செய்திகள்

’நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்கிறேன்..’: முதல்வருக்கு சூர்யா நன்றி

29th Jun 2022 09:22 PM

ADVERTISEMENT

 

சினிமாவில் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர முயற்சி செய்வதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். 

ஆஸ்கர் விருது குழுவில் கலை மற்றும் அறிவியல் பிரிவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெறுகிறார். 

அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!" என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடெமி குழுவிற்கு நன்றி தெரிவித்ததுடன் உறுப்பினராக இணைய ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்” என பதிலளித்துள்ளார்.

இதையும் படிக்க | 'சமூக அக்கறை கொண்ட....' நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் சூர்யாவுடன் ஹிந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் என்பவருக்கும், ஆவணப் படங்கள் பிரிவில் சுஷ்மித் கோஷ் மற்றும் ரிண்டு தாமஸ் ஆகிய இருவருக்கும் எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT