செய்திகள்

வாட்ஸ்ஆப், டெலிகிராமில் சின்னத் திரைத் தொடர்கள்!

4th Aug 2021 01:28 PM | விகதகுமாரன்

ADVERTISEMENT

 

வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளின்வழி, தொலைக்காட்சிகளை உலுக்கக் கூடியதான அடுத்த அதிரடிப் பகிர்வும் பரவலும்  தொடங்கியிருக்கிறது.

இந்தப் பகிர்வால் தொலைக்காட்சி நிறுவனங்களின் நேயர்களுக்கான டிஆர்பி ரேட்டிங் - டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் (தற்போது பார்க் - பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில்) மதிப்பீடுகள் அதிரடியாகக் குறைந்துவிடும் ஆபத்து நேரிட்டிருக்கிறது.

பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற, அதிக பார்வையாளர்களைக் கொண்ட சின்னத் திரைத் தொடர்கள் எல்லாம் விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் 21 நிமிஷங்கள் ஓடும் ஒளித் துண்டுகளாக - எபிசோட்களாக - தற்போது  வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளில் பரவத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

நீண்ட காலமாக செல்லிடப் பேசி அழைப்புகளிலும் குறுஞ்செய்திகள் வழியேயும் தொடர்பு கொண்டிருந்துவிட்டுத் திடீரென வாட்ஸ்ஆப் வந்தபோது பயனீட்டாளர்கள் பெரிதும் வியந்தனர், விரும்பினர்.

இதையும் படிக்க | திரில்லர்தான், ஆனால், காதல் கதை: திட்டம் இரண்டு - திரைப்பட விமர்சனம்

மிக எளிதாக எல்லாருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள முடிந்தது, யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என.

புகைப்படங்களுடன் அச்சுப் பிரதிகளும் ஒலிப்பிரதிகளும்கூட பரவலாகப் பகிரப்பட்டன. பயனீட்டாளர்களைப் பொருத்தவரை இது மிகப் பெரிய வரமாகப் பார்க்கப்பட்டது, இப்போதும் பார்க்கப்படுகிறது.

ஒரு கட்டத்தில் நாளிதழ்களும் வார இதழ்களும் பி.டி.எப். பிரதிகளாகப் பகிரப்பட்டன. யாரோ எங்கிருந்தோ இவற்றைப் பிரதி எடுத்துப் பகிர, சில மணி நேரங்களில் இவையெல்லாம் பல நூறு, பல்லாயிரம் வாட்ஸ்ஆப் பயனீட்டாளர்களை - நாளிதழ், வார இதழ் வாசகர்களையும் - சென்றடையத் தொடங்கியது.

இந்தப் பரவல், நாளிதழ், வார இதழ்களின் அச்சுப் பிரதிகளின் விற்பனையிலும் எதிரொலித்தது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டபோதும் இவ்விதமான பகிர்தலை உலகம் முழுவதுமே தடுத்துநிறுத்த முடியவில்லை.

அச்சு இதழ்கள் இப்போது வாட்ஸ்ஆப் குழுக்களுடனும் போட்டியிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதனிடையே, பல நூறு பக்கங்களைக் கொண்ட நூல்களும் பகிரப்படுகின்றன, பதிப்பகங்களைக் கதறச் செய்யும் வகையில்.

வாட்ஸ்ஆப்பைத் தொடர்ந்து, டெலிகிராம் ஆப் வந்தபோது இதன் பரவல் மேலும் மோசமானது.

வாட்ஸ்ஆப் குழுக்களில் ஒவ்வொன்றிலும் 236 உறுப்பினர்கள் மட்டும்தான் இருக்க முடியும். மேலும் பலருக்கு அனுப்ப நினைத்தால் கூடுதல் குழுக்கள் அமைத்துத் தனித்தனியேதான் அனுப்ப வேண்டும். ஆனால், டெலிகிராம் குழுக்களில் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

டெலிகிராம் குழுக்களில் சகட்டுமேனிக்கு அச்சுப் பிரதிகள் பகிரப்பட, அடுத்து, திரைப்படங்களையும் அதிக அளவில் பகிரத் தொடங்கிவிட்டனர். திரைப்படங்களுக்காகவென்றே பல குழுக்களும் செயல்படுகின்றன.

இதுவரையில்லாத வகையில் தற்போது சின்னத் திரைத் தொடர்களும் சமூக ஊடகக் குழுக்களில் வலம்வரத் தொடங்கியுள்ளன.

இரவு ஒளிபரப்பாகக் கூடிய தொடர்களின் அடுத்தடுத்த எபிசோட்கள் முன்னதாகவே செல்லிடப் பேசியிலேயே கிடைக்கத் தொடங்கிவிடுகின்றன. இனி, தொடர் ஒளிபரப்பாகும் நேரத்துக்காக யாரும் காத்திருக்கவும் வேண்டாம், டிவி முன் பார்த்திருக்கவும் வேண்டாம்.

பார்வையாளர்களின் உள்ளங்கைக்கே மிகச் சிறப்பாக அவரவர்  விரும்பும் தொடர்களின் பகுதிகள் வந்தடையும் வசதி ஏற்பட்டிருக்கிறது. வழக்கம்போல, பயனீட்டாளர்கள் என்ற அளவில் எல்லாருக்கும் நல்லதுதான். டி.வி. வேண்டாம், குறிப்பிட்ட டி.வி.யின் செயலியைப் பணம் செலுத்திப் பெறவும் வேண்டாம், எதுவும் வேண்டாம், ஒரு செல்லிடப்பேசி போதுமானது. எதை வேண்டுமானாலும், விரும்பும் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்க  | திடீர் திருமணம் ?: திருமண விடியோவை பகிர்ந்த 'கண்ணான கண்ணே' நடிகை

பார்வையாளர்களின் பரப்பைக் கடுமையாகக் குறைக்கக் கூடிய,  அதன் மூலம் கடுமையாகப் பாதிக்கும் விதமாக டிஆர்பி ரேட்டிங் அடிவாங்கக் கூடிய இந்த நகர்வை எவ்வாறு எதிர்கொள்வதெனத் திகைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது தொலைக்காட்சித் துறை.

தொழில்நுட்பங்களால் வசதியும் இருக்கிறது, ஆபத்தும் இருக்கிறது. சிலருக்கு வசதி, சிலருக்கு பாதிப்பு. இப்போது சின்னத் திரைத் தொடர்களின் வழியே இரண்டும்.

Tags : whatsapp TV serials Social media
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT