செய்திகள்

தனுஷ் பிறந்த நாள்: நடிப்பு அசுரனின் வெற்றிப் பயணம்

28th Jul 2022 12:21 PM | எழில்

ADVERTISEMENT

 

39-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் தனுஷ். 

2002-ல் துள்ளுவதோ இளமை படத்தில் மீசை கூட இல்லாத இளைஞனாகப் பார்த்த தனுஷ் இன்று பேர், புகழில் பிரமாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளார். தேசிய விருதுகள், அருமையான படங்கள் என தமிழ் நடிகர்களில் தனித்துவமாக உள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் சிக்ஸர் அடிப்பார் என்கிற நிலையை உருவாக்கியுள்ளார். அப்படி அவர் சமீபத்தில் அடித்த சிக்ஸர்கள் - அசுரன், கர்ணன்.

ஒரு நடிகனாக தன் திறமைகளைப் பல படங்களில் தனுஷ் வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் கொண்டாடிய தருணங்கள் இவை:

ADVERTISEMENT

துள்ளுவதோ இளமை (2002)

பள்ளி மாணவனாக இந்தப் படத்தில் தனுஷ் அறிமுகமானது காலத்தின் கட்டாயம் என்றுதான் சொல்லவேண்டும். துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க கஸ்தூரி ராஜாவும் செல்வராகவனும் பலரை அணுகியும் எதுவும் சரிவராமல் கடைசியில் அருகிலேயே இருந்த தனுஷை நடிக்க வைத்தார்கள். பிடிக்காமல் நடிக்க வந்தார் தனுஷ். ஆனால் அந்த எண்ணமே கதாபாத்திரத்துக்குச் சரியாகப் பொருந்தியது. பெற்றோர், சமூகத்தைப் பிடிக்காமல் தன் போக்கில் வாழும் பள்ளி மாணவனாக வெளிப்படுத்திய நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். தனுஷ் என்கிற நாயகன் உருவானான்.

2019-ல் தனுஷ் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது:

துள்ளுவதோ இளமை 2002, மே 10 அன்று வெளியானது. என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். இந்த இலக்கில்லா, அவனால் நட்சத்திரமாக அல்ல, ஒரு நடிகனாகக்கூட முடியுமா என்று தெரியாத சிறுவனுக்கு நேற்றுதான் நீங்கள் ஆதரவளித்தது போல உள்ளது. என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றியுணர்ச்சி பொங்குகிறது. என்னுடைய நல்ல, கெட்ட நேரங்கள், வெற்றி, தோல்விகளில் எனக்கு ஆதரவாக இருந்துள்ளீர்கள். நான் மிகச்சரியான மனிதன் அல்லன், ஆனால் உங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவு - மேலும் என்னை உழைக்க வைத்து முழுத் திறமையை வெளிப்படுத்தத் தூண்டுகிறது என்றார்.  

காதல் கொண்டேன் (2003)

துள்ளுவதோ இளமை படம் தனுஷைக் கதாநாயகன் ஆக்கியது, காதல் கொண்டேன் படம் அவரை நட்சத்திரமாக்கியது.

இந்தப் படம் பார்த்து செல்வராகவனின் திறமையைத் தமிழ்த் திரையுலகம் வியந்தது. அசாதாரணமான கதாபாத்திரத்தில் அசத்தினார் தனுஷ். சோனியா அகர்வாலுக்காக உருகுவது, பிறகு சீற்றத்தை வெளிப்படுத்துவது என தனக்கு வழங்கப்பட்ட அத்தனை சவால்களையும் எளிதாகக் கடந்தார். திரையரங்கில் ரசிகர்கள் தனுஷையும் செல்வராகவனையும் கொண்டாடினார்கள். 

2-வது படத்திலேயே நல்ல நடிகன் எனப் பெயர் எடுத்தார். புகழ் கையில் வந்து விழுந்தது.

புதுப்பேட்டை (2006)

தனுஷின் வெற்றிப் படங்களில் இது இடம்பிடிக்குமா என்றால் சந்தேகம் தான். ஆனால் ஒரு நடிகனாக தனுஷ் விஸ்வரூபம் எடுத்த படம். கொக்கி குமாராக வாழ்ந்து காட்டினார். தேசிய விருது வெகு தூரமில்லை என்பது இந்தப் படத்தில் நன்குத் தெரிந்தது. 

வசனங்கள், வித்தியாசமான இசை என ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வைத் தந்த இந்தப் படத்தின் அருமையை ரசிகர்கள் தாமதமாகவே உணர்ந்துகொண்டார்கள். இதனால் தான் புதுப்பேட்டை 2 எப்போது எனத் தொடர்ந்து செல்வராகவனிடம் கேள்வி எழுப்பினார்கள்.

கொக்கி குமாரை மீண்டும் காண்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை இயக்குகிறார் செல்வராகவன்.

ஆடுகளம் (2011)

2007-ல் வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் நடித்து வெற்றி பெற்றார் தனுஷ். அந்த ஒரு படத்திலேயே வெற்றி மாறனின் திறமையை உணர்ந்துகொண்டார். வெற்றி மாறனின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தார். பலன் - தேசிய விருது.

இன்றுவரைக்கும் வெற்றி மாறனின் சிறந்த படமாகக் கருதப்படுவது - ஆடுகளம் தான். கே.பி. கருப்பாக வாழ்ந்து காட்டினார் தனுஷ். இந்த உழைப்பைச் சரியாகப் புரிந்துகொண்ட தேர்வுக்குழு, சிறந்த நடிகராக தனுஷை அந்த வருடம் தேர்வு செய்தது.

தமிழில் இந்தப் பெருமையை எட்டிய சில நடிகர்களில் ஒருவரானார் தனுஷ். ரசிகர்கள் கொண்டாடிய ஒரு படத்துக்குத் தேசிய விருது மரியாதையும் அளிக்கப்பட்டதில் தனுஷுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

வெற்றி மாறனுடனான நட்பு பற்றி ஒரு விழாவில் பேசிய தனுஷ் இவ்வாறு சொன்னார்:

அது ஒரு கனா காலம் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் அம்மாவை நினைத்துக் கனவில் இருந்து கண் விழித்துக் கதறி அழ வேண்டிய காட்சி. அப்போது எனக்கு 20 வயது. பாலுமகேந்திரா சாரிடம், வெற்றியை (வெற்றி மாறன்) இந்தக் காட்சியை நடித்துக் காட்டச் சொல்லுங்கள். எப்படிச் செய்கிறார் என்று பார்த்துக்கொள்கிறேன் என்றேன். உதவி இயக்குநர்களை நடித்துக்காட்டச் சொன்னால் அதை அவர்கள் செய்வது எளிதாக இருக்காது. நான் விளையாட்டுக்காகத்தான் சொன்னேன். ஆனால் வெற்றி மாறன் அற்புதமாக நடித்து, பாலுமகேந்திரா சாரே போதும் என்று சொல்லும் அளவுக்கு நடித்தார். நான் வெற்றி மாறன் போல நடிக்காமல் வேறு மாதிரி நடித்தேன். காட்சி படமாக்கப்பட்ட பிறகு இதுகுறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். பாலுமகேந்திரா சார் என்னை அழைத்து, என்ன யோசிக்கிறாய் எனக் கேட்டார். சார், நான் செய்வது பிடித்திருந்ததா அல்லது வெற்றி செய்தது பிடித்திருந்ததா? அவரளவுக்கு நான் செய்தேனா எனச் சந்தேகமாக உள்ளது என்று அவரிடம் கேட்டேன். அவர் சிரித்தார். என் மகன்களிடம் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யச் சொல்கிறாயா என்று கேட்டார். இதற்கு நான் பதில் அளிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அன்று தன் பிள்ளைகளாக எங்களைப் பார்த்தார். அன்றிலிருந்து நானும் வெற்றி மாறனும் சகோதரர்களாகவே இருந்து வருகிறோம். 

சிவசாமி கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நான் வெற்றிமாறனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இதுபோல கதாபாத்திரம் மீண்டும் எனக்குக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. 

இந்தப் படம் வெளியாகும்போது நான் ஊரில் இல்லை. லண்டனில் இருந்தேன். எப்படிப் போகிறதென்று சரியாகத் தகவல் தெரியவில்லை. இதனால் பதற்றமாக இருந்தேன். என் அம்மா போன் பண்ணி, பெரிய வெற்றி எனச் சொல்கிறார்கள். இப்போது பார்த்து நீ தொலைவில் இருக்கிறாயே என்றார். வெற்றி தூரமாக இல்லை அம்மா. என் பக்கத்தில் தான் உள்ளது என்றேன், வெற்றிமாறனை நினைத்து. 

தோல்வியைத் தான் நாம் தழுவிக்கொள்ள வேண்டும். வெற்றியைத் தூரமாக நின்றுதான் ரசிக்கவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை எப்படிச் சேதப்படுத்தும் எனத் தெரியாது. நம்மை எப்போது எங்கே வைக்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும். அதனால் தான் இப்படியொரு வெற்றி கிடைக்கும்போது என்னைத் தொலைவில் இருக்க வைத்துவிட்டார். 

எனக்கு நண்பர்கள் குறைவு தான். நாம் என்ன கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அல்லது நம்மிடம் எதிர்பார்த்தோ ஆயிரம் நண்பர்கள் இருப்பதை விட ஒரு நண்பர் கூட இருந்து நீ செய்வது தவறு, நீ நடித்த படம் நன்றாக இல்லை என உண்மையைச் சொல்கிறவர் இருந்தால் போதும். அதுபோல ஒரு நண்பர் தான் வெற்றி மாறன். 

ஆரம்பத்தில், இவ்வளவு சீக்கிரமாகப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம், எல்லாம் சரியாக வருகிறதா எனச் சந்தேகமாக உள்ளது என்று சொன்னார் வெற்றிமாறன். அவசரத்தில் கிண்டும் உப்புமா தான் உலகப் புகழ் பெறும் என்று அவருக்குப் பதில் அளித்தேன். ஆனால் உப்புமா இல்லை, ஃபுல்மீல்ஸே செய்துவிட்டார் என்றார்.

அசுரன் (2019)

தனுஷின் சிறந்த நடிப்பை செல்வராகவன், வெற்றி மாறன் படங்களில் காணலாம். அசுரனில் தனுஷ் தெரியவேயில்லை. சிவசாமி தான் படம் முழுக்க வியாபித்திருந்தார். சோகம் இழையோடிய படத்தில் வயதானவர் வேடத்தில் கவனமாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார் தனுஷ். வன்முறைக்கு எதிராக வன்முறை ஆயுதத்தைக் கையில் எடுத்துப் போராடிய வேண்டிய கதாபாத்திரம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. தனுஷ் மகா நடிகன் என்பது இன்னொரு முறை நிரூபணமானது.

ஆடுகளம், அசுரன் என 2011 முதல் 2019 வரையிலான காலக்கட்டம் தனுஷுக்குச் சிறப்பாகவே அமைந்தது. இதை ஓர் அறிக்கையிலும் அவர் வெளிப்படுத்தினார். டிசம்பர் 31, 2019 அன்று தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்த தசாப்தம் எனக்கு மிகசிறப்பாக அமைந்தது. எனக்கு அனைவரும் நன்கு உற்சாகம் அளித்தீர்கள். உங்களால் தான் அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டேன். இந்த தசாப்தம், தேசிய விருதுடன் தொடங்கியது. நான் படம் இயக்கினேன், பிறகு அசுரனுடன் முடிந்தது. எனக்குப் பிடித்த பல படங்களில் நடித்தேன். ஒரு நடிகராக இதை விடவும் சிறந்த பத்தாண்டுகளை எதிர்பார்க்க முடியாது என்றார்.

மீண்டும் தேசிய விருது

2019-ம் ஆண்டிற்கான 67-வது தேசிய விருது அறிவிப்பில் தமிழ்த் திரைப்படங்களுக்கு 7 தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன. அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் பெற்றார்.

இதற்காக வெளியிட்ட அறிக்கையில் தனுஷ் கூறியதாவது:

சிறந்த நடிகருக்கான விருதை ஒருமுறை பெறுவது கனவு, இருமுறை பெறுவது ஆசிர்வாதத்தால் தான். இவ்வளவு தூரம் நான் முன்னேறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு சிவசாமி கதாபாத்திரத்தை வழங்கிய வெற்றிமாறனுக்கு நன்றி. பாலு மகேந்திரா சார் அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தபோது நீங்கள் என்னுடைய நண்பராக, சகோதரராக இருப்பீர்கள் என நினைக்கவேயில்லை. நாம் இணைந்து உருவாக்கிய நான்கு படங்கள் மற்றும் இணைந்து தயாரித்த இரு படங்களினால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் நானும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். எனக்காக அடுத்து என்ன கதை எழுதியிருப்பீர்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். தேசிய விருது நடுவர் குழு, தாணு சார், படக்குழுவினருக்கு நன்றி. எனக்காக நேரம் ஒதுக்கி வாழ்த்திய திரையுலகினருக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி. எண்ணம் போல் வாழ்க்கை என்றார்.

கர்ணன் (2021)

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்தார் தனுஷ். மூன்றாவது முறை தேசிய விருது நிச்சயம் என்று பாராட்டும் அளவுக்கு இருந்தது தனுஷின் நடிப்பு. இயக்குநருக்கு முழு சுதந்திரம் அளித்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு படத்தில் தனது நடிப்புத்திறமையை மீண்டும் வெளிப்படுத்தி அசத்தினார் தனுஷ். வெற்றிமாறன் போல மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களிலும் தனுஷை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கர்ணன் படத்துக்குப் பிறகு ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே (ஹிந்தி), மாறன், தி கிரேன் மேன் (ஆங்கில இணையத் தொடர்) ஆகிய படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன், ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒரு படமாக உள்ளது. தனுஷின் அடுத்த சிக்ஸராக இது இருக்கலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT