செய்திகள்

சிம்புவின் ஈஸ்வரன் பட வெளியீட்டில் சிக்கல்: டி. ராஜேந்தரின் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் விளக்கம்

13th Jan 2021 12:52 PM

ADVERTISEMENT

 

ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டைத் தடுக்கவில்லை எனத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டி. ராஜேந்தரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் நாளை (ஜனவரி 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசை - தமன். ஒரு மாதத்துக்குள் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்துத் தந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சிம்பு. மாதவ் மீடியாவின் மாதவ் காப்பா தயாரித்துள்ளார். 

சிம்பு இதற்கு முன்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் நஷ்டமடைந்ததால் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. சிம்புவை விமர்சித்து கருத்துகளை வெளியிட்ட மைக்கேல் ராயப்பன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை சிம்பு ஈடுகட்ட வேண்டும் எனக் கூறினார். இந்தப் பிரச்னை தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு முடிவெடுத்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தை வெளியிடாமல் தடுக்கிறார்கள் என்று சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாஸ்டர் படம் வெளியாகும்போது சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியாகாமல் இருக்க சிலர் பின்னால் நின்று வேலை பார்க்கிறார்கள். நான் நம்புவது இறைவனை. நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு இருக்கும்போது வழக்கை மீறி இந்தப் படத்தை நிறுத்த வேண்டும் என்று கியூப் நிறுவனத்துக்குக் கடிதம் கொடுக்கிறார்கள். மைக்கேல் ராயப்பனின் பிரச்னையை எடுத்து வைத்து, கடைசி நிமிடத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் சூழலில், கியூப் நிறுவனத்துக்குத் தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதுகிறார்கள். எங்களுடைய அனுமதி பெறாமல் நீங்கள் எந்த வேலையையும் செய்யக்கூடாது என்று கடிதம் எழுதியிருக்கிறார்கள். இதில் ஈஸ்வரன் படத்தைத் தயாரித்த மாதவ் மீடியா செய்த தவறு என்ன? மிரட்டுகிறார்கள். இதுபற்றி அனைத்துத் தரப்பினரிடமும் புகார் கொடுப்பேன். இதை நான் விடமாட்டேன். கடவுள் ஈஸ்வரன் அருள் இருந்தால் ஈஸ்வரன் படம் வெளிவரும் என்றார். 

டி. ராஜேந்தரின் குற்றச்சாட்டுக்கு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிடிப்பின்போது சிம்பு நிறைய இடைஞ்சல்கள் கொடுத்தார். படத்தில் உள்ள நான்கு கதாபாத்திரங்களில் இரண்டில் மட்டுமே சிம்பு நடித்தார். பாங்காக்கில் படப்பிடிப்பு இருந்தபோது மூன்று முறை சிம்புவுக்கு டிக்கெட் எடுத்தும் அவர் வரவில்லை. அப்போது சிம்பு சொன்னார், இந்தப் படத்தை எப்படியாவது முடித்துவிடுவோம். அடுத்த படத்துக்குச் சம்பளம் வாங்காமல் நடித்துத் தருகிறேன். நஷ்டத்தை அது ஈடுகொடுக்கும் என்றார். அதனால் தான் அந்தப் படத்தை வெளியிட்டோம். எதிர்பார்த்தபடி அந்தப் படம் ஓடவில்லை. சொன்னபடி அடுத்த படத்திலும் சிம்பு நடித்துத் தரவில்லை. 

பல மாதங்கள் காத்திருந்த பிறகு தான் என் பிரச்னைகளைச் செய்தியாளர் சந்திப்பில் சொன்னேன். பிறகு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். 2 வருடங்கள் விசாரித்தார்கள். என் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு ஒரு முடிவு எடுத்தார்கள். சிம்பு ஒரு படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கு ஈடான தொகையைத் தரவேண்டும். அதை மூன்று படங்களிலிருந்து தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டது. தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகமும் இதையே சொன்னார்கள்.

ஈஸ்வரன் படத் தயாரிப்பாளரும் இதற்கு ஒப்புக்கொண்டார். சிம்புவுக்கு ரூ. 4 கோடி சம்பளப் பாக்கி உள்ளது. அதிலிருந்து எனக்குத் தந்துவிடுவதாகச் சொன்னார். அந்தப் பணத்தில் ரூ. 2 கோடியே 40 லட்சத்தைத் தயாரிப்பாளர் சங்கத்தில் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு தான் அவரால் படத்தைத் தணிக்கைக்கு அனுப்ப முடிந்தது. இப்போது அந்தத் தயாரிப்பாளர் ஏதோ ஒரு நெருக்கடியில் மாற்றி பேசுகிறார். 

நாங்கள் யார் படத்தையும் நிறுத்தவில்லை. நிறுத்த வேண்டும் என்றால் படப்பிடிப்புக்குச் செல்லும்போதோ தணிக்கைக்குப் படத்தை அனுப்பும்போதோ நாங்கள் நிறுத்தியிருக்கலாம். அந்த எண்ணம் யாருக்கும் இல்லை. பணத்தை மூன்று படங்களில் மீட்டெடுக்க வேண்டும் என்று இதுபற்றி கடந்த நிர்வாகத்தில் பேசி முடித்தது. அதை அமல்படுத்த வேண்டும் என்றுதான் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மற்றபடி சிம்புவின் படத்தை நிறுத்த எண்ணவில்லை. டி.ஆர். தவறான தகவல்களைத் தருகிறார். சிம்புவின் சம்பளத்தில் இருந்து தயாரிப்பாளர் ரூ. 2.40 கோடி கட்ட வேண்டும். அடுத்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடமும் இதுபற்றி கூறியுள்ளார்கள். அவரும் தருகிறேன் என்று கூறியுள்ளார். அடுத்ததாக ஞானவேல் ராஜாவும் பணத்தைக் கட்டிவிடுவதாகக் கூறியுள்ளார் என்றார்.

Tags : T Rajender Eeswaran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT