செய்திகள்

விசித்திரன் படத்தலைப்பு விவகாரத்தில் இயக்குநர் பாலாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

சென்னை, ஜன.20: விசித்திரன் என்கிற தலைப்பைப் பயன்படுத்தி திரைப்படம் எடுக்க தடை கோரிய வழக்கில் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் பிறப்பித்து 14-ஆவது மாநகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018-ல் வெளியான மலையாளப் படம் - ஜோசப். இப்படத்தின் தமிழ் ரீமேக்கைத் தயாரித்துள்ளார் இயக்குநர் பாலா. ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், அத்மியா ராஜன் நடிப்பில் எம். பத்மகுமார் இயக்கிய மலையாளப் படம் - ஜோசப். இந்தப் படத்தில் நடித்த ஜூஜு ஜார்ஜ், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த நடிப்புக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றார். ஜோசப், தமிழில் விசித்திரன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் பாலா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே இயக்கியுள்ளார். தமிழில் கதாநாயகனாக ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார். இசை - ஜி.வி. பிரகாஷ்.

சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சாலிகிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், நான் சிஎஸ்கே புரொடக்சன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கடந்த 2015-ஆம் ஆண்டு விசித்திரன் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்தேன். இந்தப் பதிவை அவ்வப்போது புதுப்பித்து வருவதால்  மார்ச் மாதம் வரை இந்த தலைப்பு எனக்கு சொந்தமானதாகும். இந்த தலைப்பைப் பதிவு செய்வதற்கு முன் யாராவது இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார்களா  என்பது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலிடம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர்  கில்டு விசாரணை நடத்தி உறுதி செய்தது. அதன் பின்னரே இந்த தலைப்பை எனக்கு ஒதுக்கியது. 

இந்த நிலையில் விசித்திரன் என்கிற தலைப்பைப் பயன்படுத்தி பி ஸ்டூடியோ நிறுவனர் பாலா பெரியசாமி ஒரு படத்தை தயாரித்துள்ளார். இதில் இணை தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் விளம்பரம் யூடியூப்பில் அண்மையில் வெளியானது. எனவே எனக்கு சொந்தமான விசித்திரன் தலைப்பை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு 14-ஆவது மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்  வி. வி.கிரிதர் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவுக்கு  பி ஸ்டூடியோ நிறுவனத்தின் உரிமையாளர் பாலா பெரியசாமி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வரும் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT