செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை!

டி.குமாா்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், பார்வையாளர்களுடனும் கமல் ஹாசன் பேசுவார். இந்த நேரத்தில் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்துவது போன்று சில அரசியல் நெடி கலந்த பிரசாரங்களைச் செய்யவும் அவர் தவறியதில்லை.

தண்ணீர் சிக்கனம், எரிவாயு சிக்கனம், மரம் வளர்த்தல் உள்ளிட்ட ஏராளமான சமூக அக்கறையான விஷயங்களை செய்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை வார இறுதி நாள்களில் நிகழ்ச்சிக்கு வரும் கமலஹாசன், தான் படித்த புத்தகங்கள், தனக்கு நண்பர்கள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

இதுவரை 4 புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். முதலாவதாக பிரெஞ்ச் புத்தகமான பேண்டமிக் (கொள்ளை நோய்) என்ற நூலை அறிமுகப்படுத்தி, தற்போதுள்ள கரோனா காலக்கட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல் என்றார். இது தமிழில் கொள்ளை நோய் என்ற பெயரில் வெளிவந்துள்ளதாகவும் கூறினார்.

இதேபோல அடுத்தடுத்த வாரங்களில், சதத் ஹசன் மண்டோவின் அவமானம், ஜெயமோகனின் வெண்முரசு, ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி உள்ளிட்ட நூல்களை அறிமுகப்படுத்தி பேசினார். குறிப்பாக மண்டோவின் அவமானம் குறித்து பேசுகையில், மண்டோவின் கதைகளின் தாக்கம் தனது ஹேராம் படத்துக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்தார். மஹாபாரதத்தை நவீன சமூகத்துடன் ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதிய  வெண்முரசு 25 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட 26 நூல்களாக வெளிவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளாகும் இதுபோன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், கமல் ஹாசன் போன்ற நடிகர்கள் புத்தகங்கள் குறித்து பேசி, மற்றவர்களையும் வாசிக்கக் கூறுவதால் இளைய சமூகத்தினரிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வேடியப்பன் முனுசாமி இதுபற்றி ஃபேஸ்புக்கில் எழுதியதாவது: 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயமோகனின் அறம் மற்றும் தொ.ப வின் அறியப்படாத தமிழகம் போன்ற புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சியில் கமல் பேசியபோது விடிவதற்குள் டிஸ்கவரி இணைய தளத்தில் கிட்டத்தட்ட 50 பேர் வரை ஆர்டர் செய்திருந்தனர். ஆச்சர்யமாக இருந்தது. நேற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் குறித்து, கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து பேசியுள்ளார். இன்று காலை விடிவதற்குள் சரியாக 12 ஆர்டர்கள் வந்துள்ளன. இதில் 6 பேர் அமேசான் மூலமும், 5 பேர்  நேரடியாக வாட்சப் மூலமும் ஆர்டர் செய்துள்ளனர். ஒருவர் மட்டும் எமது டிஸ்கவரி இணைய தளம் மூலமும் வாங்கியுள்ளனர் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT