கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே பரீட்சையமானவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
குக் வித் கோமாளி சீசன் 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் புகழின் பங்களிப்பை பாராட்டினர். தற்போது புகழின் நடிப்பில் 'சபாபதி' 'என்ன சொல்ல போகிறாய்', 'வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
தற்போது 'காசேதான் கடவுளடா', 'யானை', 'ஏஜென்ட் கண்ணாயிரம்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிருக்கின்றன. இந்த நிலையில் புகழ் தற்போது மிஸ்டர்.ஜு கீப்பர் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று (மார்ச் 20) முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தை மாதவன் நடித்த 'என்னவளே', 'ஜூனியர் சீனியர்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜெ.சுரேஷ் இயக்குகிறார். 'டிக்கிலோனா' படத்தில் நடித்த ஷிரின் இந்தப் படத்தில் புகழுக்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.