செய்திகள்

விடுதலை படப்பிடிப்பில் விபத்து: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

6th Dec 2022 04:22 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

ADVERTISEMENT

 

இப்படத்தில் நடிகர் சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில், இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை திரைப்படத்தின் முதல்பாகத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த டிச.3 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அப்போது, ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் ஸ்டண்ட் கலைஞர் சுரேஷ்  என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு ‘விடுதலை’ தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,  “விடுதலை படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சண்டை கலைஞர் சுரேஷ் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு. சுரேஷின் மறைவிற்காக அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் எங்கள் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT