செய்திகள்

நடிகை சமந்தா பிறந்த நாள்: பல்லாவரத்திலிருந்து கிளம்பிய அழகுப் புயல்!

28th Apr 2022 01:39 PM | எழில்

ADVERTISEMENT

 

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தைப் பார்த்துவிட்டு வருபவர்கள் அத்தனை பேரும் சமந்தா... சமந்தா... என உருகுகிறார்கள். நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் சமந்தா மீதான ஈர்ப்பு ரசிகர்களிடம் குறையவில்லை.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் சமந்தா. வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவோம். எனக்குத் தெலுங்கே தெரியாது. படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கைக் கற்றுக்கொண்டேன் என்கிறார் சமந்தா. சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார். ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

ADVERTISEMENT

அழகான தோற்றம் கொண்ட சமந்தாவுக்கு கல்லூரிக் காலத்தில் மாடலிங் வாய்ப்புகள் வந்துள்ளன. நாயுடு ஹால் உள்ளிட்ட பல நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். விளம்பரப் படங்களில் சமந்தாவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் உடனடியாகத் தான் இயக்கும் மாஸ்கோவின் காவேரி படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். அதுதான் சமந்தா ஒப்புக்கொண்ட முதல் படம். ஆனால் முதலில் வெளியான படம் - விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அதன் தெலுங்குப் பதிப்பான Ye Maaya Chesave. தமிழில் த்ரிஷாவும் தெலுங்கில் சமந்தாவும் கதாநாயகிகளாக நடித்து வெற்றி பெற்ற படம். இருவருமே மற்ற மொழிப் பதிப்பில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் நடித்ததால், உலகத் தமிழ் மாநாட்டுக்காக கெளதம் மேனன் இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலின் விடியோவில் சில நொடிகள் இடம்பெறவும் சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

* முதல் தெலுங்குப் படமே வெற்றி பெற்றதால் தெலுங்குத் திரையுலகம் சமந்தாவை அரவணைத்துக்கொண்டது. அடுத்து தெலுங்கில் நடித்த பிருந்தாவனமும் ஹிட். மகேஷ் பாபுவுடன் நடித்த டூக்குடு, வசூலை அள்ளியது. இதனால் குறுகிய காலத்தில் தெலுங்குத் திரையுலகில் நட்சத்திரமானார் சமந்தா. அடுத்ததாக அமைந்தது தான் ராஜமெளலி இயக்கிய ஈகா.  

* தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் நான் ஈ (ஈகா) வெற்றி பெற்றது. இதனால் தன் சொந்த ஊரில் முதல்முறையாக வெற்றியை ருசித்தார் சமந்தா.

* தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் மட்டும் சமந்தாவால் உடனடியாக வெற்றி பெற முடியவில்லை. பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி போன்ற ஆரம்பக் காலப் படங்கள் வெற்றி பெறாததால் பெரிய படங்களில் நடிக்க முடியாமல் தவித்தார்.

* கல்லூரியில் பயிலும் வரை தமிழ்ப் படங்களை சமந்தா பார்த்தது கிடையாது. ஒருமுறை கல்லூரி விழாவுக்கு வந்திருந்த சூர்யாவைப் பார்த்தவுடன் அவருடைய ரசிகையாகியிருக்கிறார். பிறகுதான் காக்க காக்க படத்தைப் பார்த்திருக்கிறார். அதுதான் நான் பார்த்த முதல் தமிழ்ப்படம் என்கிறார் சமந்தா.

* எந்த நடிகையாலும் இதைத் தாங்கியிருக்க முடியாது. தெலுங்கில் பெரிய வெற்றிகள் பெற்றிருந்த நேரத்தில் தமிழில் ஒரே சமயத்தில் ஷங்கர் இயக்கிய ஐ, மணி ரத்னம் இயக்கிய கடல் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் சமந்தாவுக்குக் கிடைத்தன. ஆனால் அந்தச் சமயத்தில் தோல் ஒவ்வாமை காரணமாக இந்த இரு படங்களிலும் நடிக்க முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டது. சில மாதங்கள் ஓய்வெடுத்துக்கொண்டு பிரச்னைகள் முழுமையாகத் தீர்ந்த பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்ல ஆரம்பித்தார்.

* முதல் படத்துக்குப் பிறகு தொடர்ந்து வாய்ப்பளித்தார் கெளதம் மேனன். நடுநிசி நாய்களில் சிறிய வேடம் அளித்தவர், நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் கதாநாயகியாக சமந்தாவைத் தேர்வு செய்தார். கெளதம் மேனன் இயக்கம், இளையராஜா இசை என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படமும் சமந்தா எதிர்பார்த்த ஒரு வெற்றியைத் தரவில்லை. எனினும் படத்தில் இடம்பெற்ற பல உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு சமந்தாவுக்குக் கிடைத்தது.

* 2013-ல் Seethamma Vakitlo Sirimalle Chettu, Attarintiki Daredi ஆகிய படங்கள் சமந்தாவுக்கு வெற்றியை அளித்தன. இதன்பிறகு மனம், அ ஆ, ரங்கஸ்தலம், ஓ பேபி என தெலுங்கில் ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துவிட்டார் சமந்தா. திருமணத்துக்குப் பிறகும் அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையிலும் புகழிலும் குறையில்லாமல் பார்த்துக்கொள்கிறார்.

* மணி ரத்னம், ஷங்கர் ஆகிய இரு மெகா இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியாததால் சமந்தாவுக்குத் தமிழில் இறங்குமுகமாக இருந்தது. இதை உடைக்க அவர் பயன்படுத்திக்கொண்ட படம் தான் அஞ்சான். தமிழில் அதுவரை நடித்த படங்களில் எல்லாம் அடுத்த வீட்டுப் பெண் போன்ற ஒரு தோற்றத்தை அளித்ததால் அதை மாற்ற முயற்சி செய்தார். தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அஞ்சான் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார். படம் வெற்றி பெறாமல் போனாலும் சமந்தாவுக்கு ஒரு புதிய தோற்றத்தை அளித்தது அந்தப் படம்.

* 2010-ல் அறிமுகமானாலும் 2014-ல் தான் சமந்தா நடித்த ஒரு நேரடித் தமிழ் படம் ஒன்று பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் ஹிட் ஆகி சமந்தாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து விஜய், விக்ரம் தனுஷ், சூர்யா என வரிசையாகப் பெரிய நடிகர்களில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவுக்குக் கிடைத்தது.

* கத்தி வெற்றியை சமந்தாவால் தக்கவைத்துக்கொள்ள முடியாதபடி 2015-ல் வெளியான தங்கமகன், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரு படங்களும் தோல்வியடைந்தன. கத்தி வெற்றிக்குப் பிறகு அதிகமான தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் சமந்தா. அதற்குப் பிறகு சமந்தா நடிப்பில் வெளியான ஆறு படங்களில் 5 தமிழ்ப் படங்களாக இருந்தன.

* 2016 தமிழ்ப் புத்தாண்டுக்கு விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி, சமந்தாவுக்கு இன்னொரு பெரிய வெற்றியை அளித்தது. எனினும் அதே வருடத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த 24 படம் தோல்வியடைந்தது.

* 2017-ல் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடித்த மெர்சல் படமும் வெற்றி பெற்றது. இதனால் விஜய் - சமந்தா கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது. விஷாலுடன் இணைந்து நடித்து 2018-ல் வெளியான இரும்புத் திரையும் வெற்றி பெற்றது.

* இரும்புத் திரைக்குப் பிறகு சமந்தா நடித்த தமிழ்ப் படங்கள் தோல்வியையே தழுவின. சீமராஜா, யு டர்ன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் சமந்தாவுக்கு ஆதரவாக அமையவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நிரூபிக்கும்விதமாக அமைந்துள்ளது. புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றார். படம் ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. புஷ்பா பாடல், தி ஃபேமிலி பேன் 2 இணையத் தொடர் ஆகியவற்றில் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக முன்னேறியுள்ளார் சமந்தா. 

* தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா கதையை கெளதம் மேனன் ஹிந்தியில் இயக்கியபோது சிறிய வேடத்தில் நடித்தார். அவ்வளவுதான். மற்றபடி அவருடைய கவனமெல்லாம் அன்று முதல் இன்று வரை தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும்தான் உள்ளது.

* சமீபகாலமாக நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார் சமந்தா. யு டர்ன், மகாநடி, ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ், ஜானு, தி ஃபேமிலி மேன் 2 போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

* ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்ரனிடமிருந்து இணையம் வழியாக நடிப்புப் பயிற்சியைக் கடந்த வருடம் கற்றுக்கொண்டார் சமந்தா. இதுபற்றி அவர் கூறியதாவது: பல மணி நேரங்களில் ஒரு மணி நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும்போது அதை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு இன்னும் நல்ல நடிகையாக நான் இருப்பேன். பொறுத்திருந்து பாருங்கள். இல்லாவிட்டால்... இந்தப் பதிவை நீக்கிவிடுவேன் என்றார். (இங்கிலாந்தைச் சேர்ந்த 74 வயது ஹெலன் மிர்ரன், தி குயின் படத்தில் எலிசபெத் ராணியாக நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். பலமுறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.) 

* தமிழில் பல படங்களில் சொந்தக் குரலில் பேசியுள்ளார் சமந்தா.

* பிரதியுஷா என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சமந்தா. இந்த அமைப்பின் மூலம் ஏழைக் குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்து வருகிறார்.

* 2017-ல் ஜஸ்ட் ஃபார் வுமன் என்கிற பெண்கள் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம்பெற்றார் சமந்தா. கைத்தறியால் உருவான ஆடைகளை சமந்தா அணிந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தெலங்கானா மாநிலத்தின் கைத்தறி ஆடைகளின் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். தெலங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த இப்பதவி சமந்தாவுக்கு வழங்கப்பட்டது. இதனால் கைத்தறித் தொழிலுக்குப் பிரபலமான டப்பாகா என்கிற கிராமத்துக்குச் சென்று கைத்தறி நெசவாளர்களைச் சந்தித்தார் சமந்தா. தான் இனிமேல் தெலங்கானா கலைஞர்களின் கைத்தறி உடைகளை அதிகளவில் உடுத்துவேன், இந்த உடைகளை மக்களிடம் பரப்புவேன் என்று அவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கைத்தறி உடைகளை அணிந்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றது. கைத்தறிதான் எதிர்காலம். தொழிலாளியால் உருவாக்கப்படும் துணியை அணிந்தால் அதில் எப்போது ஒரு சிறப்பு இருக்கும் என்று கூறினார் சமந்தா.

* பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா, தனது வீட்டுக்கு அருகே உள்ள மலையை எண்ணி உருக்கமாக பதிவொன்றை இன்ஸ்டகிராமில் எழுதினார். அவர் கூறியதாவது: இந்த மலை, நான் வளரும்போது என் வீட்டு மாடியிருந்து தெரியும். எனக்குப் பிடித்த இடம். எந்த ஒரு மனிதரையும் விட என்னை இதற்கு நன்குத் தெரியும். தேர்வு நாள்களின் பரபரப்பான காலைத் தருணங்கள், எல்லாக் கடவுள்களுக்கும் நான் செய்த, நிறைவேற்றாத சத்தியங்கள், என் முதல் காதல், இதயம் உடைந்தது, என் நண்பரின் மரணம், கண்ணீர்கள், பிரியாவிடைகள்... இதனால் தான் என்னுடைய மலைக்குத் தனிப் பதிவு அவசியம் என்று உருக்கமாக எழுதினார்.

* பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகனும் தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை 2017 அக்டோபரில் திருமணம் செய்துகொண்டார் சமந்தா. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறினார்கள். இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் இருவரும் கருத்துவேறுபாடுகள் காரணமாகப் பிரிவதாக அறிவித்தார்கள். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள். தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகத்தில் இலங்கைத் தமிழராக சமந்தா நடித்தார். இதனால் இந்திய அளவில் சமந்தாவுக்குப் புகழ் கிடைத்தது. 

தி ஃபேமிலி மேன் 2 தொடரைத் தடை செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதினார். ஈழப் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் தி ஃபேமிலி மேன் 2 தொடரின் டிரெய்லர் உள்ளது. இந்த இணையத்தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தில் மதநல்லிணக்கத்தைக் காப்பது கடினமாகும் என்பதால் தடை செய்ய வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தி ஃபேமிலி மேன் இணையத் தொடரில் இடம்பெற்ற ராஜி கதாபாத்திரம் சமமற்ற போரினால் உயிரிழந்தவர்களுக்குச் சமர்ப்பணம் என சமந்தா கூறினார். தனது கதாபாத்திரம் பற்றி இன்ஸ்டகிராமில் சமந்தா கூறியதாவது:

ஃபேமிலி மேன் இணையத் தொடருக்கான விமர்சனங்களை படிக்கும்போது என் மனம் சந்தோஷத்தில் நிறைகிறது. இத்தொடருக்காக இயக்குநர்கள் என்னை அணுகியபோது அக்கதாபாத்திரத்தை உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடு வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஈழப் போரில் பெண்கள் குறித்த கதைகள் உள்பட தமிழர் போராட்டத்தின் ஆவணப் படங்களைப் படக்குழுவினர் எனக்குக் காண்பித்தார்கள். அவற்றைப் பார்த்தபோது, நீண்ட காலமாகச் சொல்லொணா துக்கத்தையும் இன்னல்களையும் எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் நிலையை எண்ணி அதிர்ச்சியடைந்தேன். ஆவணப்படங்களைச் சில ஆயிரம் பேர் தான் பார்த்திருக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். பல்லாயிரக்கணக்கான ஈழ மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்தபோது உலகம் எப்படி விலகி நின்று பார்த்தது என்பது அப்போதுதான் தெளிவாகப் புரிந்தது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வீடுகளையும் இழந்துள்ளார்கள். எண்ணற்ற மக்கள் போரினால் உண்டான காயங்களை மனத்தில் சுமந்துகொண்டு வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். ராஜி கதாபாத்திரம் புனைவு என்றாலும் சமமற்ற போரினால் உயிரிழந்தவர்களுக்கும் போரினால் உண்டான ஆறாத வடுக்களைச் சுமந்துகொண்டு வாழ்பவர்களுக்குமான சமர்ப்பணம். ராஜி கதாபாத்திரம் உணர்ச்சிவசப்படாமல் நடுநிலையோடும் நுட்பமாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன். ராஜியின் கதை ரத்தமும் சதையுமாக நமக்கு உணர்த்தும் உண்மை முன் எப்போதையும் விட இப்போது நமக்குத் தேவைப்படுகிறது. மனிதர்கள் ஒற்றுமையுடன் வெறுப்பு, அடக்குமுறை, பேராசை ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று விரும்பினேன். இதை நாம் செய்யத் தவறினால் எண்ணற்ற மக்களின் அடையாளம், விடுதலை, சுய நிர்ணய உரிமை போன்றவை மறுக்கப்படும் என்றார். 

 

Tags : samantha
ADVERTISEMENT
ADVERTISEMENT