செய்திகள்

பிரபல நடிகரின் படப் பாடலுக்கு இயக்குநர் 'சிறுத்தை' சிவா விமர்சனம்: வைரலாகும் வாட்ஸ் ஆப் பதிவு

29th Jan 2022 02:46 PM

ADVERTISEMENT

 

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படம் விமர்சகர்களைக் கவரவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது வெற்றிமாறன் இயக்கிக் கொண்டிருக்கும் 'விடுதலை' படத்தின் பணிகளை அவர் இன்னும் முடிக்கவில்லை. 

விடுதலை படத்தின் பணிகளை முடித்து, வாடி வாசல் படத்தின் முன்கட்ட தயாரிப்பு பணிகளைத் துவங்க சில காலம் ஆகலாம். அதற்குள் இயக்குநர்கள் பாலா மற்றும் சிவா படங்களில் சூர்யா நடித்து முடித்துவிடுவார் என்று கூறப்படுகிறது. மற்றொருபுறம் அண்ணாத்த படத்தின் விமர்சனங்களால் சூர்யாவுடன் இயக்குநர் சிவா இணைவதை ரசிகர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | விக்ரம் - துருவ்வின் 'மகான்': நாச்சியாக கலக்கும் சிம்ரன்: அதிகாரப்பூர்வ தகவல்

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை அமலா தமிழில் நடித்துள்ள கணம் படத்தின் அம்மா பாடல் சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலுக்காக இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோயை இயக்குநர் சிவா பாராட்டி அவருக்கு வாட்ஸ் அப் செய்தி அனுப்பியுள்ளார். 

அவரது பதிவில், ''வணக்கம், நான் இயக்குநர் சிவா. உங்களின் கணம் படத்தில் இருந்து அம்மா பாடலைக் கேட்டேன். நல்ல உயிரோட்டமான பாடல். இசை இந்தப் பாடலில் மிக கச்சிதமாக பிணைக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல இசையை தொடர்ந்து செய்யுங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், ''கணம் படத்தின் அம்மா பாடல் வெளியானதிலிருந்து எனக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் உச்சகட்டமாக தனது படங்களில் உயிரோட்டமான பாடல்களைக் கொடுக்கும்  அண்ணாத்த, விஸ்வாசம் படங்களின் இயக்குநர் சிறுத்தை சிவாவின் பாராட்டு அமைந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார். 

டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கணம் படத்தை ஸ்ரீ கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷார்வானந்த், அமலா, ரித்து வர்மா, சதிஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்திரா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT