போதைப் பொருள் கடத்தல்காராரிடமிருந்து போதைப் பொருள் வாங்கியதன் காரணமாக நடிகை ரியாவின் சகோதரர் மற்றும் மறைந்த நடிகர் சுசாந்த் சிங்கின் மேலாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
சுசாந்தின் காதலி நடிகை ரியாவுக்கு இந்த மரணத்தில் தொடா்பு இருக்க வாய்ப்புள்ளதாக பிகாா் காவல்துறையிடம் சுஷாந்தின் தந்தை புகாா் தெரிவித்தாா். அதனடிப்படையில் ரியா மீது பிகாா் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் இந்த வழக்கு தொடா்பான விசாரணையை இப்போது சிபிஐ மேற்கொண்டுவருகிறது.
ரியாவிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, அவா் மீது என்.சி.பி. சாா்பிலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போதைப் பொருள் வழக்கில், மும்பையைச் சோ்ந்த போதைப் பொருள் கடத்தல்காரா்கள் சையது விலாட்ரா (21), அப்தெல் பாசித் பரிஹாா் ஆகிய இருவரை என்.சி.பி. கைது செய்துள்ளது. பரிஹாரை செப்.9 வரை என்சிபி காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகா் சுசாந்த் சிங் தற்கொலை வழக்கில் மாபெரும் போதைப் பொருள் சா்ச்சையும் எழுந்திருக்கும் நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் நடிகை ரியா மற்றும் சிலரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா்.
ரியா மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளா் வீடுகளில் என்.சி.பி. அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையை மேற்கொண்டனா். இதுகுறித்து என்.சி.பி. மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த வழக்கில் ரியாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருக்கும் அவருடைய சகோதரா் ஷோவிக்குக்கும் தொடா்பிருப்பதன் அடிப்படையில், அவா்களின் வீட்டில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை தீவிர சோதனை நடத்தினா். சுசாந்த்தின் மேலாளா் சாமுவேல் மிராண்டா வீட்டிலும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். வழக்கில் கூடுதல் தகவல்களை சேகரிக்கும் வகையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைக்குப் பின்னா் என்.சி.பி. அதிகாரிகள் முன்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஷோவிக், மிராண்டா இருவருக்கும் சம்மன் அளிக்கப்பட்டது’ என்றாா்.
இந்நிலையில் போதைப் பொருள் விவகாரத்தில் ரியாவின் சகோதரர் ஷோவிக்கும் சுசாந்த் சிங் மேலாளர் சாமுவேல் மிராண்டாவும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அப்தெல் பாசித் பரிஹாரிடம் போதைப் பொருள்களை வாங்கியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.