செய்திகள்

நாக சைதன்யா - சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு : வினைகளும் எதிர்வினைகளும்

18th Jan 2022 02:57 PM | கார்த்திகேயன் எஸ்

ADVERTISEMENT

 

தனுஷ் - ஐஸ்வர்யாவும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பிரியவிருப்பதாக அறிவித்தனர். இதனையடுத்து ரசிகர்கள் இருவரது பிரிவு குறித்து தங்களது வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நாக சைதன்யா - சமந்தா பிரிவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக நட்சத்திர தம்பதிகளின் பிரிவு அறிவுப்புகள் வெளியாவது குறத்து விவாதங்கள் எழுந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பவையாகவே இருந்து வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவும் விவாகரத்து ஆனவர் தான். தற்போது விசாகன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வருகிறார். மேலும் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷின் சகோதரரும் இயக்குநருமான செல்வராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் சில வருடங்களில் பிரிந்தனர். தற்போது செல்வராகவன் இயக்குநர் கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவரும் 3 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். 

ADVERTISEMENT

விவாகரத்து செய்துகொண்ட நட்சத்திர தம்பதிகள் குறித்து கணக்கெடுத்தோமேயானால் அந்தப் பட்டியல் மிக நீளமானதாக இருக்கும். அவர்கள் எல்லோரையும் ஒரே புள்ளியில் வைத்து விவாதிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கும். நட்சத்திரங்கள் என்பதனால் தான் இந்த விவகாரம் பெரிதாக தெரிகிறது.

இருவரது பிரிவு அறிவிப்பு வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் இருவர் மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக தனுஷுடன் பணிபுரிந்தவர்களான அமலா பால், சமந்தா, சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் பிரிவுக்கு தனுஷே காரணம் என ஒரு சிலர் மிக மோசமான முறையில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இதுதான் வாய்ப்பு என ஒரு சிலர் ஐஸ்வர்யாவின் கடந்த கால காதல் என சில கதைகளை எல்லை மீறி பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர் ரஜினிகாந்த்துக்கு ஆறுதல் கூறுகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் பேட்ட படத்தின் இளமை திரும்புதே பாடலை தனுஷ், ஐஸ்வர்யாவை பார்த்து பாடும் விடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

சமந்தா - நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்தபோதும் இப்படித்தான் நடந்தது. சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும் உடை வடிவமைப்பாளரோடு நெருங்கி பழகுவது நாக சைதன்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. மேலும், நாக சைதன்யா சக நடிகைகளுடன் பழகுவது சமந்தாவுக்கு பிடிக்கவில்லை எனவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சில யூடியூப் பக்கங்கள் செய்திகளை வெளியிட்டன.

இதையும் படிக்க | மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்

நாக சைதன்யாவிடமும், சமந்தாவிடமும் பிரிவிற்கான காரணங்களை ஊடகங்கள் கேட்கும்போதேல்லாம், இருவரின் மகிழ்ச்சிக்காகவே இந்த முடிவை எடுத்தோம் என்று சொன்னார்களே தவிர, ஒருவர் மீது ஒருவர் பழிபோடவில்லை. அவர்களே பண்பட்ட முறையில் நடந்துகொள்ளும்போது நாமும் எளிதாக இந்த சம்பவங்களைக் கடந்து போவதே நல்லது. 

தனுஷும் ஐஸ்வர்யாவும் பல்வேறு எதிர்கால கனவுகளுடன் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருப்பர். திருமண வாழ்வில் மகிழ்ச்சி கிடைக்காததனால் தான் அவர்கள் விவாகரத்து முடிவை எடுத்திருப்பார்கள். பிரிவதாக முடிவெடுத்தபோது 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையைப் பற்றி துளியும் சிந்திக்காமலா இருந்திருப்பார்கள்.

தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யாவும், இயக்குநர், பாடகர் என பல்வேறு பரிணாமங்களில் இயங்கி வருகிறார். பிரிவுக்கு பிறகு அவரவர் துறைகளில் கவனம் செலுத்துவார்கள். 

விவாகரத்து இருவரது தனிப்பட்ட முடிவு. அவர்களது மகிழ்ச்சிக்காக எடுத்த முடிவு. இருவரும் கேட்டுக்கொண்டதுபோல அவர்களது முடிவை மதிப்போம். விவகாரத்து என்பதை சாதாரண நிகழ்வாக கடந்துபோவதுதான் அனைவருக்கும் நல்லது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT