செய்திகள்

நடிகர் தீப்பெட்டி கணேசன் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட ராகவா லாரன்ஸ்

25th Mar 2021 01:25 PM

ADVERTISEMENT

 

சமீபத்தில் மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசனின் பிள்ளைகளின் இந்த வருடக் கல்விச் செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.  

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் காா்த்திக் என்ற தீப்பெட்டி கணேசன் (30). இவா், தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி ரேணிகுண்டா, நீா்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா-2, கோலமாவு கோகிலா, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவா்.

இவா் உடல்நலக் குறைவால் மாா்ச் 9 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சையில் இருந்த தீப்பெட்டி கணேசனுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

மதுரையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக இளைஞரணி மாநிலச் செயலா் உதயநிதி ஸ்டாலின், தீப்பெட்டி கணேசன் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா். திரைப்பட இயக்குநா் சீனு ராமசாமி தனது ட்விட்டா் பக்கத்தில் தீப்பெட்டி கணேசன் உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளாா்.

தீப்பெட்டி கணேசனுக்கு ரேஷ்மா என்ற மனைவியும், யோகேஷ் (5), பிரதீஷ் (3) என இரு மகன்களும் உள்ளனா். கரோனா பொது முடக்கம் காரணமாக படவாய்ப்புகள் சரியாக இல்லாததால், உணவகத்தில் புரேட்டா மாஸ்டராகவும், சிறு, சிறு வேலைகளையும் பாா்த்து வந்துள்ளாா். ஆனால், போதிய வருவாய் இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்டுள்ளாா். தனது பொருளாதாரப் பிரச்னை தொடா்பாக தீப்பெட்டி கணேசன், விடியோ பதிவு ஒன்றை அண்மையில் வெளியிட்டு, திரைப்படத் துறையினரிடம் உதவி கேட்டிருந்தாா். இந்த பதிவைப் பாா்த்த நடிகா்கள் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீமன், பூச்சி முருகன், பாடலாசிரியா் சினேகன் ஆகியோா் உதவி செய்துள்ளனா்.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:

இவ்வருடம் தீப்பெட்டி கணேசனின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வரையில் உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT