செய்திகள்

எஸ்.பி.பி.யுடன் 52 நாள்கள்: மருத்துவரின் உருக்கமான பதிவு

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம் - செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன், இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார். எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவர் கூறியதாவது:

ஜூலை மாத இறுதியில் சரணுடன் இன்ஸ்டகிராமில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வேலைக்காக எஸ்.பி.பி. ஹைதராபாத்துக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார். தற்போதைய சூழலினால் இதைக் கேட்டு உடனடியாக நான் கவலையடைந்தேன். ஆகஸ்ட் 3 அன்று, எஸ்.பி.பி. சார் எனக்கு போன் செய்தார். காய்ச்சல் இருப்பதாகக் கூறினார். கரோனா பரிசோதனை செய்தோம். துரதிர்ஷ்டவசமாக கரோனா இருப்பது அதில் உறுதியானது. 

அவர் வயதைக் கருதி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இங்கு எழுத விரும்பவில்லை. கடந்த இரு மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன். 

கடந்த 5 வருடங்களாக எஸ்.பி.பி.யை எனக்குத் தெரியும். ஒருமுறை கூட தன்னைப் பிரபலம் போன்று நடத்தவேண்டும் என அவர் விரும்பியதில்லை. ஒரு பிரபலம் போல அவர் நடந்துகொண்டதும் இல்லை. என்னைச் சந்திக்க அவர் எப்போது வர விரும்பினாலும் எனது செயலாளரை அனுப்பி அவரை அழைத்து வரச் சொல்வேன். அதன்மூலம் கூட்டத்தில் அவர் மாட்டிக்கொள்ளவேண்டியதில்லை என்பதால். ஆனால், என்னை மற்ற நோயாளிகள் போல நடத்துங்கள். எனக்கு விசேஷமாக எதுவும் வேண்டாம் என்பார். 

எங்கள் மருத்துவமனை விழாவுக்கு அவரை அழைத்தோம். அழைப்பிதழில் அவர் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ என போட்டபோது, என் பெயரை எஸ்.பி.பி. என்று மட்டும் போட்டால் போதுமே என்றார். 

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு அதிகப் பிராண வாயு தேவைப்பட்டது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டியிருந்தது. இதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என எண்ணினேன். தீபக், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள் என்றார். தீவிர சிகிச்சைப் பிரிவில் மூச்சுக் குழலுக்கு குழாய் செலுத்தும்வரை பலமுறை வீடியோ அழைப்பின் மூலம் என்னிடம் பேசினார். சிறந்த மருத்துவர்களின் கையில் தான் இருப்பதாகவும் எது தேவையோ அதைச் செய்யுங்கள் என்று சிகிச்சைக்கு முன்பு சொன்னார். 

அவருக்கு நினைவு திரும்பிய பிறகு அவருக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் எங்களுக்குக் குறிப்புகள் எழுதுவார். அந்தக் குறிப்பில் ஒவ்வொரு முறையும், உங்கள் அனைவருக்கும் என் மரியாதையுடன் என்றுதான் ஆரம்பிப்பார். சிகிச்சையின்போது அனைத்து மருத்துவர்கள், ஊழியர்களை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். அவர் இறப்பதற்கு சில நாள்கள் முன்பு வரை தினமும் 20 நிமிடம் எழுப்பி உட்கார வைப்போம். ஆனால் கடைசி 48 மணி நேரங்களில் எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. 

அவரைப் பார்த்துக்கொள்ள என்னைத் தேர்ந்தெடுத்தது என் வாழ்க்கையின் மிகச்சிறப்பான தருணங்களாகும். என்னால் முடிந்தவரை அவருடன் அதிக நேரங்கள் செலவிட்டேன். அவரைப் பார்த்துக்கொண்ட மருத்துவர்களை ஒன்றிணைத்தார். இதனால் ஐந்து மருத்துவர்களும் மிகவும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். 

அவருடைய மகன் சரண் எனக்கு நல்ல சகோதரர் ஆகிவிட்டார். தினமும் போனில் எஸ்.பி.பி. உடல்நிலை பற்றி பேசிக்கொள்வோம். இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொள்வோம். இதனால் நாங்கள் மிகவும் நெருக்கமானோம். சரண், அவர் அம்மா மற்று அவருடைய குடும்பத்தினருக்காக நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். 

உள்ளிருந்து தன்னடக்கத்துடனும் வலுவாகவும் எப்படி இருக்கவேண்டும் என்பதை எனக்கு எஸ்.பி.பி. கற்றுக்கொடுத்துள்ளார். போராளியாக இருந்து கடைசிவரை போராடினார். எஸ்.பி.பி. மிகவும் அருமையான மனிதர். உண்மையான சகாப்தம். தனது குரலாலும் பாடல்களாலும் நம்மிடம் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று உருக்கமாகத் தனது எண்ணங்களைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT