செய்திகள்

அவதியிலிருந்து மீளும் பிரபல இயக்குநர்: நினைவை மீட்பதில் உதவுவார்களா நண்பர்கள்?

17th Feb 2022 01:31 PM

ADVERTISEMENT

 

பிரபல இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியின் உதவியுடன் வாழவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளார். 

என்ன ஆச்சு?

கே. பாலசந்தர், விசு, இராம, நாராயணன் போன்றோரிடம் 60 படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் டி.பி. கஜேந்திரன். 24 படங்களை இயக்கியுள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக வாழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இன்று, இதெல்லாம் அவர் நினைவில் இருக்குமா என்று தெரியாத அளவுக்கு உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியின் உதவியுடன் குடும்பத்தினர், நண்பர்களின் கவனிப்புடன் வாழ்ந்து வருகிறார். 

ADVERTISEMENT

விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி. படித்தபோது தற்போது தமிழக முதல்வராக இருக்கும் மு.க. ஸ்டாலின், கஜேந்திரனின் வகுப்புத் தோழர். பிறகு இளங்கலைப் படிப்பிலும் ஸ்டாலின் வகுப்புத் தோழராக இருந்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு கே. பாலசந்தரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் கஜேந்திரன். பிறகு விசுவிடம் பணியாற்றிய பிறகு, விசு நடிக்கிறார் என்கிற காரணத்துக்காக கஜேந்திரனுக்குப் படம் இயக்கும் வாய்ப்பை முதலில் அளித்தார் இராம. நாராயணன். முதல் படமான வீடு மனைவி மக்கள் படம் 1988-ல் வெளியாக வெற்றி பெற்றது. எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், பாசமுள்ள பாண்டியரே, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன் என நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையைச் சொல்லும் பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக 2010-ல் மகனே என் மருமகனே என்கிற படத்தை இயக்கினார். 

சொந்த ஊர் தூத்துக்குடி. சென்னைவாசி. சிறு வயதிலிருந்து வடபழனியில் வளர்ந்தவர். சாலிகிராமத்தில் லாட்ஜ் ஒன்றை நடத்தி வருகிறார். தன்னுடைய லாட்ஜின் முதல் தளத்துக்கு விசுவின் பெயரையும் 2-வது தளத்துக்கு பாலசந்தர் பெயரையும் 3-வது தளத்துக்கு பாரதிராஜாவின் பெயரையும் வைத்து நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநராவதற்கு முன்பே விசு இயக்கிய படங்களில் நடித்துள்ளார் கஜேந்திரன். இதனால் அவர் இயக்குநரான பிறகு கேமராவுக்கு முன்பு நடிப்பது மேலும் அதிகமாகிவிட்டது. 2கே கிட்ஸுக்கு கஜேந்திரன் என்றால் நடிகராகத்தான் தெரியும். உயரம் குறைவாக இருந்தபோதும் கேலிகளைப் புறந்தள்ளிவிட்டுத் தன்னம்பிக்கையாலும் திறமையாலும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். பிரபல இயக்குநர்களில், பிரபல குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக முன்னேறினார். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் கஜேந்திரன். இதனால் கடந்த சில வாரங்களாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரும் கல்லூரித் தோழருமான மு.க. ஸ்டாலின் இதற்கு உதவி செய்திருக்கிறார். 

இப்போது தனது வீட்டில் சக்கர நாற்காலியுடன் வாழவேண்டிய நிர்பந்தம் கஜேந்திரனுக்கு ஏற்பட்டுள்ளது. வயதானவர்களைப் பாதிக்கும் அல்சைமர் பிரச்னை காரணமாக ஞாபகசக்தி மிகவும் குறைந்துள்ளது. இதனால் பிறர் உதவியுடன், வழிநடத்தலுடன் வாழ்ந்து வருகிறார் கஜேந்திரன். 

கஜேந்திரனுடன் தொடர்ந்து பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தால் இந்தப் பாதிப்பிலிருந்து மீட்டுக்கொண்டு வரலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் அவருடைய நண்பர்கள் வீட்டுக்கு வந்து அவரிடம் அடிக்கடிப் பேசி வருகிறார்கள். இதனால் தன்னுடைய பழைய அனுபவங்களை அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறதாம்.

 

கடந்த மாதம், கஜேந்திரனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து புரளிகளுக்குக் காணொளி மூலமாகப் பதிலளித்தார். எனக்கு கரோனா எதுவுமில்லை. தொடர்ந்து ஆதரவு கொடுக்கவேண்டும். பட வாய்ப்புகள் வர வேண்டும் என்றார்.

நன்றாக இருந்தபோது தன்னைச் சந்திக்க வரும் நண்பர்களுக்கெல்லாம் கஜேந்திரன் தாராளமாக செலவு செய்வாராம். சட்டைப் பாக்கெட்டில் இருந்து பணம் பறக்கும், எவ்வளவு செலவானாலும் கவலைப்பட மாட்டார். நண்பர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க மெனக்கெடுவார் என்று கஜேந்திரனைப் பற்றி பத்திரிகையாளர்கள் புகழ்வார்கள். 

இப்போதும் அதேபோல செய்யத் துடிக்கிறார் கஜேந்திரன். தன்னை மீட்டுக்கொண்டு வருவதற்காக வீட்டுக்கு வந்துள்ள நண்பர்களுக்குச் செலவு செய்ய சட்டைப் பாக்கெட்டைத் தடவியபடி மனைவியைப் பார்க்கிறாராம். மகளைப் பார்த்து எதையோ சொல்லத் துடிக்கிறாராம். இதைப் பார்க்கும் நண்பர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார், என்ன செய்ய நினைக்கிறார் என்பது உடனே புரிந்துவிடுவதால் இந்த நிலையிலும் உதவி செய்யத் துடிக்கும் அவருடைய எண்ணத்தைக் கண்டு நெகிழ்ந்து போகிறார்கள். 

செந்திலுடன் டி.பி. கஜேந்திரன்

கஜேந்திரனைச் சமீபத்தில் நேரில் சந்தித்த பத்திரிகையாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் மிகவும் உருக்கமாகப் பதிவு எழுதியுள்ளார். தான் சொல்ல வருவதை வீட்டினர் புரிந்துகொள்ளாததால் உச்சபட்ச கோபத்தில் கெட்டவார்த்தையைச் சத்தமாகச் சொன்னார். அப்போதுதான் அவருடைய மனவோட்டத்தைக் குடும்பத்தினரால் புரிந்துகொள்ள முடிந்தது. பணத்தை எடுத்து வந்து அவர் பாக்கெட்டில் வைத்தார்கள். பிறகு அந்தப் பணத்தை எடுத்து எங்களிடம் தந்தார். அப்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் என்று எழுதியுள்ளார். நினைவு தவறினாலும் நண்பர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை, விருந்தோம்பலை கஜேந்திரன் மறக்கவில்லை. 

நிலைமையை அறிந்த நடிகர் பிரபு, சமீபத்தில் விடியோ காலில் கஜேந்திரனிடம் பேசியுள்ளார். என்ன அண்ணே, வீட்டுக்குள்ள இருக்கீங்க. வாங்கண்ணே... படம் பண்ணுவோம். பட்ஜெட் பத்மநாபன், பந்தா பரமசிம், மிடில் கிளாஸ் மாதவன்னு என்னை எல்லா வீடுகள்லயும் கொண்டு சேர்த்தவர் நீங்கதான். என் வாழ்க்கையில விளக்கை ஏத்தி வைச்சவங்கள்ல நீங்களும் ஒருத்தர்ணே. எப்போ படப்பிடிப்புனு சொல்லுங்க. அங்க வந்து நிக்கறேன் என்று பேசி கஜேந்திரனை மிகவும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். 

இதனால் கஜேந்திரனிடம் அவருடைய நண்பர்களும் திரையுலகினரும் விடியோ கால் வழியாகப் பேசி உற்சாகப்படுத்தி அவரை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று குடும்பத்தினரும் நண்பர்களும் விருப்பப்படுகிறார்கள். அவர் உற்சாகமானால், எல்லோரும் ஊக்கப்படுத்தினால் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவர் நினைவுக்கு வரலாம், இதனால் அவர் பழையபடி எழுந்து நடமாடவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள். 

விரைவில் கஜேந்திரன் பழைய நிலைமையை அடைந்து, மறுபடியும் பிரபுவை வைத்து படம் எடுக்கவேண்டும் என்று பலருடைய விருப்பமாகவும் வேண்டுதலாகவும் உள்ளது.  நினைவை மீட்பதில் உதவுவார்களா நண்பர்கள்?

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT