செய்திகள்

கே.வி. ஆனந்த் நினைவு தினம்: ஜெயித்த கனவு

30th Apr 2022 09:00 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

பிரபல ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குநருமான கே.வி. ஆனந்த், கடந்த வருடம் இதே நாளில் மறைந்தார். அவருடைய மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 

மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக, கதை மேல் நம்பிக்கை வைத்து பிரமாண்டமான படங்களை எடுக்கும் இயக்குநராக கே.வி. ஆனந்தின் வாழ்க்கை மிகவும் ஊக்கமளிக்கக் கூடியது. எங்கிருந்தோ தொடங்கி எங்கேயோ சென்று சேர்ந்து கடைசியில் இயக்குநர் என்கிற அடையாளத்துடன் அவருடைய வாழ்க்கை முடிந்தது. ஒரு நல்ல மனிதனை, ஒரு நல்ல திறமைசாலியைத் தமிழ்த் திரையுலகம் இழந்தது.

கேமரா மீதான காதலில் தொடங்கி திரைத்துறையில் நுழைந்து ஒரு நல்ல பெயருடன் கடைசி வரை வாழ்ந்தார் கே.வி. ஆனந்த். பத்திரிகைகளில் பணியாற்றிய ஒருவரால் திரைத்துறையில் வெற்றிகரமான கலைஞனாக ஆக முடியும் என நிரூபித்தவர். 

ADVERTISEMENT

தந்தை வங்கி மேலாளர். ஆனந்த் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். வீட்டில் நாளிதழ்கள், பத்திரிகைகள் நிறைய வாங்குவதால் வாசிப்புப் பழக்கம் சிறு வயதிலேயே வந்திருக்கிறது. தந்தைக்குப் பணி நிமித்தமாக மூன்று வருடங்களுக்கு ஒருமுறை ஊர் மாற வேண்டியிருக்கும். அதனால் சென்னையிலுள்ள சித்தப்பா வீட்டிலும் தங்கிப் படித்துள்ளார் ஆனந்த். அவர் பிளஸ் டூ படித்தபோது சென்னை அடையாறில் ஒன்றரை கிரவுண்ட் நிலத்தில் ஒரு வீடு வாங்கி குடியேறினார்கள். 

பத்தாவது படிக்கும்போது புகைப்படக் கலையின் மீது ஆனந்துக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து அவருக்கு ஒரு கேமரா வாங்கிக் கொடுத்தார் அப்பா. எதைச் செய்தாலும் உன்னை நீயே பாராட்டிக் கொள்கிற மாதிரி செய் என புகைப்படங்களாக எடுத்துத் தள்ளிய ஆனந்துக்கு அறிவுரையும் ஊக்கமும் அளித்தார்.

1991-ல் புகைப்படக் கலைஞர்களுடன் கே.வி. ஆனந்த்

விவசாயத்தின் மீதும் ஆர்வம் இருந்ததால் ப்ளஸ் டூ முடித்த பிறகு பி.எஸ்.சி. அக்ரி படிக்க எண்ணினார் ஆனந்த். (ஒளிப்பதிவாளர் ஆன பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கத்தில் 15 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்தார்.) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தார். இடம் கிடைக்கவில்லை. அடையாறு திரைப்படக் கல்லூரியில் விண்ணபித்தும் இடம் கிடைக்காததால் பி.எஸ்.சி. இயற்பியல் படித்தார். இந்தப் படிப்பில் கேமராவின் லென்ஸ் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றி அறிவியல்பூர்வமாகக் கற்றுக்கொண்டார்.

பள்ளி மாணவனாக இருந்தபோது ரூ. 1500 மதிப்புள்ள கேமரா வாங்கிக் கொடுத்த அப்பா, கல்லூரிப் பருவத்தில் யாஷிகா எஃப்.எக்ஸ் கேமரா வாங்கிக் கொடுத்தார். பர்மா பஜாருக்கு அழைத்துச் சென்று கேட்டதற்கும் அதிகமாக செலவு செய்து லென்ஸ்கள் வாங்கித் தந்தார்.

டிகிரி முடித்துவிட்டு லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் டிப்ளோமா படித்தார் ஆனந்த். ஆர்வத்துடன் கல்வித் தகுதியும் இருந்ததால் பத்திரிகைகளில் பகுதி நேரப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் நிரந்த வேலை கிடைக்காததால் கவனத்தை சினிமா பக்கம் திருப்பினார். 

ஆனந்த் எடுத்த புகைப்படங்களைப் பார்த்த பி.சி. ஸ்ரீராம், அவரை உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். நாயகன் படத்தில் பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்த ஆனந்த், மூன்று வருடங்கள் அவருடைய உதவியாளராகப் பணியாற்றியுனார். அதுவும் கோபுர வாசலிலே, மீரா, திருடா திருடா, தேவர் மகன் போன்ற பிரபலமான படங்களில் பி.சி. ஸ்ரீராமுடன் இணைந்து பணியாற்றினார். ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதற்காக அது தொடர்பான ஏராளமான புத்தகங்களை வாசித்தார். ஓவியங்கள் மீதும் ஆனந்துக்கு ஈடுபாடு உருவானது. 16-ம் நூற்றாண்டில் ஒளியை வைத்து வரையப்பட்ட ரெனெய்சான்ஸ் ஓவியங்கள், ரவிவர்மா ஓவியங்கள் பற்றி லயோலா கல்லூரிக் காலத்திலேயே ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்.

தேன்மாவின் கொம்பத்து என்கிற மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய பி.சி. ஸ்ரீராமுக்கு வாய்ப்பு வந்தபோது அதைத் தன் சிஷ்யரான ஆனந்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார் பி.சி. ஸ்ரீராம். அப்போது அவர் மே மாதம் படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தனது குருவே பரிந்துரைத்ததால் மகிழ்ச்சியுடன் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் ஆனந்த். பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால், ஷோபனா நடித்த அந்தப் படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை ஆனந்துக்குப் பெற்றுத் தந்தது. இதனால் பிரியதர்ஷன் இயக்கிய அடுத்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்தார்.

இரு மலையாளப் படங்கள், ஒரு தெலுங்குப் படத்தை முடித்துவிட்டு குஞ்சுமோன் தயாரிப்பில் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தமிழில் அறிமுகம் ஆனார் ஆனந்த். கல்லூரி வளாகத்தில் நடக்கும் முக்கோணக் காதல் கதையைப் பிரமாண்டமாகக் காண்பித்துப் பெயர் வாங்கினார். அடுத்ததாக பிரியதர்ஷனுடன் மூன்றாவது முறையாக இணைந்து இன்னொரு மலையாளப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். 

முதல்வன் படத்துக்காக ஷங்கர் அழைத்தார். பல நிமிடங்கள் செல்லும் நேர்காணல் காட்சியைச் சுவாரசியமாகப் படமாக்கினார் ஆனந்த். அவருடைய கற்பனையும் உழைப்பும் ஷங்கரை மிகவும் கவர்ந்ததால் அதன்பிறகு தான் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு ஆனந்தை ஒளிப்பதிவு செய்ய அழைத்தார் ஷங்கர். இருந்தும் நாயக், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் மட்டுமே ஆனந்த், ஷங்கருடன் இணைந்து பணியாற்றினார். ரஜினி நடித்த 2.0வுக்கும் அழைத்தார் ஷங்கர். அப்போதுதான் அயன் படத்தை இயக்கியிருந்தார் ஆனந்த். 2.0 படம் உடனடியாகத் தொடங்காது, முடிக்க ஒன்றரை வருடமாகும் என ஷங்கர் சொன்னதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். 

2002-ல் கதைக்காக சுசி கணேசன் இயக்குநராக அறிமுகமான விரும்புகிறேன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் படத்தில் சினேகாவின் அழகை இன்னும் கூடுதலாகக் காண்பித்திருப்பார். 

டோலி சஜா கே ரஹ்னா, ஜோஷ், நாயக், தி லெஜண்ட் ஆஃப் பகத் சிங், காக்கி ஆகிய ஹிந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 2002-ல் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் இயக்கிய காக்கி ஹிந்திப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தபோது அதிகச் சம்பளம் பெற்றார். 

இந்தியாவின் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த நேரம். ஷாருக்கான் சுதேசிக்காகவும் ஷங்கர் அந்நியனுக்காகவும் அமீர் கான் ஒரு படத்துக்காகவும் அழைத்தார்கள். அந்த நேரம் பார்த்து படம் இயக்க ஆனந்துக்கு ஆசை வந்தது. முதல் படத்திலிருந்தே சமூகக் கருத்துகளைத் தனது படத்தில் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தார். கந்துவட்டிக் கொடுமை, தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகிய பிரச்னைகளைக் கொண்டு சுபாவுடன் இணைந்து கனா கண்டேன் கதையை எழுதினார். கதையைக் கேட்ட பல நடிகர்களும் தயாரிப்பாளர்களும் பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் படம் தொடங்கத் தாமதமானது. பெரிய சம்பளம் வாங்கிய ஆனந்த், இரண்டு வருடங்கள் வருமானம் இல்லாமல் இருக்க நேர்ந்தது.

ஸ்ரீகாந்த், கோபிகா, பிருத்விராஜ் நடித்த கனா கண்டேன், ஆனந்தின் மற்றொரு திறமையை வெளிப்படுத்தியது. கந்துவட்டிக் கொடுமை தொடர்பான காட்சிகளைப் பரபரப்பான முறையில் இயக்கியிருந்தார். பிருத்விராஜின் அற்புதமான நடிப்பால் புதுவித கதாபாத்திரத்தைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்தது. 2005-ல் வெளியான கனா கண்டேன் படத்துக்கு விமர்சன ரீதியில் பாராட்டுகள் கிடைத்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மீண்டும் ஷங்கர் அழைத்தார். ரஜினி நடிக்கும் ஷங்கர் படம். ஏ.வி.எம். தயாரிப்பு. மறுக்க மனம் வரவில்லை. ரஜினியை இளமையாகக் காண்பித்தார். அவருடைய ஒளிப்பதிவினாலும் படத்தின் வெற்றியினாலும் ஆனந்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் அதுவே அவர் கடைசியாக ஒளிப்பதிவு செய்த படமாக ஆனது. இனிமேல் படம் இயக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

ஒன்றல்ல இரு வெற்றிகள் இயக்குநர் கே.வி. ஆனந்தை வரவேற்றன.

செய்தித்தாள்களில் வரும் பரபரப்பான செய்திகளைக் கொண்டு கதை கோர்க்க ஆனந்துக்கு அழகாக வரும். இந்தியாவிலிருந்து போதைப் பொருள்களை வெளிநாடுகளுக்குக் கடத்துவது, வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த பொருள்களை இந்தியாவுக்குக் கடத்தி வருவது போன்ற செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்ப்போம். அதைத்தான் அயன் கதையாக மாற்றினார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் வாழ்க்கை குறித்து வெளியான ஒரு கட்டுரையை மாற்றானாக மாற்றினார். விடியோ கேம்ஸுக்கு அடிமையாகி அதனால் தற்கொலை செய்துகொள்பவர்களை வைத்தும் அயன் கதையை உருவாக்கினார். தொலைக்காட்சிகளின் தாக்கத்தைக் கொண்டு கவண் கதை உருவானது. 

எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து ஆனந்த் இயக்கிய 2-வது படம் அயன். ஒரு வணிகப் படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது போல அமைந்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை அயன். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் படத்தின் வெற்றியை இரட்டிப்பாக்கின. 

அயன் வெற்றிக்குப் பிறகு ஆனந்த் இயக்கிய படம் - கோ. ஜீவாவைக் கொண்டு ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியும் என நிரூபித்தார். கோ படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு காதல் படம் எடுக்க நினைத்தார் ஆனந்த். அந்த முயற்சி கைகூடாததால் அதில் இருந்த காதல் காட்சிகளையெல்லாம் கோ படத்தில் இணைத்தார். பத்திரிகைகளில் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை கொண்டு உருவாக்கிய கதைதான் கோ. அப்போது அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் கோ படம் அவருக்கு ஏற்றமாதிரியான படம் கிடையாது என மறுத்துவிட்டார். தன் கதை மீது அவ்வளவு நம்பிக்கை. 

கார்த்தியிடம் பேசினார். கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியாமல் போனது. சிம்புவுக்குக் கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். சிம்பு - கார்த்திகாவை வைத்து போட்டோஷுட் எல்லாம் நடந்தன. ஆனால், சீனாவில் பாடலைப் படமாக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் படத்திலிருந்து விலகினார் சிம்பு. உங்களுக்காகத்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன். கதாநாயகனாக யார் நடித்தாலும் சரிதான் எனத் தயாரிப்பாளர் சொல்லிவிட்டார்.

அடுத்ததாக விக்ரமுக்கும் கோ கதை பிடித்துப்போனது. ஆனால் அவர் அப்போது ஒப்பந்தத்தில் இருந்த மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று சொல்ல ஆனந்த் - விக்ரம் கூட்டணி அங்கேயே முறிந்தது. போனை எடுத்து நடிகர்களின் பெயரைப் பார்த்துக்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் தென்பட்ட ஆர்யாவின் எண்ணுக்கு போன் செய்தார். அப்போது பார்த்து அவர் போனை எடுக்கவில்லை. ஜீவாவின் நல்ல நேரம். அவரிடம் கதை சொன்னார் ஆனந்த். சிம்புதான் கதாநாயகன் என்கிற எண்ணத்தில் கதை கேட்டிருக்கிறார் ஜீவா. இடைவேளை வரை கதை சொல்லி முடித்த பின், நானே இவ்வளவு செய்தாலும் சிம்பு என்ன செய்வார் என ஜீவா கேட்க, நீங்கள்தான் கதாநாயகன் எனச் சொல்லியிருக்கிறார் ஆனந்த். 

படத்துக்கு ரூ. 12 கோடி வரை செலவு செய்யத் திட்டமிருந்தார்கள். ஆனால் இதற்கு ஜீவாவின் தந்தையும் தயாரிப்பாளருமான ஆர்,பி. செளத்ரி ஒப்புக்கொள்ளவில்லை. என் மகனை வைத்து ரூ. 8 கோடி வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் பணம் போட்டால் நஷ்டமாகிவிடும் என அறிவுரை கூறியிருக்கிறார். இது அயன் குழு எடுக்கும் படம். தாராளமாகச் செலவு செய்யலாம் எனத் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். அஜ்மல் கதாபாத்திரத்துக்கும் சசிகுமார், நரேன், வினய், கணேஷ் வெங்கட்ராமன் எனப் பலரிடம் கேட்டு கடைசியாக அஜ்மல் தேர்வானார். 

அற்புதமான பாடல்கள் அமைந்த இந்தப் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் முதலில் மறுத்திருக்கிறார். இளைஞர்கள் அரசியலுக்கு வருவது போன்று பல படங்கள் வந்துள்ளன. வேறு கதை பண்ணலாமே என அட்வான்ஸ் தொகை வாங்காமல் இருந்தார். பிறகு ஆனந்த் மீதிருந்த நம்பிக்கையில் இசையமைக்க ஒப்புக்கொண்டு இதற்கும் அற்புதமான பாடல்களை அளித்தார். குவியமில்லா காட்சிப்பேழை பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

2012-ல் சூர்யா நடிப்பில் மாற்றான் படத்தை உருவாக்கினார். வித்தியாசமான படமாக இருந்தாலும் தோல்வியடைந்தது. தனுஷ் நடிப்பில் ஆனந்த் இயக்கிய அனேகன் ஓரளவு வெற்றி பெற்றது. அடுத்ததாக கவண் இயக்கினார். 

கவண் படத்தின் கதையைச் சில கதாநாயகர்கள் மறுத்தபோது அக்கதையை கதாநாயகிக்கு முக்கியத்துவம் வருவதுபோல மாற்றினார் ஆனந்த். நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என அவர் எண்ணிக்கொண்டிருந்தபோது விஜய் சேதுபதி கவண் கதைக்கு ஆதரவளித்தார். அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது. கடைசியாக சூர்யா நடிப்பில் காப்பான் படத்தை இயக்கினார். இதுவும் ஒரு வித்தியாசமான கதை. என்றாலும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அடுத்ததாக சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனந்துக்கு கரோனா வந்து எல்லாவற்றையும் தகர்த்துவிட்டது. 

கதாசியர்களை மதிக்கும் ஒருசில இயக்குநர்களில் ஆனந்தும் ஒருவர். சுபாவுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார். காப்பான் படத்துக்காக பட்டுக்கோட்டை பிரபாகருடன் இணைந்தார். கவண் படத்தை கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவலின் அடிப்படையில் உருவாக்கினார். மேலும் திரைக்கதையில் எழுத்தாளர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் தர எப்போதும் அவர் மறுத்ததில்லை. கதை விவாதங்களை எழுத்தாளர்களுடன் மட்டுமே வைத்துக்கொள்வார். கதையை எழுத்தாளர்களிடம் காசு கொடுத்து வாங்கிக்கொண்டு என் பெயரைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்றே ஒரு பேட்டியில் கூறினார்.

ஷங்கர் போல பிரமாண்டமாக, பரபரப்பாகப் படம் எடுத்தாலும் கதாநாயகர்களுக்காக ஆனந்த் எப்போது கதை யோசித்ததில்லை. அதனால்தான் அயன் போன்ற ஒரு பெரிய வெற்றிக்குப் பிறகு கதையை நம்பி அடுத்த படத்தில் ஜீவாவுடன் இணைந்தார். எழுத்தாளர்களுடன் அமர்ந்து கதையை உருவாக்கி அதன்பிறகுதான் கதாநாயகர்களைத் தேடுவார். கவண் படத்தின் கதையை முடித்தபோது, விஜய் கால்ஷீட் உள்ளது. அவரிடம் கதை சொல்லுங்கள் என்று தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். விஜய்க்கான கதை என்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டார் ஆனந்த். இதனால் அனேகன் படத்துக்கு வாங்கிய சம்பளத்தை விடவும் குறைவான சம்பளமே கவணில் அவருக்குக் கிடைத்திருக்கிறது. 

மேலும் வரிச்சலுகை இல்லாமல் போனாலும் தன்னுடைய படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்கவேண்டும் எனப் பிடிவாதமாக இருந்து கடைசிவரை அதைக் காப்பாற்றினார். காப்பான் படத்தின் தலைப்புக்காக ட்விட்டரில் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் எனக் கேட்டிருந்தார். பலரும் உயிர்கா என்கிற தலைப்பைத்தான் தேர்வு செய்தார்கள். அவருக்கும் அதுதான் பிடித்திருந்தது. கடைசியில் விநியோகஸ்தர்கள் உள்பட பலரும் காப்பான் தான் பொருத்தமாக இருப்பதாகக் கூற அதையே தேர்வு செய்தார். படம் ரூ. 5 கோடிக்கு மட்டும் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்கா என்றுதான் பெயர் வைத்திருப்பேன் என்றார். 

16 படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.வி. ஆனந்த் ஏழு படங்களை இயக்கினார். 1994-ல் ஆரம்பித்த திரை வாழ்க்கையில் இந்த எண்ணிக்கை என்பது குறைவுதான். அவ்வப்போது தனது குழுவினரை மாற்றிவிடுவார். விதவிதமான ஒளிப்பதிவாளர்கள், கதாசிரியர்கள், இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார். ஒரே நபர்களுடன் இணைந்து பணியாற்றினால் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். ஒருவர் சொல்வதை எப்போதும் ஏற்றுக்கொள்வோம். அதை உடைக்கவேண்டும். ஆனால் படத்தொகுப்பாளர் ஆண்டனியுடன் மட்டும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். காரணம், நானும் அவரும் எதிலும் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்றார் ஆனந்த். 

எல்லோரையும் சந்தோஷப்படுத்த எண்ணுவார். எல்லோரையும் சமமாக மதிப்பார். ஏற்காட்டில் ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கே.வி. ஆனந்தின் ரசிகர். அவருடைய திருமணத்துக்கு ஆனந்தை அழைத்துள்ளார். அப்போது செல்ல முடியாத ஆனந்த், காப்பான் கதை விவாதத்துக்காக ஏற்காட்டுக்குச் சென்றபோது தனது ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். 

ஊரடங்குக் காலத்தில் ஆரம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தை வாரத்துக்கு மூன்று முறை சென்று பார்வையிட்டார். தோட்டத்தில் விளையும் மாம்பழங்களைத் தன் நண்பர்களுக்கு வழங்கினார். 

படப்பிடிப்புத் தளங்களில் சாப்பிடுவது பற்றியெல்லாம் யோசிக்காமல் பரபரப்பாகப் பணியாற்றுவார் என அவர் இறந்த பிறகு பலரும் அவருடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். ஆனந்தும் ஒரு பேட்டியில், ஒளிப்பதிவாளராக இருந்தபோது வாழ்க்கை நிதானமாக இருந்தது. நிம்மதியாகத் தூங்கலாம். இயக்குநரான பிறகு தூக்கத்தில் கூட யோசிக்கவேண்டியிருக்கிறது. ஒருவிதமான பதற்ற நிலை படம் வெளிவரும் வரை இருக்கும் என்றார்.

எத்தனை வருடங்கள் ஆனாலும் நினைத்துப் பார்க்கக் கூடிய அளவுக்குப் பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ஆனந்த். புகைப்படக் கலைஞராக ஆரம்பித்த வாழ்க்கையில் பல கனவுகள் அழகாக நிறைவேறியுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT