செய்திகள்

கோவில் பற்றிய சூரியின் சர்ச்சை பேச்சு - கேள்விக்குள்ளாகும் நடிகர்களின் சாதி, மத நிலைப்பாடுகள்

எஸ். கார்த்திகேயன்

கடந்த வாரம் விருமன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் சூரி, நடிகர் சூர்யாவை பாராட்டி பேசினார். அப்போது பேசிய அவர், ''ஏழை மக்களுக்கு படிப்பைக் கொடுத்தோம் என்றால் அதைவிட பெரிய செயல் வேறு எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, ஆயிரம் அன்ன சத்திரம் கட்டுவதைவிட ஒருவனைப் படிக்க வைப்பது என்பது பல ஜென்மங்களுக்கு பேசப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

''கோவில் கட்டுவதைவிட'' என அவர் பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.  அது எப்படி சூரி கோவில் கட்ட வேண்டாம் என சொல்லலாம் என ஒருசிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சமீபத்தில் நடந்த விருமன் நிகழ்வில் சூரி விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மதுரையில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் மதுரை மீனாட்சி அம்மனை வணங்கிதான் பேசவே துவங்கினேன். மதுரையில் நான் நடத்துகின்ற உணவகங்களுக்கு அம்மன் என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். நான் மதுரை மீனாட்சி அம்மனின் பக்தர் என்று குறிப்பிட்டுள்ளார். 

சூரி வேறு யாரையாவது புகழ்ந்து பேசியிருந்தால் இவ்வளவு எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. காரணம், அவர் சூர்யாவைப் பாராட்டியதுதான் பிரச்னைக்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட படங்களில் சூர்யா நடித்துக்கொண்டு வருகிறார். குறிப்பாக ஜெய் பீம் படம் தொடர்பாகக் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பம் சூர்யா மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகத் தன் படங்களின் வழியே குரல் கொடுக்கும் சூர்யா, குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான படங்களை இயக்குவதாக சொல்லப்படும் இயக்குநர் முத்தையாவின் விருமன் படத்தை தயாரித்திருப்பதால் அவரின் அரசியல்  பார்வையைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு

முன்னதாக அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா, சில  ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசியபோது, தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலைப் பார்வையிட்டேன். உதய்பூரில் உள்ள அரண்மனை போல பராமரித்து வருகிறார்கள். எனக்கு அதற்கு அடுத்த நாள் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது. மருத்துவமனையை மிக மோசமாக பராமரிக்கிறார்கள். அங்கிருக்கும் கர்ப்பிணிகளுக்கு போதிய பாதுகாப்பில்லை. கோவிலுக்காக நிறைய செலவு செய்கிறீர்கள். கோவில் உண்டியலில் பணம் செலுத்துகிறீர்கள். அதேபோல மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார்.

அவரது பேச்சை பாஜகவினர், இந்து முன்னணியினர் கடுமையாக எதிர்த்தனர். அவர் வேற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதால்தான் இப்படி பேசினார் என அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 

ஆனால், ஜோதிகாவோ பேசியதோடு நிற்காமல், தஞ்சை மருத்துவமனைக்கு  ரூ. 25 லட்சம் நிதியுதவியும் வழங்கியிருந்தார். அதனால் தஞ்சை  மருத்துவமனை மேம்படுத்தப்பட்டதை செய்திகளின் வழியே அறிந்திருப்போம். 

தமிழ் சினிமாவில் அரசியல் 

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாது. பராசக்தி படத்தில் ''கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் போராடுகிறேன்'' என்ற முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் வசனம் மிக பிரபலம். 

தங்கள் சார்ந்த கட்சி சார்பாக நடிகர்கள் தங்கள் படங்களில் அரசியல் கருத்துகளைப் பேசுவர்.  மேலும், பகுத்தறிவு பேசும் படங்கள் ஒரு  புறமும் பக்திப் படங்கள் மறுபுறமும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெறும். ஆனால், எந்த பிர்சனையும் இருந்ததில்லை. பாரதிராஜா தனது வேதம் புதிது படத்தில் பாலுங்கிறது உங்க பெயர், தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்தப் படம் தேசிய விருதுகளை வென்றது. 

கமல்ஹாசன் தனது படங்களில் பகுத்தறிவு பேசி சர்ச்சைக்குள்ளாவார். தேவர் மகன் படத்திலும் விருமாண்டி படத்திலும் தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளைப் பதிவு செய்திருப்பார். ஆனால், தேவர் மகன் படமே ஒரு பெரிய வன்முறைக்கு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுவதுமுண்டு. மேலும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படமும், விஜய்யின் துப்பாக்கி படமும் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்களை சந்தித்தன. 

ஆனால், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்தப் போக்கு உச்சத்தை அடைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான கட்சிகள், குறிப்பிட்ட இனத்துக்கு ஆதரவான கட்சிகள், குறிப்பிட்ட மதத்துக்கு ஆதரவான கட்சிகள் போன்றவையே தங்களின் சுயலாபத்துக்காகத் திரைப்படங்களில் பேசப்படும் கருத்துகளை அரசியலாக்கி வருகின்றனர். 

குறிப்பாக, நடிகர் சூர்யா தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை காண முடிகிறது. மற்றொருபுறம் ஆன்மிக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த்  வலதுசாரிகளின் ஆதரவு பெற்ற நடிகராக இருக்கிறார். அதே ரஜினிகாந்த் காலா, கபாலி போன்ற படங்களிலும் நடித்திருந்தார் என்பதும் இங்கே  குறிப்பிடத்தக்கது.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனம் இடம் பெற்றிருந்தது. மேலும் படத்தில் கோவில் கட்டுவதைவிட மருத்துவமனை கட்டுவது முக்கியம் என நடிகர் விஜய் முடிவெடுப்பதாகக் காட்டப்படும். இதனையடுத்து, நடிகர் விஜய்  ஜோசஃப் விஜய் என பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டார். 

முன்னதாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து காத்துல ஊழல் பண்ற ஊர்யா இது என கத்தி படத்தில் விஜய் பேசிய வசனம் இப்பொழுதும் பேசுபொருளாக இருக்கிறது.

இரண்டுமே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட கருத்தாக இருக்க வாய்ப்பு இல்லை என்பது மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முரணான வசனங்களில் இருந்து  தெரியவருகிறது. 

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது சமூகத்தில் நிலவும் சாதி மத வேற்றுமையை ஒருசிலர் தங்களுடைய சுயலாபத்துக்குப்  பயன்படுத்திக்  கொள்கின்றனர் என்பதாக மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுடைய அரசியலுக்கு நடிகர்கள் கருவிகளாக்கப்படுகின்றனர். இன்னும்  எதற்காகவெல்லாம் வரிந்துகட்டப் போகிறார்களோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT