செய்திகள்

காக்கா முட்டைக்குப் பிறகு ஒரு வருடம் எந்தப் படமும் கிடைக்கவில்லை: அஸ்வினுக்குப் பேட்டியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

8th Jun 2021 04:36 PM

ADVERTISEMENT

 

காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காகப் பாராட்டுகள் கிடைத்தாலும் அடுத்த ஒரு வருடம் படத்தில் நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை எனப் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின், தனது யூடியூப் சேனலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பேட்டியை வெளியிட்டுள்ளார். அஸ்வினிடம் காக்கா முட்டை படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது:

விஜய் சேதுபதியுடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது, காக்கா முட்டை பட வாய்ப்பு வந்தது. வழக்கமான கதாநாயகி வேடம் கொண்ட படத்தில் நடிப்பதா, காக்கா முட்டையில் நடிப்பதா எனக் குழப்பம் இருந்தது. அப்போது விஜய் சேதுபதி சொன்னார், நான் உங்களுக்கு அறிவுரை சொல்லவில்லை. மணி கண்டன் நல்ல இயக்குநர். அவர் படத்தில் நடித்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம். கற்றுக்கொள்ள விரும்பினால் இந்தப் படத்தைத் தேர்வு செய்யுங்கள் என்றார். மணிகண்டன் இயக்கிய விண்ட் குறும்படத்தைப் பார்த்த பிறகு காக்கா முட்டை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜய் சேதுபதி மீதும் நம்பிக்கை இருந்தது. அப்போது எனக்கு 23 வயது. இரு குழந்தைகளின் அம்மாவாக காக்கா முட்டையில் நடித்தேன். 

ADVERTISEMENT

காக்கா முட்டை வெற்றியடைந்த பிறகு நிறைய வாய்ப்புகள் வரப்போகின்றன, அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என நினைத்தேன். ஆனால் அடுத்த ஒரு வருடத்துக்கு ஒரு படமும் வரவில்லை. பல பிரபலங்கள் என்னை வாழ்த்தினார்கள். எங்கே போனாலும், என் பெயர் தெரியாமல் காக்கா முட்டையில் அம்மாவாக நடித்தீர்கள் தானே என்பார்கள். இது சரியாக வருவது போலத் தெரியவில்லை, எத்திராஜ் கல்லூரியில் பி.காம். படித்ததால் சான்றிதழ்களையெல்லாம் தூசி தட்டி ஐ.டி. அல்லது வேறு துறையில் வேலைக்குச் செல்லலாம் என நினைத்தேன். பிறகு பொறுமையோடு நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தேன். அப்போதுதான் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிவின் பாலி, அர்ஜுன் ராம்பால் ஆகியோருடன் இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகளும் அடுத்தடுத்து கிடைத்தன. பொறுமையோடு இருந்ததால் நல்ல விஷயங்கள் நடைபெற ஆரம்பித்தன. காக்கா முட்டையால் தான் இன்றுவரை எனக்கு அனைத்தும் கிடைத்தன. அந்தப் படத்தில் நடிக்காமல் போயிருந்தால் இப்போது இங்கு வந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்க மாட்டேன் என்றார்.

Tags : Aishwarya Rajesh Ashwin காக்கா முட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT