செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி பாடல் இடம்பெறாதது ஏன்?: கார்த்திக் சுப்புராஜ் பதில்

8th Jun 2021 12:11 PM

ADVERTISEMENT

 

ஜகமே தந்திரம் படத்தில் புஜ்ஜி உள்பட மூன்று பாடல்கள் இடம்பெறாது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். 

2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

ADVERTISEMENT

திரையரங்கில் வெளிவரமுடியாத சூழல் நிலவுவதால் ஜகமே தந்திரம் படம் ஜூன் 18 அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் வரவேற்பு அளித்த புஜ்ஜி பாடல் உள்பட மூன்று பாடல்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெறாது என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் படம் பற்றி கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்ததாவது:

இந்தப் படத்துக்குப் படப்பிடிப்பு முடிந்தபிறகு தான் தலைப்பை யோசித்தோம். சுருளி எனத் தற்காலிகமாக தலைப்பு வைத்திருந்தோம். அதையும் தாண்டி படத்தின் தலைப்பு கதையைச் சொல்லவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் நினைத்தாலே இனிக்கும் பாடலை கேட்க நேர்ந்தது. அதில் வந்த ஜகமே தந்திரம் என்கிற வார்த்தை பிடித்தது. கதைக்கும் இது சரியாக இருக்கும் என்று நினைத்து தலைப்பாக வைத்துவிட்டோம்.

படத்தை எடிட் செய்து முடித்தபோது எங்களால் புஜ்ஜி பாடலை உள்ளே நுழைக்க முடியவில்லை. திரையரங்கில் வெளிவருவதற்காக உருவான படத்திலேயே நீளம் கருதி புஜ்ஜி பாடலை நீக்கிவிட்டோம். திரையரங்குக்காகத் தயார் செய்து வைத்திருந்த படத்தில் புஜ்ஜி பாடலைத் தவிர மற்ற பாடல்கள் எல்லாம் இருந்தன. 

திரையரங்கில் இடைவேளை விட்டு படம் பார்ப்பதற்கும் ஓடிடியில் இடைவெளி இல்லாமல் படம் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. அதனால் மேலும் இரு பாடல்களை ஓடிடிக்காக நீக்கினோம். இது அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவாகவே இருந்தது. திரையரங்கில் இடைவேளை விட்டு அதற்குப் பிறகு ஒரு பாடல் வரும்போது சிக்கல் இல்லை. ஓடிடியில் தொடர்ந்து படம் பார்க்கும்போது நடுவில் ஒரு பாடல் வரும்போது கதையின் ஓட்டம் தடைபடுவது போல இருந்தது. ஓடிடியில் ரகிட ரகிட பாடல் நிச்சயம் இடம்பெறும். ஆனால் படத்தில் உள்ள எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் ஓடிடியில் இருக்காது. அதனால் தான் இரண்டு விடியோ பாடல்களை முதலிலேயே வெளியிட்டோம். 

புஜ்ஜி பாடலை நீக்கியதை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஏற்றுக்கொண்டார். இந்த இடத்தில் பாடல் இருந்தால் கதையின் ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார். மூன்று பாடல்களை நீக்கிவிட்டு படம் பார்த்தபோது நெட்பிளிக்ஸுக்குச் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. ஒரிரு மாதம் கழித்து இந்தப் படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என நினைக்கிறேன். அப்போது நீக்கப்பட்ட இரு பாடல்களும் இருக்கும் என்றார். 

Tags : Jagame Thandhiram Karthik Subbaraj Buji song
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT