செய்திகள்

'நான் ஏன் தாலி அணிவதில்லை?' - 'குக் வித் கோமாளி' கனி சொல்லும் அதிரடி காரணம்

4th Aug 2021 03:14 PM

ADVERTISEMENT

நான் ஏன் தாலி அணிவதில்லை என்ற ரசிகர்களின் கேள்விக்கு குக் வித் கோமாளி புகழ் கனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். 

இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள் கனி, தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன் பிறகு 'தீராத விளையாட்டுப் பிள்ளை' இயக்குநர்
திருவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உளளனர். 

இதையும் படிக்க | திருமண விடியோவை பகிர்ந்த சன் டிவி நடிகை 

ADVERTISEMENT

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது வெகு இயல்பான
நடவடிக்கைகளால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார். இதனையடுத்து தியேட்டர் டி என்ற யூடியூப் பக்கம் மூலம் பொன்னியின் செல்வன் புதினத்தை கதையாக கூறி வருகிறார். மேலும் அவ்வப்போது சமையல் விடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தான் ஏன் தாலி அணிவதில்லை
என அவரிடம் சிலர் அடிக்கடி கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, ''தாலி என்பது தமிழ் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்று. இடையில் புகுத்தப்பட்ட ஒன்று என நான் நம்புகிறேன்.

இதையும் படிக்க | அசுரன் படத்துக்குப் பிறகு தனுஷூடன் மீண்டும் இணையும் நடிகர் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்

மதிப்புக்குரியவர்கள் முன்னிலையில் இவன் என் துணை, இவள் என் இணை எனக் கூறி மாலை மாற்றி இணைந்து வாழ்வது தான் தமிழ் மரபு என நான் கருதுகிறேன். ஆனால் நான் தாலிக்கட்டித் தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் 3 மாதங்களுக்கு பிறகு தாலி மாற்றிக் கட்டும்போது என் கணவர் கட்டாமல் வேறு யாரோ உறவினர்கள் கட்டினார்கள். எனக்கு என் கணவன் கட்டாதது உறுத்தலாக இருந்தது. வேறு யாரோ கட்டிய தாலி தானே என்ற உணர்வு ஏற்பட்டது. 

நீங்கள் எல்லாம் கணவர் கட்டிய அந்தத் தாலியை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா என எனக்குத் தெரியாது.  ஆனால் என் கணவர் கட்டிய தாலியை உயிர் போன்று பத்திரமாக வைத்திருக்கிறேன். தாலி மாட்டிக்கொள்வது என்பது ஒருத்தருடைய கல்யாண வாழ்க்கையை நிர்ணயிக்கப்போவது இல்லை. என் கணவருடன், 8 வருட காதல் வாழ்க்கை, 12 வருட திருமண வாழ்க்கை என 20 வருடம் குழந்தைகளுடன் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அது தான் என் திருமணத்துக்கான அடையாளம் என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் தாலி போடுவது இல்லை. இது தான் என் நிலைப்பாடு'' என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT