செய்திகள்

திரைக்கு வருகிறது இன்னொரு நந்தன் கதை! சாதிப்பாரா சசிகுமார்?

1st Dec 2022 01:44 PM | விகதகுமாரன்

ADVERTISEMENT

சசிகுமாரின் நந்தன் திரைப்படத்தில் முதல் பார்வை வெளிவந்திருக்கிறது.

விரைவில் வெளிவரவுள்ள இந்தத் திரைப்படம் - இயக்குநராக அவருடைய சுப்பிரமணியபுர சாதனை இன்னமும் எட்ட முடியாததாக இருந்தபோதிலும் - நடிகராக சசிகுமாரின் திரை வரலாற்றில் குறிப்பிடத் தக்க மைல் கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையிலும் சசிகுமார் நடித்த படங்களில் பெரும்பாலானவை ஒரேமாதிரியான  கதைச் சட்டகத்துக்குள் அமைந்தவையாக - நட்பு அல்லது குடும்ப உறவு, பாதிப்பு, பழிதீர்த்தல், அடிதடி ரத்தம் இன்னபிற - இருந்திருக்கின்றன. இந்தப் படத்தின் கதையாக வெளிவரும் தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

நந்தன் படத்தின் இயக்குநர் இரா. சரவணன், ஏற்கெனவே சசிகுமார் - ஜோதிகா நடித்த உடன்பிறப்பே படத்தை இயக்கியவர்.

ADVERTISEMENT

நந்தன் படத்தின் முதல் பார்வையில் வழக்கத்துக்கு மாறான தோற்றத்தில் இருக்கிறார் நடிகர் சசிகுமார், வெற்றிலை போட்டுக் கறையேறிய பற்களைக் கொண்ட அப்பாவிச் சிரிப்புடன்.

இந்தப் படத்தின் கதை, புதுக்கோட்டை அருகேயுள்ள ஒரு கிராமத்தில் நடைபெறுவதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிற ஒன்றுதான். பண்ணையாரிடம் நிலத்தில் வேலை பார்க்கும் விவசாயத் தொழிலாளியாக நடிக்கிறார் சசிகுமார். இவருக்கு இணையாக நடிப்பவர் பிக்பாஸில் பங்கேற்றவரான சுருதி பெரியசாமி. பண்ணையாராக பாலாஜி சக்திவேல்.

சாதாரண மனிதனுடைய வாழ்வின் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்க வேண்டிய அரசியல் எந்த வகையில் அச்சுறுத்தலாக மாறிவிடுகிறது என்பது பற்றிதான் நந்தன் திரைப்படம் பேசுவதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சரவணன்.

இந்த மக்களெல்லாம் சொத்தோ பணமோ இல்லாவிட்டாலும், எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலாளி பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு விசுவாசமாக, தங்களுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முயலுகின்றனர். இத்தகைய தொழிலாளி ஒருவரின் வாழ்க்கையில் அரசியல் நுழையும்போது என்னவெல்லாம் நடைபெறுகின்றன என்பதைச் சுற்றிதான் திரைப்படம்.

உடன்பிறப்பே படம் முடிந்தவுடனேயே இந்தப் படத்துக்கான கதையை இயக்குநர் சரவணன் எழுதிவிட்டிருக்கிறார். முதலில் சசிகுமார் என்னவோ இந்தக் கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார். ஆனால், இயக்குநர் அணுகியபோது, கருணாஸோ இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாத வகையில் தாடியெதுவுமின்றிச் சுத்தமாக மழித்த நிலையில் இருந்திருக்கிறார். டிராப். பிறகு நடிகர் சூரியை வைத்து எடுக்கலாம் என நினைத்த சரவணன், வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பு முடியும் காத்திருக்கலாம் என்றே கருதினாராம்.

இப்படியான காலகட்டத்தில்தான் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்த சசிகுமார், இந்தக் கதாபாத்திரத்தில் தாம் நடிப்பது பற்றி இயக்குநரிடம் கேட்க, இதுவரையிலும் மிகவும் ஆக்ரோஷமான பாத்திரங்களிலேயே அதிகம் நடித்துள்ள சசிகுமார் இதற்குப் பொருந்தி வருவாரா என்று யோசித்து, ஒரு டெஸ்ட் பார்க்கலாம் என்றிருக்கிறார் இயக்குநர்.

முதலில் ஒரு முறை சசிகுமாருக்கு மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்க்க, சரியாக வரவில்லை, இயக்குநரும் திருப்திப்படவில்லை. ஆனால், அடுத்து பத்து நாள்கள் கழித்து மீண்டும் சசிகுமார் சென்றிருக்கிறார். மீண்டும் மேக்அப் டெஸ்ட். சூப்பர், செட்டாகிவிட்டது. உடனே படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால், அந்த வெற்றிலைக் கறை? மேக் அப் போடாமல் இயல்பாக இருந்தால் நல்லது என நினைத்திருக்கிறார் இயக்குநர். ஏனெனில், இந்தத் தொழிலாளர்கள் எப்போதுமே வெற்றிலை போட்டுக்கொண்டிருப்பவர்கள். சளைக்கவில்லை சசிகுமார், ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக வெற்றிலை போட்டுப் போட்டுப் பற்களைக் கறையாக்கிக் கொண்டு நந்தனாக நடிக்க வந்துவிட்டிருக்கிறார், வெற்றிலைப் பெட்டியுடன்.

சசிகுமாரின் மனைவியாக வரும் சுருதி பெரியசாமிக்கு இது முதல் படம். சாலையோரத்தில் முந்திரிப் பருப்பு விற்பவராக வரும் இவர் நடிப்பிலும் ஈடுகொடுத்து இருப்பார் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒரேமாதிரியாக நடித்து நடித்து அவருடைய தீவிரமான ரசிகர்களுக்கேகூட சலிப்புத் தட்டக்கூடிய நிலையில், நந்தனாக வருகிறார் நடிகர் சசிகுமார். முதல் பார்வையும் கேள்விப்படும் கதையும் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

எப்போதும் இப்படி வெற்றிலை குதப்பிப் பற்கள் கறையேறிய வாய் கொண்ட  கதாநாயகனை எங்கோ பார்த்த நினைவு எல்லாருக்குமே வரும், சரிதான், பதினாறு வயதினிலே கமல்ஹாசன்!

வரலாறு நெடுகிலும் நந்தன்கள் ஒன்றுமறியாதவர்களாகவே, ஒன்றுமறியாமலேயே  கொல்லப்படுகிறார்கள் அல்லது ஒழித்துக் கட்டப்படுகிறார்கள். இந்தக் கதையின்  நந்தன் எப்படி வருகிறான் பார்க்கலாம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT