செய்திகள்

'திமுகவின் பிரச்சாரப் படம்...' - 'சார்பட்டா பரம்பரை' குறித்து ஜெயக்குமார் கடும் கண்டனம்

DIN

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளியான படம் சார்பட்டா பரம்பரை. நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

1970களில் குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. அந்த காலக்கட்டத்தைச் சேர்ந்த அரசியலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் எம்ஜிஆர் குறித்து தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டு கால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய சார்பட்டா படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் விளையாட்டு துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாபிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாக கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப் படுத்தி கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர்  எம்ஜிஆர்.

1980 ம் ஆண்டு தமிழ் நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்து சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்கு குத்து சண்டை மீது காதல் கொண்டிருந்தார். 

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால் சார்பட்டா திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்.ஜி.ஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விடக் கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்த பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கி போனதன் காரணம் என்னவோ? 

அதிகாரம் மையம் இடத்தில் அடைக்கலமாக, எதிர் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா ரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

எம்ஜிஆர்  படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற என்னற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வர்த்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சர்பேட்டா படத்தில் தவறாக சித்தரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT