செய்திகள்

இயக்குநர் ஜனநாதனின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி

16th Mar 2021 01:01 PM

ADVERTISEMENT

 

மறைந்த இயக்குநர் ஜனநாதனின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வந்த படம் லாபம். இப்படத்தின் படத்தொகுப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தன்னுடைய வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளாா் இயக்குநர் ஜனநாதன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டாா்.

இதில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவா்களின் தொடா் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

ADVERTISEMENT

2003-ல் இயற்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் எஸ்.பி. ஜனநாதன். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவருடைய முதல் படமான இயற்கை, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது.

இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு ஜனநாதனின் உடல் மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஜனநாதனின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாதன் மறைவுக்குப் பிறகு ட்விட்டரில் அவருடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, லவ் யூ சார் என தனது இரங்கலைப் பதிவு செய்தார் விஜய் சேதுபதி. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT