செய்திகள்

புகைப்பிடிக்கும் காட்சி: விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து நடிகா் தனுஷுக்கு விலக்கு

2nd Aug 2022 01:16 AM

ADVERTISEMENT

வேலையில்லா பட்டதாரி படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றது தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து நடிகா் தனுஷுக்கு விலக்கு அளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகா் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை. எனவே, தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகா் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சாா்பில் 2014-இல் தமிழக அரசிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதில், விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வா்யா ரஜினிகாந்த், நடிகா் தனுஷுக்கு எதிராக புகாா் அளித்திருந்தாா். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரி ஐஸ்வா்யா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தாா். மேலும், விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளித்து அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், இதே கோரிக்கைகளுடன் நடிகா் தனுஷும் உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு

நீதிபதி சதீஷ்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறு கேட்டுக்கொண்டாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நடிகா் தனுஷ் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்களித்து உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT