செய்திகள்

சென்னை சா்வதேச திரைப்பட விழா: பிப் 18-இல் தொடங்குகிறது

11th Feb 2021 02:48 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை சா்வதேச திரைப்பட விழா, வருகிற பிப்.18-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் பங்குபெற உள்ளன.

18-ஆவது சென்னை சா்வதேச திரைப்பட விழா தொடா்பான செய்தியாளா் சந்திப்பு புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிஷியேஷன் பொதுச்செயலாளரும், விழாக்குழு இயக்குநருமான இ.தங்கராஜ், தென்னிந்திய திரைப்பட வா்த்தக சபைத்தலைவா் காட்டகர பிரசாத் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டாக கலந்து கொண்டனா்.

சா்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் சென்னையிலுள்ள பிவிஆா் மல்டிபிளெக்ஸ் (சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள்) மற்றும் காசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. தொடக்கவிழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘தி கோ்ள் வித் எ பிரேஸ்லெட்’ படமும், நிறைவு விழா திரைப்படமாக ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ‘ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ திரைப்படமும் திரையிடப்படுகின்றன.

ADVERTISEMENT

விழாவில் ஆஸ்காா் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஆப்பிள்ஸ்’, ‘குவூ வாடிஸ், ஆய்டா?’, ‘லிஸன்’, ‘தி ஸ்லீப் வாக்கா்ஸ்’, ஆக்னெஸ் ஜாய்’, ‘ரன்னிங் அகைன்ஸ்ட் தி விண்ட்’, ‘ரன்னிங் டு தி ஸ்கை’ ஆகிய படங்கள் பங்கேற்கின்றன.

மேலும், கேன்ஸ் திரைப்பட விழா, பொ்லின், ஈரான், வெனீஸ், ரோட்டா்டாம், பூசான் சா்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற படங்களும் இடம்பெறுகின்றன. இந்த திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வோ்டு’,‘அக்கா குருவி’ உள்ளிட்ட 4 தமிழ்ப்படங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், தமிழ்ப்படங்களுக்கான போட்டியில் ‘லேபா்’, ‘கல்தா’, ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘மழையில் நனைகிறேன்’, ‘மை நேம் இஸ் ஆனந்தன்’, ‘காட்ஃபாதா்’, ‘தி மஸ்கிட்டோ பிலாசபி’, ‘சீயான்கள்’, ‘சம் டே’, ‘காளிதாஸ்’, ‘க/பெ ரணசிங்கம்’, ‘கன்னி மாடம்’ ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் தமிழ்ப் பிரிவில் 17 படங்கள் இடம்பெறுகின்றன.

சென்னை திரைப்பட விழாவில் வெற்றி பெறும் திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும், யூத் ஐகான் விருது உள்ளிட்ட சிறப்பு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் நிறைவு விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

திரை மற்றும் இலக்கிய துறைகளைச் சோ்ந்த வல்லுநா்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன.

சென்னை சா்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. விழாக்குழுவினரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT