செய்திகள்

இயக்குநர் வசந்தபாலனின் 25 வருடக் கனவு!

11th Feb 2021 12:55 PM

ADVERTISEMENT

 

தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

ஜி.வி. பிரகாஷ், அபர்னதி நடிப்பில் ஜெயில் என்கிற படத்தை இயக்கியுள்ளார் வசந்தபாலன். ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் ஆகிய படங்களை அவர் இயக்கியுள்ளார். ஜெயில் படம் விரைவில் வெளிவரவுள்ளது. 

இந்நிலையில் தனது விருதுநகர் பள்ளி நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வசந்தபாலன் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் படத்தை வசந்தபாலன் இயக்கவுள்ளார். இதுதொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.

அதில் ஒருவரான வரதராஜன், வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் துவங்கி அவரது எல்லாத் திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர். வெயில் திரைப்படத்தில் இடம்பெற்ற பரத் கதாபாத்திரம், லோக்கல் விளம்பர நிறுவனம் எல்லாம் அவரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை.

இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல், தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக உள்ளார். மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கணினி உப பொருள்களைச் சிறியதாக விற்கத்துவங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.

விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும். தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்தியைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் வசந்தபாலன், 25 வருடக் கனவு எனக் குறிப்பிட்டுள்ளார். வசந்தபாலனின் 25 வருடக் கனவு நிறைவேறியதற்குப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Tags : Vasanthabalan Jail
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT