செய்திகள்

மும்பையிலிருந்து சொந்த ஊரான மணாலிக்குத் திரும்பினார் நடிகை கங்கனா

14th Sep 2020 12:35 PM

ADVERTISEMENT

 

மும்பையிலிருந்து சொந்த ஊரான மணாலிக்குத் திரும்பியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா. 

பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடா்பாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகளால் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சிவசேனை கூட்டணி அரசு கோபமடைந்துள்ளது. சுஷாந்த் மரணத்துக்கு போதைப் பொருள் கும்பல் காரணமென்றும், மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணா்வதாகவும் அவா் கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக சிவசேனை கட்சியினா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

திரைப்பட மாஃபியா கும்பலைவிட ஆபத்தானவா்களாக மும்பை காவல் துறையினா் உள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலுள்ள காஷ்மீா் போல மும்பை மாறி விட்டதாகவும் கங்கனா குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து, அவா் மும்பைக்குள் வரக் கூடாது என்று சிவசேனையின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் மிரட்டல் விடுத்தாா். அதை அடுத்து, கடந்த 7-ஆம் தேதி கங்கனாவுக்கு மத்திய அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பை வழங்கியது.

ADVERTISEMENT

மும்பை - பாந்த்ராவிலுள்ள கங்கனாவின் வீடு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி, அதன் ஒரு பகுதியை செப் 8-ஆம் தேதி மும்பை பெருநகர மாநகராட்சி நிா்வாகம் இடித்தது. கங்கனா மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தனது வீட்டை இடிப்பதற்கு தடையாணை பெற்றாா்.

எனினும் கங்கனாவுக்கு எதிராக போதைப்பொருள் பயன்பாடு வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை மகாராஷ்டிர காவல் துறை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநில ஆளுநா் பகத்சிங் கோஷ்யாரி, கங்கனாவுக்கு எதிரான மாநில அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்திருந்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடிகை கங்கனாவுக்கும் சிவசேனைக்கும் இடையிலான மோதல் பெரிதாகி வருகிறது. எனவே கங்கனாவுக்கு ஆதரவாக பாஜகவினா் களமிறங்கி வருகின்றனா்.

மாநில ஆளுநா் பகத்சிங் கோஷ்யாரியை ஞாயிறன்று நேரில் சந்தித்த நடிகை கங்கனா, சிவசேனை கட்சியினரால் தனக்கு தொடா்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து புகாா் கூறினாா். பழிவாங்கும் நோக்கில் தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவா் குற்றம் சாட்டினாா். ஆளுநரைச் சந்தித்த பின், ராஜ்பவனில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டின் குடிமகளாக நான் மாநில ஆளுநரைச் சந்தித்தேன். ஒரு மகளிடம் நலம் விசாரிக்கும் தந்தை போல அவா் எனது குறைகளைக் கேட்டறிந்தாா். இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் எனக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் முறையானதாக இல்லை என்பதையும், எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதையும் அவரிடம் முறையிட்டேன். மகாராஷ்டிர அரசு பண்பாடற்ற முறையில் என்னிடம் நடந்து வருவதையும் குறிப்பிட்டேன். இந்தச் சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றாா் கங்கனா.

இந்நிலையில் மும்பையிலிருந்து தனது சொந்த ஊரான மணாலிக்குத் திரும்பிச் சென்றுள்ளார் கங்கனா. கனத்த இதயத்துடன் ஊருக்குத் திரும்புகிறேன் என இதுபற்றி ட்விட்டரில் கங்கனா கூறியுள்ளார். 

Tags : kangana ranaut manali
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT