செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் நடிகை சாந்தினி புகார்

28th May 2021 05:33 PM

ADVERTISEMENT

 

சென்னை, மே 28: திருமணம் செய்துக் கொள்வதாக நடிகையுடன் 5 ஆண்டுகள் தாம்பதிய வாழ்க்கை நடத்திவிட்டு, தற்போது கொலை மிரட்டல் விடுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் தே.சாந்தினி. சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகார் அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய நாட்டின் துணை தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பணியாற்றி வந்தேன். கடந்த 2017ஆம் ஆண்டு, அப்போது அதிமுக தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனின் தொடர்பு கிடைத்தது.

ADVERTISEMENT

முதலில் அவர், மலேசியாவில் தொழில் தொடங்க வேண்டும் என என்னைச் சந்தித்தார். நாளடைவில் அவர், தனக்கு மனைவி சரியாக அமையவில்லை. வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை எனக் கூறி என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசினார். பின்னர் அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதாகவும் என்னைத் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், என்னை அவர் காதலிப்பதாகவும் கூறினார். அவரது தொடர் வற்புறுத்ததினால் நானும் அவரைக் காதலிக்கத் தொடங்கினேன். நாளடைவில் இருவரும் ஒரே வீட்டில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். நான் வெளியில் செல்வதற்கு அவருக்கு வழங்கப்பட்ட காரையே பயன்படுத்தினேன்.

அதோடு கணவன் மனைவியாக ராமேஸ்வரம், புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, புது தில்லி என பல்வேறு இடங்களுக்குச் சென்றோம். சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது கூட, அவருடைய மனைவி என்ற முறையில் சட்டப்பேரவையை பார்க்க அனுமதிக்கப்பட்டேன். இதற்கிடையே நான் அவரை திருமணம் செய்ய கூறும்போது, தனது முதல் மனைவியைச் சட்டப்படி விவகாரத்து செய்துவிட்டு, திருமணம் செய்துக் கொள்வதாக தெரிவித்து வந்தார். அது வரை இப்போது உள்ளது போல இருக்கலாம் எனக் கூறினார். அதையும் நம்பி, நான் அவருடைய மனைவியாகவே வாழ்ந்து வந்தேன். அவருடன் இருந்தக் காலக்கட்டத்தில் 3 முறை கருவுற்றேன். ஆனால் 3 முறையும் அவர், என்னை வலுக்கட்டாயமாக கருவைக் கலைக்கச் செய்தார்.

அண்மைக்காலமாக, என்னைத் திருமணம் செய்துக் கொள்ளும்படி மணிகண்டனிடம் கூறியபோது, அவர் என்னை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து வந்தார். அதோடு திருமணம் செய்துக் கொள்வதாகவும் கூறி நாள்களை தள்ளிப்போட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் மணிகண்டன், என்னை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என மிரட்டி வருகிறார். அவருடன் நான் தனியாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரவச் செய்துவிடுவேன் என மிரட்டுகிறார். அவர், எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதால், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளேன்.

எனவே காவல்துறையினர், 5 ஆண்டுகளாக என்னுடன் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்புகாரின் அடிப்படையில் சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT