செய்திகள்

சிம்பு, ஹன்சிகா ரசிகர்கள் தற்போதைய நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்: மஹா படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

21st May 2021 04:28 PM

ADVERTISEMENT

 

சிம்பு, ஹன்சிகா நடித்த மஹா படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.

2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

கடந்த அக்டோபர் மாதம் மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 2021 கோடைகாலத்தில் படம் வெளியாகும் என அறிவித்தார் ஹன்சிகா. எட்செட்ரா நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார். 

தனக்குத் தெரியாமல் படத்தை முடித்து, ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறி, படத்தை வெளியிடத் தடை விதிக்க இயக்குநா் ஜமீல், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்நிலையில் இந்தச் சிக்கல் காரணமாக மஹா படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என வெளியான செய்திகளை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மஹா படத்தின் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இயக்குநர் தரப்பில் தயாரிப்பு தரப்பு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை மே 19 அன்று நடைபெற்றது. அப்போது மஹா படத்தின்மீது உயர் நீதிமன்றம் எந்தவொரு தடையையும் பிறப்பிக்கவில்லை. வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளோம். 

மஹா படத்தின் வெளியீட்டுத் தேதியை சரியான நேரத்தில் வெளியிடுவோம். இதனால் சிம்பு, ஹன்சிகா ரசிகர்கள் தற்போதைய நிலையைப் புரிந்துகொண்டு, மஹா படத்தின் வெளியீட்டைத் திட்டமிட இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT