செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் ஜகமே தந்திரம்: மெளனம் காக்கும் தனுஷ்!

23rd Feb 2021 11:33 AM

ADVERTISEMENT

 

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. 

ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன்.

மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

ADVERTISEMENT

சூரரைப் போற்று படம் போல ஜகமே தந்திரமும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகக் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செய்திகள் வெளியாகின. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் அப்போது மறுத்தார். இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது: திரையரங்குகள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்பவேண்டாம். ஒட்டுமொத்தக் குழுவும் ரகிடரகிட என தனுஷ் பாடுவதைத் திரையரங்கில் காணக் காத்திருக்கிறது என்றார்.

மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானபோது அதற்கு தனுஷ் ஆதரவு தெரிவித்தார். அதேபோல ஜகமே தந்திரம் படமும் திரையரங்கில் வெளியாக வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்து தனது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். அதன்படி, இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புடன் படத்தின் டீசரும் வெளியானது. 

தனுஷின் விருப்பத்துக்கு எதிராக தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் தங்களுடைய அதிருப்தியைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். மேலும் டீசரில் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை என்றொரு சர்ச்சையும் உருவாகியுள்ளது. 

ஜகமே தந்திரம் படத்தின் ஓடிடி அறிவிப்பும் டீசரும் வெளியாகி ஒரு நாள் ஆகியும் தனுஷ் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு எதிர்வினையும் வெளிப்படவில்லை. கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் யூடியூப் தளத்தில் 6 மில்லியன் பார்வைகளை அடைந்தது குறித்து நேற்றிரவு ஒரு ட்வீட் வெளியிட்டார் தனுஷ். எனினும் ஜகமே தந்திரத்தின் ஓடிடி அறிவிப்பு, டீசர் வெளியீடு குறித்த எந்தவொரு தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிரவில்லை. தனது விருப்பத்துக்கு எதிராக தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளதால் தனுஷ் அதிருப்தி அடைந்துள்ளார். அதனால் தான் ஜகமே தந்திரம் படத்தின் புதிய தகவல்களை ட்விட்டரில் பகிரவில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் ஜகமே தந்திரம் படம் பற்றிய தனது கருத்துகளை தனுஷ் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Dhanush Jagame Thandhiram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT