செய்திகள்

இதெல்லாம் வடிவேலு நடிக்க வேண்டிய படங்களா ?

12th Sep 2021 07:28 PM | கார்த்திகேயன் எஸ்

ADVERTISEMENT

 

கடந்த 10 ஆண்டுகளில் நடிகர் வடிவேலு நடித்து வெளியான படங்கள் மிகவும் குறைவு. இந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் எக்கசக்கமான நகைச்சுவை நடிகர்கள் அறிமுகமாகிவிட்டார்கள். இருப்பினும் நடிகர் வடிவேலுவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. 

ஆனாலும் அவர் நடிக்க வேண்டிய படங்களில் சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எழில் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. இந்தப் படத்தில் நடிகர் விஜய் நடித்த குட்டி என்ற வேடத்துக்கு முதல் தேர்வு வடிவேலு என்பதை இயக்குநர் எழிலே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். 

சார்லி சாப்ளின் நடித்த 'சிட்டி லைட்ஸ்' படத்தின் தழுவலாக இயக்குநர் எழில் பண்ணியிருந்த கதை தான் 'துள்ளாத மனமும் துள்ளும்' படம். சார்லி சாப்ளின் வேடத்துக்கு வடிவேலு தான் சரியாக இருப்பார் என்பது எழிலின் எண்ணம். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியிடம் கதை சொன்ன போது கூட வடிவேலுவை தான் கதாநாயகன் வேடத்துக்கு பரிந்துரைத்திருக்கிறார் எழில். ஆனால் ஆர்.பி.சௌத்ரி தான் அந்த வேடத்துக்கு நடிகர் விஜய்யை மனதில் வைத்து கதை எழுதுமாறு கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

விஜய் அந்த படத்துக்கு வந்த பிறகே இந்தப் படம் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த படமாக மாறியிருக்கிறது. விஜய் தனது வேடத்தில் திறம்பட கையாண்டிருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் எழில் சொன்னதற்கு பிறகு, வடிவேலு இந்த படத்தில் நடித்திருந்தால் ஒரு நல்ல நகைச்சுவை படம் நமக்கு கிடைத்திருக்கும். 

மலையாளத்தில் மோகன்லால், ஸ்ரீநிவாசன், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் 'உடயனானு தரம்'. இந்தப் படம் தமிழில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ் நடிப்பில் 'வெள்ளித்திரை' என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. தமிழில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்துக்கு மலையாளத்தில் காமெடி நடிகரான ஸ்ரீநிவாசன் நடித்திருப்பார். 

இதையும் படிக்க | நாய் சேகர் படத்துக்கு பிரபல இசையமைப்பாளரை பரிந்துரைத்த வடிவேலு: இசையமைப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா ?

இதன் காரணமாக தமிழில் அந்த வேடத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்பது அந்தப் படத்தில் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தனஞ்செயனின் எண்ணம். ஆனால் பிரகாஷ் ராஜ் அதனை மறுத்துவிட்டதாகவும், இந்தப் படத்தின் தோல்விக்கு வடிவேலு நடிக்க வேண்டிய வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்ததே காரணம் என்றும் ஒரு பேட்டியில் தனஞ்செயன் குறிப்பிட்டிருந்தார். 

சுராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் 'படிக்காதவன்'. இந்தப் படத்தில் முதலில் விவேக் வேடத்தில் வடிவேலு தான் நடித்தார். நடிகர் தனுஷுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக வடிவேலுவால் தொடர்ந்து அந்த வேடத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகே அந்த வேடத்தில் விவேக் நடித்தார். நன்றாக கவனித்தால் விவேக் தனது பாணியை முற்றிலும் மாற்றி வடிவேலுவின் உடல் மொழியில் அந்த வேடத்தைக் கையாண்டிருப்பார். 

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வெற்றியைப் பதிவு செய்த படம் 'சூது கவ்வும்'. இந்தப் படத்தில் முதலில் விஜய் சேதுபதியின் வேடத்துக்கு இயக்குநர் நலனின் தேர்வு வடிவேலு தான். வடிவேலுவிடமும் சூது கவ்வும் படக் கதையைச் சொல்லியிருக்கிறார் நலன். இருப்பினும் கதை பிடிக்கவில்லை என்று கூறி அந்த படத்தில் நடிக்க வடிவேலு மறுத்திருக்கிறார். 

இது ஒருபுறம் இருக்க, இளையராஜாவின் மோதிரம் என்ற பெயரில் கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகவிருந்த படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கவிருந்தார். சில காரணங்களால் அந்தப் படம் மேலும் வளரவில்லை. இந்தப் படத்தின் துவக்க விழாவில் இளையாராஜா நடிகர் வடிவேலுவுக்கு மோதிரம் பரிசளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிரது. இந்தப் படம் மட்டும் அப்போது உருவாகியிருந்தால் வடிவேலு கதாநாயகனாக நடித்த முதல் படமாக அது இருந்திருக்கும். 

Tags : prakash raj vadivelu vijay Charlie Chaplin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT