செய்திகள்

இந்த வாரப் போட்டியில் என்னென்ன படங்கள்?

1st Dec 2022 03:55 PM

ADVERTISEMENT

இந்த வாரம் டிஎஸ்பி, கட்டா குஸ்தி உள்ளிட்ட 6 திரைப்படங்களும், வதந்தி இணையத் தொடரும் வெளியாகவிருகின்றன.

இந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரின் தொடக்க வாரத்தில் இரண்டு பெரிய படங்களும், ஒரு இணைய தொடரும் வெளியாகின்றன. இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள வதந்தி இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும், நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான டிஎஸ்பி, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி ஆகிய திரைப்படங்கள் திரையரங்கிலும் வெளியாகின்றன. 

வதந்தி

புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் வெளிவந்த சுழல் இணையத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அவர்களின் அடுத்த இணையத் தொடராக வெளியாகிறது ‘வதந்தி’. இந்த இணையத் தொடரானாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் டிசம்பர் 2ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியாக உள்ளது.

ADVERTISEMENT

இதனை லீலை, கொலைகாரன் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரிவ் லூயிஸ் இயக்க நடிகை சஞ்சனா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லராக வெளியாக உள்ள இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 

கட்டா குஸ்தி

நடிகர்கள் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.  

ராட்சசன், எஃப்ஐஆர் ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை ரவி தேஜா, விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர். கேரள - தமிழ்நாடு கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. ஆண்-பெண் உறவு குறித்து நகைச்சுவை பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படமானது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டிஎஸ்பி 

 

விக்ரம் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் மீண்டும் வசூல்ரீதியாக முன்னேற்றமடையத் தொடங்கியுள்ளன. கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி', 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள டிஎஸ்பி நாளை வெளியாகிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். 

மஞ்சக்குருவி

புதுமுகங்கள் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. ஆடுகளம் நரேன் இணைந்துள்ள இந்தப் படத்தில் நாயகியாக நீரஜா என்பவர் நடித்துள்ளார். அரங்கன் சின்னதம்பி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டரை இப்படத்தின் நாயகி சாலையோர சுவர்களில் ஒட்டிய காணொலிகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இவை தவிர ஈவில், தெற்கத்தி வீரன் உள்ளிட்ட படங்களும் வெளியாகின்றன. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோல்டு திரைப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT