முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடியினர் இருளர் நலனுக்காக ரூ.1 கோடியை நடிகர் சூர்யா வழங்கினார்.
சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஷ், ரஜிஷா விஜயன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயப் பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | வெல்லுமா சூர்யாவின் 'ஜெய் பீம்'? - திரைப்பட விமர்சனம்
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தப் படம் 1995 ஆம் ஆண்டு முன்னாள் நீதிபதி சந்துரு என்பவரின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் குறித்து இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சூர்யா - ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக பழங்குடி இருளர் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டது. அதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர்.