செய்திகள்

ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை

9th Apr 2022 01:53 PM

ADVERTISEMENT

 

ஆஸ்கர் விருது விழாவில் நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த காரணத்துக்காக அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.  விருது விழா நடைபெற்ற டால்பி திரையரங்கில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அன்றைய தினம் அவர் வென்றார். கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT

அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித். 

இந்நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்சஸ் அமைப்பின் நிர்வாகக் குழு, ஆஸ்கர் விருது விழா உள்ளிட்ட அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அகாதெமியின் குழுவில் இருந்து சமீபத்தில் வில் ஸ்மித் ராஜிநாமா செய்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்குத் தடை விதிக்கப்பட்டாலும் அவருடைய படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படுவதிலோ அவர் ஆஸ்கர் விருதுகளை வெல்வதிலோ எவ்விதத் தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அகாதெமி அமைப்பின் முடிவை ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT