செய்திகள்

சின்னத்திரையில் டாப் 3 சீரியல்கள்! 'ரோஜா' முடிந்தால் என்னவாகும்?

1st Dec 2022 04:03 PM

ADVERTISEMENT


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இதில் மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடகளே டிஆர்பி பட்டியலிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

படிக்கஜீ தமிழ் 'செம்பருத்தி'க்குப் பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் கார்த்திக் ராஜ்!

சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த ரோஜா தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால், டிஆர்பி பட்டியலில் ரோஜா சற்று பின் தங்கியுள்ளது. 

ADVERTISEMENT

அதற்கு பதிலாக கயல், சுந்தரி, வானத்தைப்போல ஆகிய தொடர்கள் சன் தொலைக்காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. 

கயல்:

சன் தொலைக்காட்சியில் கயல் தொடர் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கயல் ஒளிபரப்பான முதல் வாரவே மற்ற தொடர்களைப் பின்னுக்குத்தள்ளி கயல் முதலிடம் பெற்றது. பி.செல்வம் இயக்கும் இந்த தொடர் 2021 அக்டோபர் 25ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி இந்த தொடரில் நாயகியாக களமிறங்கினார். அவருக்கு ஜோடியாக நடிகர் சஞ்சீவ் நடித்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் முத்துராமன், கோபி, ஐஸ்வர்யா, மீனா குமாரி, அவினாஷ் அபிநவ்யா, ஜானகி தேவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

தந்தையை இழந்தப் பெண் சொந்தங்களுக்கு மத்தியில் குடும்பத்தை எப்படி சுயமரியாதையோடு நடத்தி இடர்களைத் தாண்டி வெற்றி பெறுகிறாள் என்பதே கயலின் மூலக்கரு. இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் பல விருதுகளையும் வென்றுள்ளது. 

சுந்தரி:

சுந்தரி தொடர் 2021 பிப்ரவரி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அழகர் இயக்கும் இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார். 

கருப்பு நிறத்திலுள்ள கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மறுமணம் செய்துகொள்ளும் கணவன் முன்பு, படித்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு வாழும் பெண்ணின் கதையாக சுந்தரி தொடர் உள்ளது.

வானத்தைப் போல:

சன் தொலைக்காட்சியில் 2020 டிசம்பர் முதல் வானத்தைப்போல தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் வரும் தொடர் என்பதால் கூடுதல் சிறப்புடையதாக வானத்தைப்போல தொடர் உள்ளது.

ராஜ் பிரபு எழுத, ஏ.ராமச்சந்திரன் இயக்கத்தில் இந்த தொடர் உருவாகி வருகிறது. அண்ணன் - தங்கை என்ற முதன்மை பாத்திரத்தில் ஸ்ரீகுமார், மான்யா ஆனந்த் நடிக்கின்றனர்.  

தொடரின் ஆரம்பத்தி, இவர்களுக்கு பதிலாக முறையே தமன் குமார், ஸ்வேதா கேல்ஜ் நடித்தனர். அவர்களுக்கும் சரி, தற்போது ஸ்ரீகுமார், மான்யா-வுக்கும் சரி ரசிகர்கள் குறைந்தபாடில்லை. 

படிக்கஜீ தமிழ் 'கனா'! மற்ற சீரியல்களிலிருந்து மாறுபட்டது: 10 காரணங்கள்!!

கிராமத்திலுள்ள அண்ணன், தங்கை உறவை பின்னணியாகக் கொண்ட கதை, தங்கையின் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தில் எழும் சிக்கல்களை அடிப்படையாக வைத்து வானத்தைப்போல கதை நகர்கிறது.

சன் தொலைக்காட்சித் தொடர்கள்:

மேற்கண்ட மூன்று தொடர்களும் சன் தொலைக்காட்சியின் டிஆர்பி பட்டியலில் முதல் இடங்களைப் பிடித்துள்ளன.

இதற்கு அடுத்தபடியாக கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல் ஆகிய தொடர்கள் உள்ளன. 

தமிழ் சின்னத் திரை டிஆர்பி பட்டியலிலும் மேற்கண்ட இந்த ஆறு தொடர்களுமே முதல் ஆறு இடங்களைப் பிடித்துள்ளன. அதாவது மற்ற தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சன் தொலைக்காட்சி தொடர்களுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர் என்பது இந்த பட்டியல் மூலம் தெளிவாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT