செய்திகள்

ஜூலை 15-ல் வெளியாகும் ஆர்ஆர்ஆர் பட மேக்கிங் விடியோ

12th Jul 2021 02:07 PM

ADVERTISEMENT

 

ராஜமெளலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் விடியோ ஜூலை 15 அன்று வெளியாகவுள்ளது.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

ADVERTISEMENT

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், கொரியன் உள்பட வெளிநாட்டு மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமை ஜீ சினிமா (ஹிந்தி), ஸ்டார் (தெலுங்கு), விஜய் டிவி (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் (கன்னடம்) போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இன்னும் இரு பாடல்கள் மட்டுமே மீதமுள்ளன. மற்றபடி ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இரு மொழிகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்டார்கள். இதர வேலைகள் விரைவில் முடிவடைந்துவிடும் எனப் படக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

ஜூலை 15 அன்று ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : RRR 2021
ADVERTISEMENT
ADVERTISEMENT