செய்திகள்

பிறந்த நாள் ஸ்பெஷல்: யுவராணி முதல் ராஷ்மிகா வரை - விஜய்யின் கதாநாயகிகள்!

எழில்

நடிகர் விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். 

விஜய் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவருக்கு ஜோடியாக நடித்த நடிகைகளும் பரபரப்பாகப் பேசப்படுவார்கள். 90களில் யுவராணி, சங்கவி 2000-ம் ஆண்டுக்குப் பிறகு சிம்ரன், அசின், த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா என விஜய்யின் வெற்றிகளில் நடிகைகளுக்கும் பங்கு உண்டு.

விஜய்யுடன் ஜோடி சேர்ந்த நடித்த நடிகைகளைக் கொண்டு ஒரு புள்ளிவிவரம் தயாரித்தபோது அது பல சுவாரசியங்களைத் தந்தது. நீங்களும் அந்த சுவாரசியங்களில் மூழ்குங்கள். 

யுவராணி

விஜய்யின் 2-வது படமான செந்தூரப் பாண்டியில் ஜோடியாக நடித்தவர் யுவராணி. விஜய்க்கு மட்டுமல்ல யுவராணிக்கும் இந்தப் படம் தான் ஓர் அடையாளத்தையும் முதல் வெற்றியையும் அளித்தது. விஜய்யுடன் ஜாலியாக ஆட்டம் போட்டு காதல் காட்சிகளில் ஈடுகொடுத்து நடித்து ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தார். ஆச்சர்யமாக, விஜய்யுடன் இந்த படத்தில் மட்டுமே ஜோடியாக நடித்துள்ளார் யுவராணி. பல வருடங்கள் கழித்து 2010-ல் சுறா படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். 

சங்கவி

செந்தூரப்பாண்டி படத்துக்கு அடுத்ததாக விஜய் நடித்த ரசிகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சங்கவி. இந்த ஜோடிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகமாகக் கிடைக்க விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை என மேலும் இரு படங்களில் இந்த ஜோடியைக் காண முடிந்தது. விஜய்யின் ஆரம்பகால கதாநாயகி என்று விஜய் ரசிகர்களுக்கு சங்கவி மீது ஒரு ஈர்ப்பு உண்டு.

ஸ்வாதி

90களில் சங்கவிக்கு இணையாக விஜய்யுடன் அதிகப் படங்களில் நடித்தவர். தேவா, வசந்த வாசல், செல்வா என மூன்று படங்களில் நடித்தாலும் மூன்றுமே பெரிய வெற்றியை அடையவில்லை. இதனால் விஜய் ரசிகர்களிடம் ஸ்வாதியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.

சிம்ரன்

விஜய்க்கு ஜோடியாக நான்கு படங்களில் (மொத்தமாக ஐந்து படங்கள்) இரு நடிகைகள் நடித்துள்ளார்கள். சிம்ரன் & த்ரிஷா.

1997-ல் ஒன்ஸ் மோர் படத்தில் விஜய்யுடன் முதல்முதலாக ஜோடி சேர்ந்தார் சிம்ரன். இதன்பிறகு துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என இரு சூப்பர் ஹிட் படங்களில் இணைந்து நடித்தார். யூத் படத்தில் ஆள்தோட்ட பூபதி நானடா என்கிற சூப்பர் ஹிட் பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து நடனமாடினார். கடைசியாக 2004-ல் உதயா படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். விஜய்க்கு இணையாக நடனமாடிய நடிகைகளில் சிம்ரனும் ஒருவர். இதனால் இவர்கள் இணைந்து நடனமாடிய பல பாடல்கள் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

ஷாலினி

தமிழில் கதாநாயகியாக 5 படங்களில் மட்டுமே நடித்த ஷாலினி, இரு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். காதலுக்கு மரியாதையில் விஜய் - ஷாலினி ஜோடி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கண்ணுக்குள் நிலவு எதிர்பாராத விதமாகத் தோல்வி அடைந்தது.

ரம்பா

நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா என மூன்று படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். நினைத்தேன் வந்தாய் படத்தைத் தவிர மற்ற இரு படங்களும் தோல்வியடைந்தன.

ஜோதிகா

சிம்ரன் போல ஜோதிகா, விஜய்யுடன் இணைந்து நிறைய படங்களில் நடிக்கவில்லை.

விஜய் - ஜோதிகா ஜோடியின் முதல் படமான குஷி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதன்பிறகு இருவரும் திருமலை படத்தில் நடித்தார்கள். அதுவும் ஹிட் ஆனது. அதிசயமாக இந்த ஜோடி இரு படங்களில் மட்டுமே ஒன்றாக நடித்துள்ளார்கள்.

த்ரிஷா

சிம்ரன் போல த்ரிஷாவும் விஜய்யின் வெற்றிகரமான கதாநாயகிகளில் ஒருவர்.

2004-ல் வெளியான கில்லியில் விஜய்க்கு அற்புதமான ஜோடியாக அமைந்தார் த்ரிஷா. கில்லியில் வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது த்ரிஷாவுக்கு. படம் முழுக்க ஓடவேண்டும், சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என அதிக உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. சாமி படத்தில் எப்படி கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா-வோ அதேபோல கில்லியில் அப்படிப் போடு பாடல் அமைந்தது.

கில்லி வெற்றிக்குப் பிறகு அடுத்த நான்கு வருடங்களில் மூன்று படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள் விஜய்யும் த்ரிஷாவும். 2005-ல் திருப்பாச்சி, 2006-ல் ஆதி, 2008-ல் குருவி. பேரரசு இயக்கிய திருப்பாச்சி சூப்பர் ஹிட் ஆனது.

அசின்

த்ரிஷா போல அசினும் விஜய்க்கு ராசியான ஜோடியாக அமைந்தார். 2005-ல் சிவகாசி, 2007-ல் போக்கிரி, 2011-ல் காவலன் என இந்த ஜோடி நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகின. விஜய்யுடன் 3 படங்களில் நடித்து அனைத்திலும் வெற்றி கண்டவர் அசின். 

ஜெனிலியா

சச்சின், வேலாயுதம் என இரு படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் ஜெனிலியா. இரண்டு படமும் வெற்றியடைந்துள்ளது.

நயன்தாரா

2009-ல் விஜய் - நயன்தாரா இருவரும் முதல்முதலாக வில்லு படத்துக்காக ஜோடி சேர்ந்தார்கள். விஜய்யின் சமீபத்திய படமான பிகிலுவிலும் இந்த ஜோடி தொடர்ந்துள்ளது. இந்த 11 வருடங்களில் இந்த ஜோடி இரு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்கள் என்பது ஆச்சர்யம்தான். மேலும், சிவகாசியில் ஒரு பாடலுக்கு நடனமாடினார் நயன்தாரா.

காஜல் அகர்வால்

2010-க்குப் பிறகு விஜய்யுடன் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் காஜல் அகர்வாலும் ஒருவர். 2012-ல் இருவரும் முதல்முதலாக இணைந்த துப்பாக்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட். விஜய்யின் அடுத்த படமான ஜில்லாவில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தார்கள். மெர்சல் படத்தில் மீண்டும் இந்த ஜோடி வெற்றி பெற்றது.

சமந்தா

காஜல் அகர்வால் போல சமந்தாவும் விஜய்யுடன் இணைந்து மூன்று படங்களில் நடித்துள்ளார். மூன்றுமே சூப்பர் டூப்பர் ஹிட். 2014-ல் கத்தி, 2016-ல் தெறி, 2-017- மெர்சல். த்ரிஷா, அசின், காஜல் அகர்வால் வரிசையில் விஜய்க்கு ராசியான நடிகை என்று கூட சமந்தாவைக் கூறலாம். விஜய்யுடன் நடித்த படங்களில் அசின் போல சமந்தாவும் 100% வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

***

* விஜய்யுடன் சிம்ரன் மட்டுமே அதிகபட்சமாக 5 படங்களில் நடித்துள்ளார், சிம்ரன், த்ரிஷா ஆகிய இருவரும் நான்கு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்கள்.

* 90களில் விஜய் படம் என்றாலே நெருக்கமான காதல் காட்சிகள் அதிகமாக இருக்கும், கதாநாயகிகள் கவர்ச்சியாக நடிக்கவேண்டும் என்கிற நிலை இருந்தது. இதனால் தான் பூவே உனக்காக படத்தில் நடிக்கப் பல நடிகைகள் மறுத்தார்கள் என்று இயக்குநர் விக்கிரமன் தனது சுயசரிதையில் எழுதியிருப்பார். எனினும் கவர்ச்சியைத் தவிர்க்கும் நடிகைகளான தேவயானி, ஷாலினி, சுவலட்சுமி போன்றோர் விஜய்யுடன் இணைந்து தலா இரு படங்களில் நடித்துள்ளார்கள். கடந்த பத்தாண்டுகளில் இரு விஜய் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷையும் குறிப்பிடலாம்.

* விஜய்யின் முதல் சூப்பர் ஹிட் படமான பூவே உனக்காக-வில் நடித்த சங்கீதா, அதன்பிறகு விஜய்யின் எந்தப் படத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவேயில்லை. 

* சில முன்னணி நடிகைகள் விஜய்யுடன் குறைவான படங்களிலேயே நடித்துள்ளார்கள்.

ஸ்ரேயா (அழகிய தமிழ் மகன்), அனுஷ்கா (வேட்டைக்காரன்), தமன்னா (சுறா), ஸ்ருதி ஹாசன் (புலி) ஆகிய முன்னணி நடிகைகள் விஜய்யுடன் இணைந்து தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார்கள்.

* சிம்ரன், த்ரிஷாவுக்கு அடுத்ததாக சங்கவி, ஸ்வாதி, ரம்பா, அசின், காஜல் அகர்வால், சமந்தா ஆகிய நடிகைகள் விஜய்க்கு ஜோடியாக 3 படங்களில் நடித்துள்ளார்கள். 

* விஜய்யுடன் இணைந்து நடித்து அதில் 100% வெற்றி வைத்திருப்பவர்கள் அசினும் சமந்தாவும் மட்டுமே. 

* சமந்தா கதாநாயகியாக நடித்த முதல் படம், பாணா காத்தாடி 2010-ல் வெளிவந்தது. ஆனால் சமந்தா நடித்த நேரடி தமிழ்ப் படமொன்று வெற்றி பெற்றது 2014-ல் தான். விஜய்யுடன் நடித்த கத்தி. தமிழில் பல தோல்விப்படங்களில் சமந்தா நடித்திருந்தாலும் விஜய்யுடன் நடித்த மூன்று படங்களும் அவருக்கு வெற்றியையே தந்துள்ளன.

* நினைத்தேன் வந்தாய், பிரெண்ட்ஸ் என இரு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் தேவயானி. ப்ரெண்ட்ஸ் சூப்பர் ஹிட் ஆனாலும் இந்த ஜோடியை மீண்டும் காண வாய்ப்பு கிடைக்கவில்லை.

* நிலாவே வா, லவ் டுடே என இரு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் சுவலட்சுமி. லவ் டுடே இளைஞர்களை மிகவும் கவர்ந்தது.

* விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்கார் என இரு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் ஒரு பெரிய வெற்றி அவருக்குக் கிடைக்கவில்லை.

* விஜய்யின் முதல் கதாநாயகியான கீர்த்தனாவும் நாளைய தீர்ப்பு படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார்.

* மாஸ்டர், பீஸ்ட், வாரிசு என விஜய்யின் சமீபத்திய படங்களில் புதிய கதாநாயகிகள். மாளவிகா, பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT