செய்திகள்

வசூலை வாரிக் குவித்த தமிழ்த் திரைப்படங்கள்

29th Dec 2022 12:34 PM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

கரோனா பேரிடருக்கு பின்பு மெல்ல மீளத் தொடங்கிய திரைத்துறைக்கு நம்பிக்கை தரும் ஆண்டாக முடிந்துள்ளது 2022. சின்னப் படங்கள் தொடங்கி பெரிய திரைப்படங்கள் வரை பெரும்பாலான திரைப்படங்கள் நம்பிக்கைக்குரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளன.

திரையரங்கைக் கடந்து ஓடிடி தளங்கள் வருகை ரசிகர்களிடையே சென்றடையும் சிக்கலைக் குறைத்துள்ளன. இந்நிலையில் இந்தாண்டு வெளியான நேரடி தமிழ் திரைப்படங்களில் கவனம் பெற்ற வெற்றிப் படங்கள் எவை? அவை எப்படி வெற்றி பெற்றன? 

பொன்னியின் செல்வன்

இந்தாண்டு அதிகம் பேசப்பட்ட தமிழ் திரைப்படங்களில் முன்னணியில் இருப்பது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன். தமிழ் இலக்கியத்தில் முக்கியமான நாவலாக அறியப்படும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்பட வடிவமாக மாற்ற பல்வேறு கால கட்டங்களில் பலரும் முயற்சித்து வந்துள்ளனர். எம்ஜிஆர் தொடங்கி நீளும் இந்தப் பட்டியலில் வெற்றி பெற்றது என்னவோ இயக்குநர் மணிரத்னம்தான்.

ADVERTISEMENT

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்தது இந்தப் படத்திற்கான முக்கியமான விளம்பரத்தை பெற்றுத் தந்தது. இதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத் குமார் என பலர் நடித்தனர்.

ஆரம்பம் முதல் இந்தப் படத்திற்கான விளம்பரப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திய படக்குழு அதற்கான அத்தனை வாய்ப்புகளையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது. டிவிட்டரில் தங்களது கதாபாத்திரங்களின் பெயர்களையே தங்களது பெயர்களாக மாற்றிக் கொண்ட நடிகர்கள் அங்கும்கூட பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களாகவே தங்களை காட்டிக் கொண்டனர். சென்னை, மும்பை, ஹைதராபாத், கேரளம் என திரைப்பட வெளியீட்டிற்கு முன்பு பறந்து பறந்து செய்த பிரமோஷன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்கச் செய்தது.

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப்படமும் சந்தித்தது. நாவலுக்கென்று இல்லாத வர்ணனைக் கட்டுப்பாடு காட்சி மொழிக்குப் பொருந்தாததால் முக்கியமான காட்சிகளை சொல்லியே ஆக வேண்டும் எனும் கட்டாயம் இயக்குநருக்கு ஏற்பட்டது. எனினும் ரசிகர்களுக்கு தேவையான கமர்ஷியல் சினிமாவாக வெற்றி பெற்றது பொன்னியின் செல்வன்.

தீபாவளிக்கு வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் பெரிய அளவு வரவேற்பு பெறாததால் தீபாவளியைக் கடந்தும் திரையரங்குகளை ஆக்கிரமித்தது பொன்னியின் செல்வன்.

விமர்சனரீதியாக ஓரளவே திருப்தி அளித்திருந்தாலும் வசூல்ரீதியாக இந்தப் படம் பெற்ற வெற்றி தமிழ் திரையுலகை திரும்பிப் பார்க்கச் செய்தது. இதுவரை ரூ.450 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கான இரண்டாம் பாகம் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில் அதன் வெளியீட்டிற்கான அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி மீண்டும் தன்னுடைய வசூல் வேட்டையை பொன்னியின் செல்வன் தொடங்க உள்ளது.

விக்ரம்

மாநகரம், கைதி, மாஸ்டர் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் விக்ரம். கமல் ரசிகரான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திரையுலக ஆசான் கமலை வைத்து இயக்கிய இந்தப் படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு பட வெளியீட்டிற்கு முன்பே அதிகமாக இருந்தது. இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடையாள கதை வட்டமான போதைபொருள் கும்பல் கதைக்குள் நடிகர் கமலை பயணிக்க வைத்தார். போதாததற்கு தனது முந்தைய படமான கைதி திரைப்படத்திலிருந்த கதாபாத்திரங்களை விக்ரமில் பயன்படுத்தியது படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. நடிகர் கமல்ஹாசனின் அதிரடியான நடிப்பு தொடங்கி முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய்சேதுபதி, பகத் பாசில் என இந்தப் படத்திற்காக திரண்ட நடிகர்கள் பட்டாளம் படத்தின் உயரத்தை மேலும் கொண்டு சென்றது.

திரைப்பட வெளியீட்டிற்கு முன் வெளியான பத்தல பத்தல பாடலில் இடம்பெற்ற ஒன்றிய அரசின் தப்பாலே எனும் வரி படத்திற்கு நல்ல விளம்பரமாக அமைந்தது. அந்த வரிகள் திரைப்படத்தில் இடம்பெறாவிட்டாலும் படத்தின் மீதான கவனத்தைக் குவிக்க அது உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.விக்ரம் திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் எனும் புதிய ஒரு திரை உருவாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தப் படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில்  100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

லவ் டுடே

இந்த ஆண்டின் ஆச்சர்யப்படத்தக்க வெற்றித் திரைப்படம் எதுவென்றால் அது லவ் டுடேதான். 2கே கிட்ஸ் எனப்படும் இன்றைய தலைமுறையின் காதலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி வெளியான நிலையில் மற்ற அனைவரும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் திரையரங்கை ஆக்கிரமித்தது.

கோமாளி திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிகராக நடித்து இயக்கிய இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அதன் டிரைலர் ஒரு கவனத்தை ஏற்படுத்தியது. எனினும் சிறிய பட்ஜெட் படம்...அறிமுக நடிகர்... என கருதப்பட்ட நிலையில் வெளியான சில நாள்களிலேயே வசூலை ஒட்டுமொத்தமாக குவிக்கத் தொடங்கியது.

காதலனும், காதலியும் தங்களது செல்போன்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும்? என வித்தியாசமான கதை கொண்ட இந்தப் படத்தை இன்றைய இளசுகள் வெகுவாக கொண்டாடி தீர்த்தனர்.

நாளாக நாளாக திரையரங்கின் எண்ணிக்கை அதிகரிக்க சமூக வலைத்தளங்களும் இந்தப் படத்தின் வசனங்களால் நிறைந்தன. இந்தப் படத்தின் வெளியீட்டாளரான தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் இதன் தயாரிப்பு செலவு தொடங்கி வசூல் விவரங்கள் வரை வெளிப்படையாகத் தெரிவித்து வெற்றி ஆச்சர்யத்தைப் பகிர்ந்து கொண்டார். வெறும் ரூ.5.5 கோடியில் தயாரான இந்தப் படம் இதுவரை ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியுள்ளது.

பெரிய பெரிய படங்களுக்கு விளம்பரம் மேற்கொள்ளப்பட்டு பெற்ற வெற்றிகளுக்கு மத்தியில் சிறிய அளவிலான விளம்பரம் மட்டுமே செய்து வென்ற லவ் டுடே இந்த ஆண்டின் தமிழ் சினிமாவின் ஆச்சர்யம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT