செய்திகள்

திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள்: முழு ஜி.எஸ்.டி. வரியை நாங்கள் ஏன் செலுத்த வேண்டும் என டி.ஆர். கேள்வி!

9th Jan 2021 04:45 PM

ADVERTISEMENT

 

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி என்றால் நாங்கள் மட்டும் முழு ஜி.எஸ்.டி. வரியை ஏன் செலுத்த வேண்டும் என டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி கூடுதல் காட்சிகளைத் திரையிட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் இந்த விவகாரம் குறித்து ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். விடியோவில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், மக்கள் நலனைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதற்கு ஒரு சின்ன தூண்டுகோல்.

பொங்கலையொட்டி, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்படலாம் என்று தமிழக அரசு கொடுத்தது அறிக்கை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக 50 சதவீதம் தான் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு விதித்துவிட்டது தணிக்கை.

மத்திய அரசு சொல்கிறது, 50 சதவீத இருக்கைகள் தான் அனுமதிக்க வேண்டும். அப்படியென்றால் நாங்கள் ஏன் முழுமையாக 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்தவேண்டும்?

திரையரங்கில் டிக்கெட் கொடுக்கக்கூடாது ஃபுல்லா, ஆனால் நாங்க ஜி.எஸ்.டி. வரி மட்டும் செலுத்தணும் ஃபுல்லா. என்னங்க இது கொடுமை?

இந்தத் தமிழ்நாட்டுல பல இடங்களில் இல்லை, ஒரு சில ஊர்களில் மட்டும்தான் இருக்கிறது கடற்கரை, இந்தக் கடற்கரையை விட்டால் மக்களுக்கு என இருக்கிற ஒரே பொழுதுபோக்கு துறை இந்த சினிமா துறை. இந்த மக்களுக்குப் பொழுதுபோக்க வேறு என்ன இருக்கிறது வழி? ஒரு சினிமா டிக்கெட் எடுத்தா அவங்க கட்டவேண்டியது வரி, அவங்க தலையில ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி. 

மாநில அரசின் கையில் தான் உள்ளது உள்ளாட்சித் துறை வரி. அதனால் பொங்கல் போனஸாக உள்ளாட்சித் துறை வரி 8 சதவீதத்தை நீக்கவேண்டும், எங்கள் கலை உலகின் கஷ்டத்தைப் போக்க வேண்டும், மக்களின் இந்த உணர்வைக் கட்டிக் காக்க வேண்டும் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT