செய்திகள்

நடிகர் சூர்யாவிடம் கல்வி நிதியுதவி கோரி 3,000 பேர் விண்ணப்பம்

14th Sep 2020 01:20 PM

ADVERTISEMENT

 

கரோனா காலக் கல்வி நிதியுதவி கோரி சூர்யாவிடம் 3,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. 

ADVERTISEMENT

சூரரைப் போற்று படம், அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று சூர்யா சமீபத்தில் அறிவித்தார். சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாகவும் அவர் கூறினார். 

ரூ. 5 கோடியில் ரூ. 1.50 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு அளித்துள்ளார் சூர்யா. 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமும் சேவையும் செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்கள் மற்றும் கரோனா காலத்தில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், மயானப் பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு  ரூ. 2.5 கோடி ஊக்கத்தொகை வழங்க சூர்யா முடிவு செய்துள்ளார். 

ரூ. 1.50 கோடியைத் திரையுலகச் சங்கங்களுக்கு அளித்த நிலையில் திரையுலக அமைப்புகளில் உறுப்பினர்களாக அல்லாத, திரையுலக விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்கத் தொழிலாளர்கள் மற்றும் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்கு ரூ. 10,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சூர்யாவிடம் கரோனா காலக் கல்வி உதவி கோரி இதுவரை 3030 பேர் விண்ணப்பம் செய்துள்ளார்கள். இத்தகவலை சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ஒருவர் படித்தால் அந்த வீடு மாறும். ஒவ்வொருவரும் படித்தால் அந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் பல மாணவர்கள் தங்கள் கல்வியைக் கைவிட்டுள்ளார்கள். நாம் நினைத்தால் அதை மாற்ற முடியும் என்று கூறியுள்ளார். 

Tags : Suriya corona warriors
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT