இயக்குநர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் சூரி நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | தலைவரே ! கல்யாணியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா: கலாய்த்த பிரேம்ஜி
இந்த நிலையில் நேற்று (மார்ச் 20) வாடிவாசல் படத்தின் ஒத்திகை பூஜையுடன் துவங்கியது. அப்போது தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்தப் படத்தில் நடிகர் சூரியும் நடிக்கிறாராம்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சூர்யா தற்போது பாலா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படப்பிடிப்பு சில நாட்களில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு பிறகு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என்று தெரிகிறது.