செய்திகள்

பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கரோனா

16th Sep 2020 05:35 PM

ADVERTISEMENT

 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்கள் இயக்கியுள்ள மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

1972-ல் தனது முதல் தெலுங்குப் படத்தை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், அடுத்த இரு வருடங்கள் கழித்து திக்கற்ற பார்வதி என்கிற தமிழ்ப் படத்தை இயக்கினார். சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதை அப்படம் பெற்றது. 1987-ல் கமல் நடிப்பில் இயக்கிய பேசும் படம் சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. கமல் நடிப்பில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கினார். 

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் சிங்கீதம் சீனிவாச ராவ் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

செப்டம்பர் 9 அன்று லேசான அறிகுறிகளுடன் கரோனாவால் பாதிக்கப்பட்டேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இரு வாரத் தனிமைப்படுத்துதல் காலம் செப்டம்பர் 22 அன்று முடிவடைகிறது. 65 வயது ஆகிவிட்டதால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. நான் நலமாக உள்ளேன். 

என்னுடைய பிறந்த நாளுக்காகப் பத்திரிகையாளர்கள் பலரும் போன் செய்துள்ளார்கள். ஆனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் யாரிடமும் பேச முடியவில்லை. என் வீட்டில் உள்ள ஓர் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். திரைப்படத்துக்கான கதைகள் எழுதி என்னுடைய நேரத்தைச் செலவிடுகிறேன். கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். நான் கவனமாக இருந்தும் எனக்கு கரோனா வந்துவிட்டது. நான் நலமாக உள்ளேன். விரைவில் குணமாகிவிடுவேன் என்று கூறியுள்ளார். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT