஆகி படத்தின் வெற்றிக்குப் பெரிதாக உதவியது. முதல் வெற்றியை ருசித்த த்ரிஷாவுக்கு அடுத்த வருடமே அதை விடவும் பெரிய வெற்றி ஒன்று கிடைத்தது.

தரணி இயக்கத்தில் விஜய் நடித்த கில்லி.

வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது த்ரிஷாவுக்கு. படம் முழுக்க ஓடவேண்டும், சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என அதிக உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. கில்லியில் விஜய்க்கு அற்புதமான ஜோடியாக அமைந்தார் த்ரிஷா. சாமி படத்தில் எப்படி கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா-வோ அதேபோல கில்லியில் அப்படிப் போடு பாடல் அமைந்தது.

அடுத்தடுத்த வெற்றிகளால் ஒரே வருடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் த்ரிஷா. சம்பளம், ரசிகர்கள் என எல்லாமே ஏறுமுகமாக இருந்த நேரம் அது.

மணி ரத்னம் அழைத்து ஆய்த எழுத்து வாய்ப்பை அளித்தார். சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, சொந்தக் குரலில் பேசினார்.

கில்லி வெற்றிக்குப் பிறகு அடுத்த நான்கு வருடங்களில் மூன்று படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள் விஜய்யும் த்ரிஷாவும். 2005-ல் திருப்பாச்சி, 2006-ல் ஆதி, 2008-ல் குருவி. பேரரசு இயக்கிய திருப்பாச்சி சூப்பர் ஹிட் ஆனது.

தொடர் வெற்றிகள்

கில்லிக்குப் பிறகு திருப்பாச்சி, ஆறு, உனக்கும் எனக்கும் என இரு வருடங்களில் மூன்று ஹிட் படங்களில் நடித்தார் த்ரிஷா. தெலுங்கிலும் தொடர்ச்சியாக வெற்றிகள் பெற்றதால் இரு பக்கமும் மாறி மாறி நடித்து வந்தார்.

2006-க்குப் பிறகு தமிழில் த்ரிஷாவுக்குத் தொய்வு ஏற்பட்டது. பல படங்கள் தோல்வியடைந்தன. 2008-ல் வெளியான அபியும் நானும் படம் அப்பா - மகள் உறவை அழகாக வெளிப்படுத்தியது. த்ரிஷாவின் நிதானமான நடிப்புக்குப் பாராட்டுகள் கிடைத்தன.

டோலிவுட்டிலும் அசத்தல்

ஆரம்பக் காலக்கட்டத்திலேயே த்ரிஷாவுக்குத் தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வந்தன. பிரபாஸுடன் இணைந்து நடித்த வர்ஷம் த்ரிஷாவின் முதல் தெலுங்கு வெற்றிப் படமானது. இதற்காக பிலிம்பேர் விருதும் பெற்றார்.

அடுத்த வருடமே, Nuvvostanante Nenoddantana என்கிற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். த்ரிஷாவுக்காக எடுக்கப்பட்ட படம் போல அவருடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியது. தெலுங்கில் பிரபுதேவா இயக்கிய இதே படம் தமிழில் உனக்கும் எனக்கும் என்கிற பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது. நந்தி மற்றும் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார் த்ரிஷா.

2005-ல் இன்னொரு சூப்பர் ஹிட் தெலுங்குப் படத்தில் நடித்தார் த்ரிஷா. அத்தடு. அதிகம் வசூலித்த மகேஷ் பாபுவின் திரைப்படங்களில் அத்தடுவுக்கும் இடமுண்டு. இதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏராளமான வாய்ப்புகள் த்ரிஷாவைத் தேடி வந்தன.

பிரபுதேவா அடுத்ததாக இயக்கிய தெலுங்குப் படம் பெளர்ணமி. த்ரிஷாவின் நடிப்பையும் அழகையும் சிறப்பாக வெளிப்படுத்திய மற்றொரு தெலுங்குப் படம்.

2007-ல் வெங்கடேஷுடன் இணைந்து முதல்முறையாக Aadavari Matalaku Arthale Verule என்கிற படத்தில் நடித்தார் த்ரிஷா. செல்வராகவன் இயக்கிய இந்தத் தெலுங்குப் படம் வெற்றி பெற்றதால் தமிழில் யாரடி நீ மோகினி என்கிற பெயரில் உருவாக்கப்பட்டது.

நிறைவேறிய கனவுகள்

2010-ல் ஜெஸ்ஸியாக த்ரிஷா அசத்திய படம் - விண்ணைத் தாண்டி வருவாயா. காதலர்களுக்கிடையே நிலவும் ஊடல் கூடல்களை ரசிகர்கள் விரும்பும் விதத்தில் படமாக்கியிருந்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு த்ரிஷாவுக்குத் தமிழில் ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்தது.

கமல், ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்கிற த்ரிஷாவின் கனவின் ஒரு பகுதி 2010-ல் நிறைவேறியது. மன்மதன் அன்பு படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். படம் வெற்றிபெறாவிட்டாலும் ஆசை நிறைவேறிய தருணம் அது. பிறகு கமலுடன் இணைந்து தூங்காவனம் படத்திலும் நடித்தார் த்ரிஷா. இதேபோல சிறிய வேடம் என்றாலும் ரஜினியுடன் இணைந்து பேட்ட படத்தில் நடித்தார் த்ரிஷா.

2010-க்குப் பிறகு த்ரிஷா ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் சற்று முதிர்ச்சியுடன் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியதாக அமைந்தன. மங்காத்தா, என்றென்றும் புன்னகை, என்னை அறிந்தால், அரண்மனை 2, கொடி என சரியான இடைவெளியில் வெற்றிப் படங்களைக் கொடுத்தார் த்ரிஷா. இதனால் பல காலமாகக் கதாநாயகியாக நடித்தவர்களின் பட்டியலில் த்ரிஷாவுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகை 18 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருவது அவ்வளவு எளிதல்ல.

சமீபகாலமாக நாயகி, மோகினி என கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து புதிய பாதையில் பயணித்து வருகிறார் த்ரிஷா. இதேபோன்று கர்ஜனை, ராங்கி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஒரு பெரிய வெற்றி கிடைத்தால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் அதிகமாக நடிப்பார் த்ரிஷா.

நின்று போன திருமணம்

2015, ஜனவரி 23 அன்று த்ரிஷாவுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திடீரென திருமணம் நின்று போனது.


96

த்ரிஷாவால் எப்படி சாமி, கில்லி படங்களை மறக்க முடியாதோ அதற்கு நிகராக அவரை மிகவும் பிரபலப்படுத்திய படம் 96. ஜானுவாக அசத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். த்ரிஷாவால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா என வியக்க வைத்தார். இந்தப் படம் வெளியான 33 நாள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பானபோது அதை எதிர்த்து ட்வீட் செய்து ஆச்சர்யப்படுத்தினார் த்ரிஷா. இந்தப் படம் எனக்கு ஏராளமான விருதுகளையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கூறினார்.

தமிழ் ரசிகர்களால் ஜானுவையும் த்ரிஷாவையும் என்றைக்கும் மறக்க முடியாது.

த்ரிஷா நடிப்பில் 2019-ல் பேட்ட, 2021-ல் பரமபதம் விளையாட்டு ஆகிய படங்கள் வெளியாகின. பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன.

திரையுலகுக்கு அறிமுகமாகி 19 ஆண்டுகளைக் கடந்து தற்போது 20-வது ஆண்டில் பயணித்து வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் த்ரிஷா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா.

Tags : trisha 96
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT