செய்திகள்

பிறந்த நாள் ஸ்பெஷல்: நாளைய தீர்ப்பு முதல் பீஸ்ட் வரை கோடி உள்ளங்களை விஜய் வென்றது எப்படி?

எழில்

90களில் தமிழ்த் திரையுலகில் உற்சாகமான கதாநாயகனாக ரசிகர்களுக்குத் தென்பட்டார் விஜய். அப்போது இளைஞர்கள் மத்தியில் விஜய் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. விஜய் படத்துக்குச் சென்றால் ஜாலியாக ஆடிப்பாடி, சந்தோஷமாக இரண்டு மணி நேரம் எல்லாக் கவலைகளையும் மறந்துவிட்டு வரலாம் என்கிற எண்ணம் ரசிகர்களிடம் இருந்தது. 

1992-ல் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்க்கு அது நல்ல தொடக்கமாக அமையவில்லை. இதனால் அடுத்த படத்திலேயே விஜய்காந்தைத் துணைக்கு அழைத்தார் தந்தை எஸ்.ஏ.சி. கதாநாயகன் விஜய் தான் என்றாலும் விஜய்காந்த் ஏற்று நடித்த செந்தூர பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தின் பெயர், படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது. யுவராணியுடனான காதல் காட்சிகள், விஜய்காந்தின் ஆக்‌ஷன் காட்சிகள், பாடல்கள் எனப் பல விஷயங்கள் சரியாக அமைந்ததால் செந்தூரபாண்டி வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து வெளியான ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும் உற்சாகமான நடிப்பில் விஜய் ஒரு குறையும் வைக்கவில்லை இதனால் இளைஞர் பட்டாளத்தை சீக்கிரமே தனது ரசிகர்களாக மாற்றினார். திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் போடுவதற்கு உகந்த பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் அவருடைய படங்களுக்கு இளைஞர்களைக் கூட்டம் கூட்டமாக வரவழைத்தன. ஒரு பெரிய வெற்றிக்கு முன்பே தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார் விஜய். 

ஆனாலும் ஒரு மகத்தான வெற்றி விஜய்யை நெருங்காமலேயே இருந்தது. வழக்கமான விஜய் படமாக அல்லாமல் விக்ரமன் எடுத்த ஒரு குடும்பப்பாங்கான காதல் படம்தான் விஜய்யின் திரை வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. இதை விட இன்னொரு பெரிய வெற்றி கிடைக்காது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடிய படமாக விஜய்க்கு அமைந்தது பூவே உனக்காக. 

*

சொல்லாத காதல். அதேசமயம் தான் விரும்பிய காதலியின் நலனுக்காக, காதலியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண்பதற்காக, தன்னையே வருத்திக்கொள்ளும் கதாநாயகன் விஜய். பிரிந்த இரு குடும்பங்களைச் சேர்த்துவைத்துக் கடைசியில் குட் பை சொல்லி, காதலை இன்னும் தோளில் சுமந்தபடி, காதலியிடமிருந்து விடைபெற்றுச் செல்லும் கதாபாத்திரம். கடைசிக் காட்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் தவித்தார்கள். நீங்க... ஒருத்தியை லவ் பண்ணீங்களா... என்று அந்தக் காட்சியில் விஜய்யிடம் காதலி கேட்கும்போது ரசிகர்களின் ஆதங்கத்துக்கு அளவே இல்லை. ஆனால், கடைசிவரை காதலுக்காகத் தியாகம் செய்யும் விஜய் கதாபாத்திரத்தின் புனிதம் கெடாததுதான் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தப் படத்துக்காக விஜய்யை அழைத்தபோது அவருடைய ஒரு படத்தையும் தான் பார்த்ததில்லை என்கிறார் விக்ரமன். டிவியில் பாடல்களைப் பார்த்ததுண்டு, அதில் அவருடைய துள்ளல் என்னை ஈர்த்தது. அதனால் நடிக்க வைத்தேன் என்கிறார். விஜய்யுடன் ஜோடியாக நடிக்க இன்று எல்லா நடிகைகளும் போட்டி போடலாம். ஆனால் விஜய் படங்களில் கவர்ச்சியான காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பதால் பூவே உனக்காக படத்தில் நடிக்க பல நடிகைகள் மறுத்துள்ளார்கள். இதையும் பேட்டிகளில் கூறியுள்ளார் விக்ரமன். கடைசியில் சங்கீதா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

பூவே உனக்காக படப்பிடிப்பில் முதல் நாள், நீண்ட வசனம் உள்ள ஒரு காட்சி இருந்தது. ஆனால் அக்காட்சி படத்தில் இடம்பெறவில்லை. பூதபாண்டி என்கிற கோயிலில் அக்காட்சியை எடுத்தேன். நீளமான காட்சிக்கான வசனத்தை நான் அவரிடம் சொன்னேன். கண்ணை மூடிக்கொண்டு வசனங்களைக் கேட்டார். ஓகே சார், டேக் போலாம் என்றார். என்னை நக்கல் பண்ணுகிறாரா என்றுதான் நான் நினைத்தேன். அந்த வசனத்தை ஒரு தடவை தான் அவருக்குச் சொன்னேன். டேக் போலாம் என்கிறாரே... சரி, பார்த்துருவோமே என்று பார்த்தால் அசத்திவிட்டார். அந்த வசனங்களில் ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்கள் இருந்தன. அனைத்தையும் அப்படியே சொன்னார். நான் வியந்துவிட்டேன். பெரிய ஆளாக இருப்பார் போலிருக்கிறது, எங்கேயோ போகப்போகிறார் என எண்ணினேன். அன்றைக்கு முழுப் படப்பிடிப்பிலும் அவர் நடித்த எந்தக் காட்சியும் இரண்டாவது டேக்குக்குச் செல்லவில்லை. விஜய்யைப் பொறுத்தவரை 2-வது டேக் கிடையாது. நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதைவிட சிறப்பாக நடித்துக் கொடுப்பார். சென்னைக்கு வந்து எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் போன் செய்தேன். நீங்கள் வேண்டுமானால் லட்சுமி மூவி மேக்கர்ஸிடம் இதுபற்றி கேட்டுப் பார்க்கலாம். விஜய் என்கிற எஸ்.ஏ.சி-யின் பையனை உடனடியாக ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். பெரிய நட்சத்திரமாக வரப்போகிறார் என்று அனைவரிடம் சொல்லி. விஜய்க்கு ஒரு பிஆர்ஓ போல இருந்தேன். சொன்னதுபோலவே பல வெற்றிப் படங்களில் நடித்து இன்று சூப்பர் ஸ்டாராக விஜய் உள்ளார் என்று டூரிங் டாக்கீஸ் என்கிற யூடியூப் தளத்தில் இயக்குநர் விக்ரமன் அளித்த பேட்டியில் விஜய்யைப் பற்றி புகழ்ந்து கூறினார்.

1996-ல் பூவே உனக்காக வெளிவந்தது. காதலுக்கு மரியாதை 1997-ல் வெளிவந்தது. இந்த ஒரு வருட இடைவெளியில் வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர் எனப் பல படங்கள் விஜய் நடிப்பில் வெளிவந்தன. இரு வருடங்களில் விஜய் கதாநாயகனாக நடித்த 10 படங்கள் வெளிவந்திருந்தன. இன்றைக்கெல்லாம் எந்த ஓர் இளம் நடிகராவது இரண்டு வருடங்களில் இத்தனை படங்களில் நடித்துவிட முடியுமா? வெற்றியோ தோல்வியோ இடைவெளி இல்லாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் விஜய். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என இரண்டு பெரிய வெற்றிப் படங்களுக்குப் பிறகுதான் படங்களைத் தேர்வு செய்வதில் மேலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதன்பிறகு விஜய் படங்களின் வரத்து குறைந்துவிட்டது. சில வருடங்களில் மட்டும் அதிகபட்சமாக மூன்று, நான்கு படங்கள் வெளிவந்தன. அதுவும் 2005 வரைக்கும் தான். அதன்பிறகு அதிகபட்சமாக விஜய் நடிப்பில் வருடத்துக்கு இரு படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன. வெற்றிகள் கிடைக்க கிடைக்க படங்களின் தேர்வில் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் இருந்து படப்பிடிப்பு நீண்ட காலம் எடுக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார் விஜய்.

இன்னும் காதலுக்கு மரியாதை பற்றி நாம் பேசவில்லையே. காதல் படங்களுக்கு எப்போது ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும். அற்புதமான ஒரு காதல் படம் கிடைத்துவிட்டால் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அப்படியொரு படமாக அமைந்தது காதலுக்கு மரியாதை. இந்தப் படம் முதலில் தமிழில் தான் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால் சிவாஜியின் கால்ஷீட் கிடைத்ததால் விஜய்யை அழைத்துக்கொண்டு ஒன்ஸ்மோர் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார் எஸ்.ஏ.சி. இதனால் படத்தை முதலில் தமிழில் எடுக்காமல் மலையாளத்தில் எடுத்தார் ஃபாசில். கேரளத்தில் படம் பெரிய வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் தமிழிலும் உடனடியாக எடுக்கப்பட்டது. இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குக் கூடுதல் பலம். பூவே உனக்காக படத்துக்குப் பிறகு விஜய்க்குக் கிடைத்த இன்னொரு பெரிய வெற்றி. 

காதலிப்பவர்கள் பெற்றோர்களுக்கு மரியாதை அளித்தால் அந்தக் காதலுக்குப் பெற்றோர்களும் பதில் மரியாதை தருவார்கள் என்பதை அழகாகச் சொன்ன படம். இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையுடன் விஜய் - ஷாலினி காதல் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்டது. ஷாலினியின் குடும்பத்தை எதிர்த்து விஜய்யும் ஷாலினியும் காதலித்தாலும் பிறகு இரு குடும்பங்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பிரிந்தபோது அனுதாப அலை திரையரங்கில் ஏகத்துக்கும் அடித்தது. ஒரு த்ரில்லர் படத்தின் கிளைமாக்ஸ் போல கடைசிக்காட்சியில் ஷாலினியின் அம்மா என்ன சொல்வாரோ என்று ரசிகர்கள் பரிதவித்த அந்தத் தருணங்களை யாரால் மறக்க முடியும்?

அடுத்த மகத்தான வெற்றியை விஜய்க்கு அளித்தவர் இயக்குநர் எழில். 1999-ல் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் விஜய்க்கு அமைந்த இன்னொரு காதல் பட வெற்றி. எஸ்.ஏ. ராஜ்குமாரின் பாடல்கள் கதைக்குப் பொருத்தமாக அமைந்தன. இதையடுத்து காதல் படங்களாக நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கு எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படம் இன்னொரு அற்புதமான வெற்றியைத் தந்தது. தேவாவின் பாடல்களும் சுவாரசியமான காட்சிகளும் ஜோதிகாவும் அட்டகாசமான நடிப்பும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன்பிறகு வெளிவந்த ப்ரியமானவளே படமும் நல்ல வெற்றியை அடைய, பிறகு வந்த ஃப்ரெண்ட்ஸ் படம் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்காக இன்னொரு மகத்தான வெற்றியை விஜய்க்கு அளித்தது. 

1996-ல் ஆரம்பித்த இந்த வெற்றிப் பயணம் 2000-ம் வருடம் வரை இடைவெளி இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதனால் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆனார் விஜய். ஆனால் அடுத்த பெரிய வெற்றிக்காக 4 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தத் தருணத்தில் விஜய்யின் போக்கு மாற ஆரம்பித்தது. இன்று வரை விஜய் நடிக்கும் படங்களின் வகைமை அப்போது உருவானதுதான். 

பகவதி படம்தான் விஜய்யை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அந்தப் படம் பெரிதளவில் வெற்றியடையாவிட்டாலும் புதிய கீதை என்கிற தோல்விப் படத்துக்குப் பிறகு வெளிவந்த திருமலை, விஜய்யால் ஒரு வெற்றிகரமான ஆக்‌ஷன் படத்தில் நடித்துக்காட்ட முடியும் என்பதை நிரூபித்தது. இப்படி பகவதி, திருமலை படங்கள் விஜய்யின் பாதையை முற்றிலும் மாற்றி அமைத்தன. போதும் விதவிதமான காதல் படங்கள், இனிமேல் ஆக்‌ஷன் படங்களில் அதிகக் கவனம் செலுத்துவோம் என முடிவெடுத்து விஜய் பயணித்த காலகட்டம் அது. 

2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம். ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது. விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி, விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது. 90களில் பார்த்த விஜய் அல்ல இவர் என்கிற புதிய அடையாளத்தை அளித்தது.

கில்லியில் விஜய்க்கு அற்புதமான ஜோடியாக அமைந்தார் த்ரிஷா. இதற்குப் பிறகு அடுத்த நான்கு வருடங்களில் மூன்று படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள். 

அது வித்யாசகர் காலம். தில் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்யாசகர் பாடல்களுக்கு அதிக கிராக்கி இருந்தன. இந்தப் படத்தில் பாடல்கள் மூலம் படத்துக்கு மேலும் சுவாரசியத்தைக் கூட்டினார் வித்யாசகர். அப்படிப் போடு பாடல், படத்தை எங்கேயோ கொண்டு சென்று நிறுத்தியது. பின்னணி இசையிலும் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார் வித்யாசகர். 

ரஜினி நடித்த படையப்பா படத்தின் வசூல் சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியது கில்லி. தமிழ்ப் படங்களில் முதல்முதலாக ரூ. 50 கோடி வசூலித்ததும் கில்லி தான். 2001-ல் வெளியான ஃப்ரண்ட்ஸ் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருந்தார் விஜய். கில்லிக்கு முன்பு புதிய கீதை, உதயா என மோசமான தோல்விப் படங்களில் நடித்திருந்தார். அத்தனைக் காயங்களையும் கில்லி போக்கியது. இதன்பிறகு காதல் படங்களை கிட்டத்தட்ட அடியோடு குறைத்துக்கொண்டு ஆக்‌ஷன் படங்களில் மட்டும் விஜய் நடிப்பதற்கு கில்லியின் மாபெரும் வெற்றி முக்கியக் காரணம்.

கில்லிக்குப் பிறகு தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வந்தார் விஜய். இது நிற்காத குதிரை என்பது அனைவருக்கும் புரிந்தது. திருப்பாச்சி, சிவகாசி என விஜய்க்கான புகழை மேலும் உயர்த்தினார் இயக்குநர் பேரரசு. பிரபுதேவா இயக்கிய போக்கிரியும் விஜய்யின் வெற்றிப் பட வரிசையில் இணைந்துகொண்டது.

மில்லினிய வருடத்தைத் தொடங்கும்போது நல்ல நிலைமையில் இருந்தார் விஜய். அடுத்த 10 வருடங்களில் மேலும் மகத்தான வெற்றிகளைப் பெற்று தொடர்ந்து உச்சத்தில் தன்னை நிலைநிறுத்தினார். இது அவ்வளவு எளிதல்ல. பல கதாநாயகர்கள் ஒரு சில வெற்றிகள் மற்றும் 10 வருடப் புகழுக்குப் பிறகு ஒரேடியாகக் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் படத்தேர்வுகளில் கவனம் செலுத்தியது, புதிய இயக்குநர்களை நம்பியது எனப் பல முயற்சிகள் செய்து வெற்றியைக் கைவிடாமல் பார்த்துக்கொண்டார் விஜய். 

2011 முதல் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் வரை விஜய் அடைந்த வெற்றிகள், புகழ் மாலைகளை என்னவென்று சொல்ல? ரஜினிக்கு இணையாகத் தொடர்ந்து வெற்றிகளைத் தக்கவைத்து, ரசிகர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு உயர்த்தி, 2கே கிட்ஸ் மற்றும் 2010-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளையும்கூட தனது ரசிகர்களாக மாற்றியிருக்கிறார் விஜய். ஏ.ஆர். முருகதாஸும் அட்லியும் விஜய்யின் நம்பிக்கைக்குரிய இயக்குநர்களாக மாறியது இந்த காலகட்டத்தில்தான். 

போக்கிரிக்குப் பிறகு அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என விஜய் சிறிதுகாலம் தடுமாறியது உண்மை. இதனால் மலையாளப் படத்தின் ரீமேக்கில் நடித்தார் விஜய். காவலன் பட வெளியீட்டில் சில சிக்கல்கள் நீடித்தாலும் படம் வெளிவந்த பிறகு ரசிகர்களின் சான்றிதழைப் பெற்றது. மோகன் ராஜா இயக்கிய வேலாயுதம் விஜய்யின் இன்னொரு ஆக்‌ஷன் பட வெற்றிகளில் இணைந்துகொண்டது. ஷங்கர் இயக்கத்தில் முதல்முதலாக நடித்தார் விஜய். பெரிதளவில் சண்டைக்காட்சிகளும் இல்லை, மிரட்டும் வில்லனும் இல்லை. ஆக்‌ஷன் நட்சத்திரமாக மாறிய பிறகு விஜய் நடித்த வித்தியாசமான படம் இது. நல்ல கதை, ஷங்கரின் அழகான இயக்கம் ஆகியவற்றுக்காக விஜய்க்குத் தேவையான ஒரு வெற்றியை நண்பன் வழங்கியது. 

அடுத்ததாக துப்பாக்கியைக் களமிறக்கினார் விஜய்.

2012 தீபாவளியில் வெளியான துப்பாக்கி படம் முதல் காட்சியிலேயே அதன் வெற்றியை உறுதி செய்தது. மும்பையில் தீவிரவாதக் கும்பலை வேரோடு பிடுங்கி எறியும் ராணுவ வீரராக விஜய் நடித்திருந்தார். கில்லிக்குப் பிறகு ரசிகர்களுக்குக் கிடைத்த அட்டகாசமான ஒரு ஆக்‌ஷன் படம், ஒரு விஜய் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இன்று வரை சரியான உதாரணமாக துப்பாக்கி உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் என்கிற புதிய கூட்டணியும் சுவாரசியமான ஆக்‌ஷன் காட்சிகளும் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தன. ஹாரிஸ் ஜெயராஜின் இனிமையான பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன. விஜய்க்கு மட்டும் சரியான கதையும் சரியான இயக்குநரும் கிடைத்துவிட்டால் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்துவார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்தப் படம் இருந்தது. 

தலைவா, ஜில்லா என இரு தோல்விப் படங்களில் நடித்த விஜய்க்கு மீண்டும் உதவினார் முருகதாஸ். துப்பாக்கிக்கு அடுத்ததாகக் கத்தி. 

இரட்டை வேடங்களில் நடித்த விஜய், நல்ல பாடல்களைக் கொண்ட இன்னொரு அட்டகாமான ஆக்‌ஷன் விருந்தை ரசிகர்களுக்குப் படைத்தார். அனிருத்தின் பின்னணி இசையும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சமூக அக்கறை கொண்ட கதையை இப்படியும் எடுக்கலாம் எனப் புதுவிதமான திரைக்கதை உத்தியுடன் படத்தை உருவாக்கியிருந்தார் முருகதாஸ். 

அடுத்ததாக புலி என்கிற ஒரு எதிர்பாராத தோல்விப் படத்துக்குப் பிறகு விஜய் நடித்த படம் - தெறி. திரையுலகுக்குப் புதிதாக வந்த இயக்குநர் அட்லி, அனுபவத் தயாரிப்பாளர் தாணு என்கிற வித்தியாசமான கூட்டணியை நம்பி களமிறங்கினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. சொல்லி அடித்தார் அட்லி. 2007-ல் வெளியான அழகிய தமிழ் மகனுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களின் தலைப்பும் ஒரு வார்த்தையில் மட்டுமே உள்ளது. அதை தெறியும் பின்தொடர்ந்தது.

தெறி பட பூஜையின்போது இயக்குநர் அட்லி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஜய்யுடன் படம் பண்ணவேண்டும் என்பது என் கனவு. நான் அவருடைய ரசிகன். ஒரு விஜய் ரசிகர் படம் பண்ணினால் எப்படி இருக்குமோ அப்படி படம் இருக்கும். எம்.ஜி.ஆர், ரஜினி படத்தை எப்படி விரும்பிப் பார்ப்போமோ அப்படி படம் இருக்கும் என்றார். 

முதல் பாதியில் பாட்ஷாத்தனமான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அட்லி. கேரளாவில் அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஜோசப் குருவில்லா என்கிற பெயரில் மகளுடன் சாதுவாக வாழ்ந்துகொண்டிருக்கும் விஜய்க்கு ஒரு வலுவான பின்கதையை உருவாக்கியிருந்தார் அட்லி. மகேந்திரனின் மகனைக் கொன்று பிணத்தைப் பாலத்தின் கீழே தொங்கவிட்டு, மொட்டை ராஜேந்திரனைக் கொண்டு அதை ஒரு பில்ட் அப் காட்சியாக உருவாக்கியது, அமைச்சர் மகேந்திரனிடம் நான் தான் உங்கள் மகனைக் கொன்றேன், உங்களால் ஒன்றும் செய்யமுடியது என்று சவால் விட்டு நடையைக் கட்டுவது, பள்ளி வகுப்பில் ரெளடிகளை அடைத்து, அவர்களுக்கு நகைச்சுவையாகப் பாடம் நடத்துவது என விஜய் ரசிகர்கள் சிலிர்க்கும் விதத்தில் முதல் பாதியில் காட்சிகளை அமைத்திருந்தார் அட்லி. மீனா மகள் மட்டுமல்லாமல் விஜய்யின் மகள் திவ்யா சாஷாவும் நடிகையாக தெறியில் அறிமுகமானார். கடைசிக்காட்சியில் ஒரிரு நிமிடங்களில் தோன்றி ஒரிரு வசனங்கள் பேசுவார்.​

2016, ஏப்ரல் 14 அன்று வெளியான இந்தப் படம், முதல் ஆறு நாள்களிலேயே ரூ. 100 கோடி வசூல் கிடைத்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் தாணு. அப்போது, விஜய் படங்களில் ஆறு நாள்களில் அதிகம் வசூலித்த படம் என்கிற பெருமையையும் தெறி படம் பெற்றது. உலகளவில் விஜய் படம் ஒன்று ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது தெறி தான். சென்னையில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துச் சாதித்தது. 

துப்பாக்கிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படங்கள் எல்லாம் எப்படி இருக்க வேண்டும், எந்தளவுக்கு வசூலில் முந்தைய படங்களைத் தாண்டிச் செல்லவேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரிப் படமாக விளங்கியது தெறி.

முருகதாஸுக்குப் பிறகு விஜய்க்கு ராசியான இயக்குநராக அமைந்துள்ளார் அட்லி. தெறி படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து அட்லி இயக்கிய மெர்சல், பிகில் படங்கள் வசூலில் ஒன்றையொன்று தாண்டிச் சென்றன. அட்லி இயக்கிய மெர்சல் படம் வசூலை மட்டும் வாரிக் குவிக்காமல் சர்ச்சைகளையும் உருவாக்கியது. 

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்றங்களில் மெர்சல் படம் தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இதனால் படம் வெளியான சமயத்தில் பெரும் சர்ச்சை உருவானது. மெர்சல் விவகாரம் தொடர்பாக அமைதி காத்து வந்த விஜய், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: மெர்சல் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இத்திரைப்படத்துக்குச் சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் கலையுலகைச் சார்ந்த நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் எனக்கும் மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். மெர்சல் படத்தை வெற்றிபெறச் செய்ததற்கும் ஆதரவு கொடுத்ததற்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

விஜய் அறிக்கை வெளியான லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்கிற பெயரும் ஜீசஸ் சேவ்ஸ் என்கிற வாசகமும் இடம்பெற்றிருந்தன. ஜோசப் விஜய் என்கிற பெயரை முன்வைத்து சர்ச்சைகள் உருவான நிலையில் இந்த அறிக்கையை தன் லெட்டர்பேடியிலேயே வெளியிட்டார் விஜய்.

முருகதாஸ் இயக்கிய சர்கார், ரசிகர்களை அந்தளவுக்கு ஈர்க்கவில்லை. மீண்டும் விஜய்க்குக் கைகொடுத்தார் அட்லி. கடந்த சில வருடங்களாக பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் குறித்து அதிகமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு விஜய் தரப்பில் இருந்து பெண்கள் முன்னேற்றத்துக்கான படமாக உருவானதுதான் பிகில். மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் தாதாவாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார் விஜய். பெண்கள் சொந்தக் காலில் நின்று, சொந்தமாக முடிவெடுக்கும் சில காட்சிகள் ரசிகர்களை மிகவும் ஈர்த்தன. இதுவும் ஆக்‌ஷன் படம்தான் என்றாலும் பெண்கள் மீதான அக்கறையைச் செலுத்தியதில் விஜய்க்கு இது சற்று மாறுபட்ட படமாகவே அமைந்தது.

புதிய இயக்குநர்களுக்கு ஆதரவளிக்க விஜய் எப்போதும் விரும்புவார். அப்படித்தான் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தை இயக்கினார். பாடல்கள், கதாநாயகி இல்லாத கைதி படம் வசூலில் ரூ. 100 கோடி அளவுக்கு அள்ளியதால் லோகேஷை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்தார் விஜய். இதுவும் ஆக்‌ஷன் படம் தான் என்றாலும் முருகதாஸ், அட்லி படங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது. படம் முழுக்க ஓர் உற்சாகமான சற்றே வித்தியாசமான விஜய்யைப் பார்க்க முடிந்தது. 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் பொங்கல் சமயத்தில் வெளியானது. கிட்டத்தட்ட 140 கோடி செலவில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ரூ. 80 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக முன்பே செய்திகள் வெளியாகின. டிஜிடல் உரிமையில் அமேசான் பிரைம் மூலமாக ரூ. 36 கோடி கிடைத்தது. இந்திய அளவில் ரூ. 200 கோடி, வெளிநாடுகளில் ரூ. 40 கோடி என மாஸ்டர் படத்துக்கு உலகளவில் கிட்டத்தட்ட ரூ. 240 கோடி வசூல் கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஓடிடியில் படம் வெளியான பிறகும் தமிழ்நாட்டில் சில வாரங்களுக்குத் திரையரங்குகளில் மாஸ்டர் படம் ஓடியது. திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் மாஸ்டர் படத்துக்குக் கிடைத்த தொடர்ச்சியான வரவேற்பு குறித்து ட்வீட் செய்து வந்தார்கள். ஓடிடியில் வெளியானாலும் திரையரங்கிலும் ஒரு படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற முடியும் என்பதற்கு மாஸ்டர் படம் ஓர் உதாரணமாக இருந்தது.

தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என சமீபத்திய விஜய் படம் ஒவ்வொன்றும் முந்தைய படங்களின் வசூல்களைத் தாண்டியுள்ளன. கரோனா அச்சுறுத்தல், இந்தியாவில் 50% ரசிகர்கள் அனுமதி, சில வெளிநாடுகளில் நிலவிய கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் போன்ற பல தடைகள் இருந்தும் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக வசூலித்து சாதித்தது மாஸ்டர் படம். 

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாளில் மட்டும் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. அதன்பிறகு திரையரங்குகளிலும் பிறகு ஓடிடியிலும் படம் பார்த்தவர்கள் பீஸ்டுக்கு ஆதரவான விமர்சனங்களையே முன்வைத்தார்கள். படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய். வழக்கமான விஜய் படமாக இருந்தாலும் சில குறைகள் இல்லாமல் இருந்திருந்தால் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் படமாக பீஸ்ட் இருந்திருக்கும். 

பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம்.

விஜய் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலகட்டம் இது. திறமைசாலிகள் ஜெயிக்கும்போது அது அடுத்த தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அப்படியொரு முன்னுதாரணம் விஜய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT