செய்திகள்

விஜய் சேதுபதியிடம் கோரிக்கை வைத்தது தவறா?: இயக்குநர் சீனு ராமசாமி

28th Oct 2020 01:59 PM

ADVERTISEMENT

 

தனக்கு விடுவிக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் தன்னுடைய ட்வீட்டுக்கான விளக்கம் குறித்தும் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

2007-ல் கூடல் நகர் என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் சீனு ராமசாமி. அவர் அடுத்து இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் என சீனு ராமசாமி இயக்கிய நான்கு படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய இரு படங்களும் இன்னும் வெளியாகவில்லை.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக சீனு ராமசாமி இன்று ட்வீட் செய்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவவேண்டும். அவசரம் என்றார். 

இந்நிலையில் தன்னுடைய ட்வீட் குறித்து செய்தியாளர்களிடம் சீனு ராமசாமி கூறியதாவது:

எனக்கு அரசியல் சினிமா தெரிந்த அளவுக்கு சினிமா அரசியல் தெரியவில்லை. 

முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என எதிர்ப்புகள் உருவாகி வந்த சூழலில் நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனது கருத்துகளை விஜய் சேதுபதியிடம் தனிப்பட்ட முறையில் எடுத்துச் சொன்னேன். பொதுவெளியிலும் சொன்னேன். ஒரு பகுதி தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொள்ளக் கூடாது என்றும் விஜய் சேதுபதி நலனுக்காகவும் என் கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தினேன். ஆனால் விஜய் சேதுபதிக்கு எதிராக நான் உள்ளதாகச் செய்திகள் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. 

800 பட விவகாரம் தொடர்பாக முரளிதரனின் அறிக்கையை வெளியிட்டு நன்றி வணக்கம் என்று கூறினார் விஜய் சேதுபதி. இதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்டேன். ஆரம்பத்தில் படத்தின் கதை பிடித்துதான் நடிக்கச் சம்மதித்தேன். ஒரு நல்ல கதாபாத்திரம், உலகம் முழுக்கச் செல்லும் தன்மையுடையது என்பதால் தான் அதைத் தேர்வு செய்தேன். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது, அதில் அரசியல் விமர்சனங்கள் உள்ளது, தமிழர்களைப் புண்படுத்துவது போல உள்ளது என்று தெரிந்துகொண்டேன். இந்தச் சூழலில் என்ன செய்வது எனத் தெரியாமல் நான் நின்றுகொண்டிருந்தபோது, தயாரிப்பு நிறுவனமே இதைப் புரிந்துகொண்டு அவர்கள் விலகிப் போனார்கள். இதனால் நன்றி வணக்கம் என ட்வீட் செய்தேன் என விளக்கம் கொடுத்தார். பிறகு அவரை நான் நேரில் சந்தித்துப் பேசினேன். அவர்கள் அலுவலக பூஜைக்குக்கூட நான் சென்று வந்தேன். ஆனால் நான் ஏதோ விஜய் சேதுபதிக்கு எதிராகக் கருத்து கூறியதாக நள்ளிரவுகளில் வாட்சப்களில் எனக்கு அழைப்பு வந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து மெசேஜ் மூலமாகவும் என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். எதற்காக இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 

நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ள நிலையில் தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் எனக்குப் பதற்றம் ஏற்பட்டது. அதைத் தெரியப்படுத்தவே ட்வீட் செய்தேன். கெட்ட வார்த்தைகளிலும் ஆபாச வார்த்தைகளிலும் பேசுகிறார்கள். எல்லோரையும் போல நானும் விஜய் சேதுபதியிடம் கோரிக்கை தான் வைத்தேன். இது தவறா? எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே பகையை உருவாக்கி சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். காவல்துறையினரிடம் இதுகுறித்து புகார் அளிக்கவுள்ளேன் என்றார்.

Tags : Cinema Seenu Ramasamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT