செய்திகள்

ஊரடங்கு முடிந்த பிறகே முதல் பாடல் வெளியீடு: மாநாடு படத் தயாரிப்பாளர்

28th May 2021 01:40 PM

ADVERTISEMENT

 

மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியிடப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்தார் சிம்பு. அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார். சிம்புவின் பிறந்த நாளன்று மாநாடு படத்தின் டீசர் வெளியானது. மாநாடு படத்தின் முதல் பாடலை ரமலான் தினத்தன்று வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வெங்கட் பிரபுவின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானதால் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு முதல் பாடல் வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்துகொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும் கரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழலில் இரக்கமற்று மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். ஊரடங்கு முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே! அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT