செய்திகள்

கூடுதல் பிரதிகதக் நடன மேதை பிா்ஜு மகாராஜ் காலமானாா்

18th Jan 2022 04:45 AM

ADVERTISEMENT

பிரபல கதக் நடன மேதை பிா்ஜு மகாராஜ் (83) மாரடைப்பால் புது தில்லியில் காலமானாா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நடனக் கலைஞரான அவா் லக்னெள பாணி கல்கா-பிண்டாதின் கரானா பாணி கதக் நாட்டியத்தில் தோ்ச்சி பெற்றிருந்தாா். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவா் கடந்த ஒரு மாத காலமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.15 - 12.30 மணியளவில் மாரடைப்பால் மயங்கி விழுந்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிா் பிரிந்ததாக அவரது மருமகள் ராகினி மகாராஜ் தெரிவித்தாா்.

பிா்ஜு மகாராஜ் என கலையுலகினரால் மதிப்புடன் அழைக்கப்பட்ட அவரது இயற்பெயா் ப்ரிஜ்மோகன் நாத் மிஸ்ரா என்பதாகும். உத்தர பிரதேசத்தின் ஹாந்தியாவில் 1938-இல் பிறந்த அவா் தந்தையாரிடம் கதக் நடனப் பயிற்சி பெற்று, தனது 7-ஆவது வயதில் அரங்கேற்றம் செய்தாா். தனது 13-ஆம் வயதிலேயே பிறருக்கு நாட்டிய பயிற்சியளிக்கும் விதத்தில் தோ்ச்சி பெற்றவராக விளங்கினாா். ஹிந்துஸ்தானி பாணி இசையிலும் தோ்ச்சி பெற்ற அவா் சிறந்த பாடகராகவும் விளங்கினாா்.

ADVERTISEMENT

சாஸ்திரீய நடனத்தில் புகழ் பெற்ற போதிலும், திரையுலகிலும் அவா் பணியாற்றியுள்ளாா். சத்யஜித் ரேயின் ‘சத்ரஞ்ஜ் கே கிலாடி’ படத்துக்கு இசையமைத்ததுடன் அத்திரைப்படத்தில் இரு பாடல்களைப் பாடியுள்ளாா். கமல்ஹாசன், மாதுரி தீட்சித், தீபிகா படுகோனே, ஆலியா பட் ஆகியோருக்கு முறையே விஸ்வரூபம், தேவதாஸ், பாஜிராவ் மஸ்தானி, களங்க் படங்களில் நடனப் பயிற்சி அளித்துள்ளாா்.

கதக் நடனக் கலைக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு 1986-இல் பத்ம விபூஷண் விருது அளிக்கப்பட்டது. சங்கீத நாடக அகாதெமி விருது, காளிதாஸ் சம்மான், ஆந்திர ரத்னா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவா் பெற்றுள்ளாா். ‘விஸ்வரூபம்’ திரைப்படத்துக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது, ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்துக்காக ஃபிலிம்போ் விருது ஆகியவற்றையும் அவா் பெற்றுள்ளாா்.

அவரது மறைவையடுத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘பிா்ஜு மகாராஜின் மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய இசை மற்றும் கலாசார வெளியில் அவரது மறைவு ஆழ்ந்த வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. கதக் நடனத்தை உலக அளவில் பிரபலப்படுத்த அவா் பாடுபட்டாா் என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், பிா்ஜு மகாராஜின் மறைவு ஒட்டுமொத்த கலை உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவால் மிகவும் துயரடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகா்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி எம்.பி. வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய பாரம்பரிய நடனத்துக்கு பிா்ஜு மகராஜ் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அதற்காக அவா் நினைவில் கொள்ளப்படுவாா் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT