செய்திகள்

பிரபல நடிகை தீபிகா படுகோனின் மேலாளருக்கு அழைப்பாணை அனுப்பிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு

22nd Sep 2020 02:58 PM

ADVERTISEMENT

 

நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில், போதைப் பொருள் கோணத்தில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி), பிரபல நடிகை தீபிகா படுகோனின் மேலாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதேவேளையில் சுசாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இதற்கிடையே நடிகை ரியாவுக்குப் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவரின் செல்லிடப்பேசி உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக என்சிபி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். பிறகு அவர் கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில், சுசாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா, அவருடைய சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தி, சுசாந்த்தின் மேலாளா், வீட்டு உதவியாளா் உள்பட 12-க்கும் மேற்பட்டவா்களை என்.சி.பி. இதுவரை கைது செய்துள்ளது.

போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதில் பாலிவுட் திரையுலகினருக்கு தொடா்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்ததைத் தொடா்ந்து, நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. போதைப் பொருள் விற்பனையின் பின்னணியில் உள்ள கும்பலை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் திரையுலகைச் சோ்ந்த பலருக்கும் தொடா்பிருப்பதாக அறியப்பட்டுள்ளதால் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அதைத் தொடா்ந்து, பாலிவுட் நடிகா்கள், நடிகைகள், திரைக்கலைஞா்கள் மீதான கண்காணிப்பை போலீஸாா் தீவிரமாக்கியுள்ளனா். இது பாலிவுட் கலைஞா்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் தொடர்பான இந்த வழக்கு விசாரணைக்காக நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் போதைப் பொருள் விவகாரம் குறித்த விசாரணைக்காகப் பிரபல நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அழைப்பாணை அனுப்பியுள்ளது. வாட்சப் உரையாடலில் கிடைத்த தகவலின்படி, போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பாக கரிஷ்மாவுக்குத் தொடர்பு இருப்பதாக அறியப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags : Deepika Padukone NCB
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT